கடல் அரிப்பினை கட்டுப்படுத்துமாறு ஒலுவில் மக்கள் அமைதிப் பேரணி - படங்கள்

செய்தியாளர்கள்: எம்.எல்.பைசால் காஷிபி,றிசாத் ஏ காதர்,எம்.வை.அமீர்–
படங்கள்: அலுவலக செய்தியாளர்-
ட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்பினத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமையினைக் கண்டித்தும், கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர், ஒலுவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.

ஒலுவில் பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டப் பேரணியில், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பொது அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட மக்கள், மீனவர்கள், நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஒலுவில் பெரிய பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையில் ஈடுபட்ட பின்னர் ஒன்று கூடியோர், சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவாறு, கடலரிப்பினால் அழிவடைந்த பகுதிக்கு பேரணியாகச் சென்றனர்.

ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக் காரணமாக, கரையை அண்டியிருந்த பல நூறு மீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கியுள்ளது. இதேவேளை, கடற்கரையை அண்டியிருந்த நூற்றுக் கணக்கான ஏக்கர் தென்னந் தோட்டங்களும் முற்றாக அழிவடைந்துள்ளன.

மேலும், ஒலுவில் பிரதேசத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டுவந்த மீனவர்களும் தமது தொழிலை மேற்கொள்ள முடியாததொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆயினும், கடலரிப்பினை கட்டுப்படுத்துவத்குப் பொருத்தமான நடவடிக்கைகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

அவ்வப்போது, கடலினுள்ளும் – கரையிலும் கடலரிப்பினைத் தடுக்கும் நோக்குடன் பாராங்கற்கள் போடப்பட்ட போதிலும், கடலரிப்பின் தீவிரம் குறையவில்லை என்றும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையிலேயே, இன்று – இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

இதனையடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், உதவிப் பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜிடம் ஜனாதிபதிக்கு விலாசமிடப்பட்ட மகஜரொன்றினைக் கையளித்தனர். இந்த மகஜரில் ஒலுவில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஒப்பமிட்டுள்ளார்.

‘ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணியால் ஏற்பட்ட கடலரிப்பைத் தடை செய்யக் கோரும், அமைதிப் பேரணி’ எனும் தலைப்பிடப்பட்ட அந்த மகஜரில் நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

01) ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணியினால் ஏற்பட்ட கடலரிப்பினை நிரந்தரமாக நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும்.

02) மீனவர்களின் தொடர்ச்சியான தொழிலை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் கடலரிப்பினை தடுப்பதோடு, அவர்களுக்கான நிவாரணம் வழங்கப்படவும் வேண்டும்.

03) அவ்வப்போது ஏற்படும் கடலரிப்பினை தடைசெய்ய மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஆய்வறிக்கையுமற்ற, சாத்தியப்பாடற்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டு, உறுதி செய்யப்பட்ட நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

04) ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினால் பாதிப்புற்ற பொதுமக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், காலம் தாழ்த்தாது உடனடி தீர்வை வழங்கும் பொருட்டு, சுயாதீனமான ஆணைக்குழுவை நிறுவ வேண்டும்.

ஆகியவையே அந்த 04 கோரிக்கைகளுமாகும்.

இந்த மகஜரில் பிரதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, துறைமுக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, மீன்பிடி நீர்வள அமைச்சர் மஹிந்த அமரவீர, நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரஊப் ஹக்கீம், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் பின்வரும் சுலோகங்களுடன் காட்சி தந்ததை காணக் கூடியதாக இருந்தது.
  • அரசே ஊரை காவு கொள்ளும் கடல் அரிப்பை நிறுத்து.
  • அரசே துறைமுக அபிவிருத்தி கடல் அரிப்பா.
  • அரசே ஒலுவில் கிராமத்திற்கு நிரந்தர தீர்வை கொடு.
  • அரசே அழகிய ஒலுவிலை அழிவில் இருந்து காப்பாற்று.
  • அரசே துறைமுக அபிவிருத்தியால் ஏற்பட்ட கடல் அரிப்பை நிறுத்து
  • அரசே இலங்கை தீவில் இருந்து ஒலுவில் ஒழிய வேண்டுமா.
  • அரசே ஒலுவில் மக்களின் கண்ணீரைத் துடை.
  • மீனவர் நிலங்களை மீட்டுத்தா.
  • வாழ்வாதாரத்தினை அழிக்கும் கடல் அரிப்பினை உடன் நிறுத்து.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -