வித்தியாவின் படுகொலை சம்பவம் தொடர்பில் உண்மைகளை அறிந்த பொதுமக்கள் சாட்சியாக வரவேண்டும் என ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் வை.எம்.எம்.றியால் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு பாடசாலை மாணவியின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரனை இன்றைய தினம் ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதிவான் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக நீதிவான் குறிப்பிட்டிருப்பதாவது,
இத்தகைய பாரதுரமான ஒர் சம்பவம் இடம்பெற்று விட்டது. ஆனால் அதற்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லையென கூறிக்கொண்டிருப்பதில் பயனேதும் இல்லை. இச்சம்பவம் தொடர்பில் உண்மை நிலமையை அறிந்தவர்கள் சாட்சியாக வரவேண்டும்.
இவ் வழக்கு விசாரணையானது ஒரு வருடத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே இதற்கு பொதுமக்களது ஒத்துழைப்பும் தேவை. சம்பவம் தொடர்பில் அறிந்தவர்கள் இருந்தால் நீங்களாகவே வந்து வாக்குமூலங்களை தெரிவிக்க முடியும்.
உங்களது பாதுகாப்பு தொடர்பில் நீதிமன்றமும் சட்டமும் உங்களுக்கு 100 வீதம் முழுமையான பாதுகாப்பை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் குற்றம் செய்யாதவர்கள் யாராவது இருந்தால் அவ்வாறு அவர்களை வைத்திருப்பதும் அநீதியாகும்.
எனவே சம்பவம் தொடர்பில் உண்மை அறிந்த பொதுமக்கள் உதவ வேண்டும். பொய் கூறுவதும் அநீதியாகும். அவ்வாறு பொய் கூறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இறைவனுடைய பாரதூரமாண தண்டனைகளுக்கு ஆளாக வேண்டிவரும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.