வவுனியா ஈரட் பெரியகுளத்தில் சிங்கள மக்களுக்கு வீடுகள் - அமைச்சர் றிசாத் அடிக்கல்லை நாட்டினார்

வுனியா வடக்கு ஈரட்பெரிய குளத்தில் சிங்கள மக்களுக்கென அமைச்சர் றிசாத்தின் சொந்த முயற்சியினால் சுமார் 25 வீடுகள் கட்டப்படவுள்ளன. இதற்கான அடிக்கல்லை இன்று (02/06/2016) அந்தப் பிரதேசத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் நாட்டி வைத்தார். இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக, அமைச்சரின் வவுனியா இணைப்பாளர் முத்து முஹம்மத், பொதுசனத் தொடர்பு அதிகாரி மொஹிடீன் உட்பட பலர் பங்கேற்றனர். 

இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வின் பின்னர் வடமாகாண சபை உறுப்பினர் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கும் போது,,,,

யுத்தத்தால் வடக்குக், கிழக்கில் தமிழர்களும், முஸ்லிம்களும், சிங்களவர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ் பேசும் சமூகத்துக்கு நடந்த அழிவுகளைப்போல் வடக்கில் வாழ்ந்த குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு வெலி ஓயா பிரதேசத்தில் வாழ்ந்த சிங்கள மக்களும் வீடுகளை இழந்து இயல்பு வாழ்க்கையை தொலைத்து பல்வேறு இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். 

அவ்வாறான மக்களுக்கு சொந்த வீடில்லாத குறையை நிவர்த்திக்கும் நோக்கிலே அமைச்சர் றிசாத் பதியுதீன், தனது சுய முயற்சியில் வீடுகளைக் கட்டித்தருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த வீடுகளை இந்தப் பிரதேசத்துக்கு கொண்டு வருவதில் அமைச்சர் படுகின்ற பாட்டை நான் நன்கறிவேன். 

இனவாதிகள் அமைச்சர் றிசாத் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை தென்னிலைங்கையில் இருந்துகொண்டு சுமத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் அவரைப்பற்றி இல்லாத பொல்லாத பழிகளை கூறி வருகின்றனர். அவ்வாறானவர்கள் வவுனியா, வெலி ஓயா பிரதேசத்துக்கு வந்து அமைச்சர் றிசாத் மேற்கொண்டு வரும் பணிகளைப் பார்க்க வேண்டும் என நான் அழைப்பு விடுக்கின்றேன்.

நாங்கள் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதும் எங்களை அரவணைத்து அவர் பணி புரிகின்றார். அதனால்தான் அவரது கட்சியில் இணைந்து நான் மாகாண சபை உறுப்பினராக முடிந்தது. அத்துடன் கடந்த பொதுத் தேர்தலில் சிங்கள மக்கள் கணிசமான வாக்கை அவருக்கு வழங்கினர். வவுனியாவில் மட்டுமன்றி மன்னாரிலும் அவர் சிங்கள கம்மான பிரதேசத்தில் வீடுகளை அமைத்து வருகிறார். 

அத்துடன் சிங்கள மக்களுக்கும் மின்சாரம் மற்றும் இன்னோரன்ன வசதிகளை மேற்கொண்டு வருகின்றார். வடமாகாணத்தில் ஒரேஒரு கெபினட் அமைச்சர் என்ற வகையில் அவரை இட்டு நாம் பெருமை அடைகிறோம். 

வடமாகாணத்தில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனே முன்னின்று செயற்பட்டு வருகின்றார். இந்த மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட வேண்டுமென அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுத்த கோரிக்கைகளின் விளைவாகவும், அமைச்சரவைக்கு ஏனைய சில அமைச்சர்களுடன் இணைந்து சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கிணங்க சிங்கள், முஸ்லிம் மக்களுக்கு வடக்கில் 21663 வீடுகள் வழங்கப்படவுள்ளன இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -