கல்முனை மாநகர சபையினது ஆட்சிக்காலம் கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு வந்திருந்த போதிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் நீண்டகால நியமன ரீதியான கோரிக்கைகள் அனைத்தினையும் காலந்தாழ்த்தச் செய்துவிட்டு மாநகர ஆட்சி முடிவுக்கு வந்த கையோடு தனது அதிகாரத்தினை எல்லைமீறி பிரயோகித்து கல்முனை மாநகர எல்லைக்குள் 08 நூலக உதவியாளர் நியமனம் வழங்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஜனாதிபதி பிரதமர் மற்றும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஆகியோர்களின் கூட்டு முடிவின் காரணமாக உள்ளுராட்சி மன்றங்களின் ஆயுட்காலத்தினை நீடிப்பு செய்யாமல் நியாயமான தேர்தல் ஒன்றின் மூலம் மக்கள் பிரதிநிதிகளினை தேர்தெடுப்பதற்கான புதிய தேர்தல் முறைக்கு செல்வதற்காக இம்மாநகர சபையினது ஆயுட்காலமும் கடந்த 30 ம் திகதி முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாநகர மேயர் பிரதி மேயர் உறுப்பினர்களின் ஆட்சிக் காலப்பகுதியில் இவ்வாறான நியமனங்களினை வழங்குவதற்கு மாநகர ஆணையாளர் எவ்வித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை எனவும் சட்டபூர்வமாக மாநகர ஆணையாளருக்கு உள்ளுராட்சி மன்றத்தின் ஆட்சி அதிகாரம் வழங்கப்படாமல் இருக்கின்ற இவ்வேளையில் தனது அதிகாரத்தினை மக்களாட்சிக்கு எதிராக பிரயோகித்திருப்பது ஜனநாயகத்தனை மதிக்கின்ற பொதுமக்களுக்கு செய்கின்ற துரோகமாகும்.
சாய்ந்தமருது நற்பட்டிமுனை மருதமுனை கல்முனை ஆகிய நூலகங்களுக்கு தலா 02 ஊழியர்கள் வீதம் நியமித்திருப்பதாகவும் இச்செயற்பாடானது கல்முனை மாநகர சபையினை ஆட்சி செய்த முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சியாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் பிரதி நிதிகளுக்கு வெட்கித் தலைகுனியக்கூடியதொரு செயலாகும்.
ஜனாதிபதி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலினை எல்லை மீள் நிர்ணய பணி நிறைவுற்றதும் வட்டார மற்றும் விகிதாசார முறையிலான கலப்பு தேர்தல் அடுத்த வருட முற்பகுதியினிலயே நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக அறிவித்திருக்கின்ற இவ்வேளையில் தேர்தல் ஒன்றின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதற்கு முதல் மாநகர ஆணையாளர் நல்லாட்சி அரசினது கொள்கைகளினை சீர்குலைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது விடயத்தில் ஜனாதிபதி பிரதமர் மற்றும் பொறுப்பான உள்ளுராட்சி மகாண சபைகள் அமைச்சர் துரிதமாக செயற்பட்டு குறிப்பிட்ட மாநகர சபையின் அதிகார எல்லைமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் கல்முனை மாநகரத்தில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியினை எம்முறையிலேனும் தேர்தலினை விரைவாக நடாத்துவதன் மூலம் நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொது மக்கள் வேண்டி நிற்கின்றனர்.