கம்பஹாவைச் சேர்ந்த வர்த்தகர்கள் கடையடைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இன்றைய தினம் (22) ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம், தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள பொருட்கள் சேவைகள் தொடர்பான வரி (Value Added Tax - VAT) அதிகரிப்பை தங்களால் சமாளிக்க முடியாது எனவும் இதனால் தங்கள் வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வற் வரியை நீக்கும் வரை குறித்த ஆர்ப்பாட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
11% ஆக இருந்த பொருட்கள் சேவைகள் வரி, கடந்த மே மாதம் 02 ஆம் திகதி முதல் 15% ஆக அதிகரிக்கப்பட்டிருந்ததோடு அத்தியவசிய பொருட்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள், நீர் விநியோகம், மின்சார விநியோகம் ஆகியவற்றுக்கு விலக்களிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வற் வரி அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஹர்த்தால் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. நாளை (23) மாத்தறை நகரிலும் இவ்வாறான ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.