பிரபல றக்பீ வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களான, முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் குற்றப்பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்ற நிலையில், அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க சுகயீனம் அடைந்திருப்பதோடு அதுகுறித்த மருத்துவ அறிக்கையை மன்றில் தாக்கல் செய்யுமாறு கடந்த விசாரணையின்போது நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தடன், அவர் தற்போது ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். தாஜுடீன் கொலை விவகாரத்தில் ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வசீம் தாஜுடீன் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி கொழும்பு – நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்திற்கு அருகிலிருந்து எரிந்த நிலையில் காணப்பட்ட காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் விபத்து என்று அப்போது கூறப்பட்டிருந்த போதிலும், இது திட்டமிடப்பட்ட படுகொலை என்று இரகசிய பொலிஸார் அண்மையில் நீதிமன்றத்தில் தெரிவித்து, இதற்கான சி.சி.டி.வி காணொளி ஆதாரங்களையும் மன்றில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.