இந்த ஆட்சிலும் முஸ்லிம்களுக்கு ஆபத்துதான்...!

எம்.ஐ.முபாறக்-

ரசியலில் மக்கள் செல்வாக்கை இழந்த அரசியல்வாதிகள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்குக் கையில் எடுக்கும் ஆயுதம்தான் இனவாதம்.பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளைக் குறி வைத்து சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இந்த இனவாதம் திருப்பிவிடப்படுகின்றது. இதனால் ஏற்படுகின்ற பேரழிவுகளின் ஊடாக அந்த வங்குரோத்து அரசியல்வாதிகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்றனர்.

இந்த மோசமான இனவாத அரசியல் இலங்கையில் நீண்ட காலமாக இருந்து வருகின்றது.இந்த அரசியல்வாதிகள் யுத்தத்தை அடிப்படையாக வைத்து தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாதத்தைத் தூண்டி ஒருபுறம் அரசியல் செய்தனர்.மறுபுறம்,முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்டியும் அரசியல் செய்கின்றனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் பல இனக் கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.சுமார் 100 வருடங்களுக்கு முன் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனக்ககலவரம்,2001 இல் இடம்பெற்ற மாவனெல்லை கலவரம் மற்றும் அளுத்கம கலவரம் போன்றவை முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இனக் கலவரங்களுள் சிலவாகும்.

அதேபோல்,தமிழ் மக்களுக்கு எதிராகவும் பல இனக் கலவரங்கள் பேரினவாதிகளால் நிகழ்த்தப்பட்டுள்ளன.ஜூலைக் கலவரம் அவற்றுள் முக்கியமானதாகும்.
இவ்வாறு இலங்கையின் வரலாற்று நெடுகிலும் பேரினவாத அரசியல்வாதிகள் தமிழ்-முஸ்லிம் மக்களைப் பே ரினவாதத்துக்குப் பலி கொடுத்தே தங்களது ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைத்து வந்துள்ளனர்.இந்த அரசியல் போக்குதான் இந்த நாடு பொருளாதாரத்தில் இன்னும் பின் நிற்பதற்கு காரணமாகும்.யுத்தம் முடிந்த பிறகும் இந்த இனவாதம் முடிந்துவிடவில்லை.

யுத்த வெற்றியால் உருவான மஹிந்தவின் ஆட்சி ஓரிரு வருடங்களில் ஆட்டங்காணத் தொடங்கியமைக்கு இந்த இனவாதப் போக்குதான் காரணம்.ஊழல்,மோசடி மற்றும் வாழ்க்கைச் செலவீன அதிகரிப்பு போன்ற காரணங்களால் மஹிந்தவின் மக்கள் செல்வாக்கு மெல்ல மெல்ல சரியத் தொடங்கியது.அதைச் சரி செய்வதற்கு அவர் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைக் கையில் எடுக்கத் தொடங்கினார்.

பொது பல சேனா போன்ற பேரினவாத அமைப்புகள் தோற்றம் பெற்று முஸ்லிம்களின் வர்த்தகம்,கல்வி மற்றும் மார்க்க விடயங்கள் என அனைத்தின் மீதும் தாக்குதல் நடத்தின. இறுதியில் அழுத்தகமவில் முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரம் ஒன்று நிகழ்த்தப்பட்டு முஸ்லிம்களின் சொத்துக்களும் உயிர்களும் அழிக்கப்பட்டன.

இதன் பிறகு ஒன்றிணைந்த தமிழர்களும் முஸ்லிம்களும் மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்தனர்.அத்தோடு,முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதம் ஒளிந்துவிடும் விடும் என்று முஸ்லிம்கள் நினைத்தனர்.ஆனால்,அது தாற்காலிகமானதுதான் என்பதை முஸ்லிம்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனர்.

பொது பல சேனாவுக்கு பதிலாக ''சிங்கவர்களின் இரத்தம்''என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவாகி அது நாடு பூராகவும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது.அதிகமான முஸ்லிம்களின் வீட்டுக் கதவுகளிலும்,சிங்களவர்களின் ஒட்டோக்களிலும் இனவாதப் பிரசார ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.இந்த ஸ்டிக்கர்கள் பொறிக்கப்பட்ட டி-சேர்ட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

நல்லாட்ச்சி என்று சொல்லப்படுகின்ற இந்த ஆடசியில்தான் இந்த அமைப்பு உருவானது.இது ஒரு பேரினவாத அமைப்பு என்று தெரிந்தும் கூட-பொது பல சேனாவுக்கு மாற்றீடாக புதிய வடிவில் உருவாகியுள்ள அமைப்பு என்று அறிந்தும் கூட இதைத் தடுப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த அமைப்பு அமைப்பு உருவானது முதல் முஸ்லிம்களுக்கு எதிராக பல இனவாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.கம்பொளையில் பள்ளிவாசலுக்கு எதிராகப் பிரச்சினை,தெஹிவளை பள்ளிவாசலுக்கு எதிராகப் பிரச்சினை என சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்றவண்ணமே உள்ளன.அவ்வப்போது ஞானசாரவும் வாயைத் திறக்கின்றார்.

மஹிந்தவின் ஆட்சியில் எவ்வாறு சிறிதாக தொடங்கி பெரிதாக வெடித்ததோ அதேபோல்தான் இப்போதும் சிறிதிதாக பிரச்சினைகள் தோன்றுகின்றன.மஹிந்தவின் ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்றால் மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் வேகமாக இருந்தமையும் இப்போது மெதுவாகச் சென்றுகொண்டிருப்பதும்தான்.

இந்த நோன்பு காலத்தில்கூட முஸ்லிம்களின் மார்க்க விடயங்கள் மோசமாக விமர்ச்சிக்கப்படுகின்றன.ஞானசாரகூட இந்த நோன்பு காலத்தில் முஸ்லிம்களின் மார்க்க நம்பிக்கைகளை விமர்சித்து வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு எதிராக எதைச் செய்தாலும் இந்த அரசும் பெரிதாகக் கண்டுகொள்ளாது என்ற நிலைமை இருப்பதுதான் இதற்கு காரணம்.இந்த இனவாத அமைப்புகளை முற்றாக ஒளித்துக் கட்டுவதற்கான சட்ட ஏற்பாடுகளை இந்த அரசு ஆரம்பத்தில் செய்திருக்க வேண்டும்.அது இந்த அரசு மீது முஸ்லிம்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும்.எதிர்காலப் பாதுகாப்புக்கான ஓர் உத்தரவாதமாக அமைந்திருக்கும்.

இன்று ,முஸ்லிம்களை பொறுத்தவரை பெரும்பான்மை இன அரசுகள் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.ஆட்சிக்காக மாத்திரம் சிறுபான்மை இன மக்கள் மீது அக்கறைபோல் காட்டுவதிலும் ஆட்சியைக் கைப்பற்றியதும் தங்களின் சுயரூபத்தைக் காட்டுவதிலும் இருந்து இந்த அரசுகூட வேறுப டவில்லை என்றே தெரிகின்றது.

மஹிந்தவின் ஆட்சியில் பொது பல சேனா முஸ்லிம்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்யத் தொடங்கியபோது அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்.அவர்கள் தானாக அடங்கிவிடுவார்கள் என சிலர் கூறினார்.ஆனால்,அதை முளையில் கிள்ளி எறியாததால் அவர்களின் பிரசாரம் மெல்ல மெல்ல வளர்ந்து இறுதியில் அழுத்கமவில் பெரும் கலவரமாக வெடித்தது.

இந்த அனுபவத்தைக் கவனத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிங்கள இரத்தம் என்ற இந்த பிரசாரத்தின் சூத்திரதாரிகள் யார் என்று கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.

மஹிந்த ஆட்சியில் இருந்ததைப் போல் இந்த ஆட்சியிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனமாகத்தான் இருக்கப் போகிறார்களா ?தமிழ்-சிங்கள அரசியல்வாதிகள்தான் அப்போதுபோல் இந்த அரசிலும் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்கப் போகிறார்களா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -