சலீம் றமீஸ்-
கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கல்விக்கு ஏற்படுத்தப்படும் அநியாயங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சரும் பொறுப்புக் கூற வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று தவிசாளர் திரு.சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்ற போது குச்சவெளிப் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் அமைக்கப்படவேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரனையை வழி மொழிந்து பேசிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்...
கிழக்கு மாகாண சபையின் 2008, 2012ம் ஆண்டுகளில் நடை பெற்ற தேர்தல்களில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் ஆளப்பட்டு வரும் கிழக்கு மாகாண சபையில் இதுவரை புதிய கல்வி வலயம் தொடர்பாக மூன்று பிரேரனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. முதலாவது முறையாக கடந்த 2010ம் ஆண்டில் பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் அமைப்பதற்கான தனிநபர் பிரேரனை சமர்ப்பிக்கப்பட்டு அதற்காக கிழக்கு மாகாண சபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது. 2015ம் ஆண்டிலும் கிழக்கு மாகாண சபை பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் அமைப்பதற்கான அனுமதியினை வழங்கியது. 2016ம் ஆண்டிலும் கிழக்கு மாகாண சபை பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் அமைப்பதற்கான அனுமதியினை வழங்கிய போதிலும் இதுவரை பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பான முன்னெடுப்புக்கள் கிழக்கு மாகாண சபையினாலும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சினாலும் முன்னெடுக்கப்படாமல் உள்ளது. இந்த செயற்பாடுகளினால் பொத்துவில் பிரதேச மக்கள் மாகாண சபை நடவடிக்கைகளில் நம்பிக்கை இழந்துள்ளனர். தங்களின் நியாயமான கோரிக்கையினை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்ற ஏக்கத்துடன் இப்பிரதேச மக்கள் உள்ளனர். பொத்துவில் உப – வலயப் பாடசாலைகளில் 60 ஆசிரியர்களின் வெற்றிடங்கள் நிலவுவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் இச்சபையில் உத்தியோகபூர்வமாக அறிவித்தும் இவ்வெற்றிடங்கள் இதுவரையும் நிரப்பபடாமல் உள்ளது.
பொத்துவில் பிரதேசத்திற்கான தனி வலயக் கல்வி காரியாலய கோரிக்கைக்கு தயவு செய்து இனச்சாயம் பூச வேண்டாம். அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து சுமார் 50முஆ தூரத்தில் அமைந்துள்ள பொத்துவில் பிரதேசத்தில் தனியான கல்வி வலயத்தினை அமைப்பதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண சபையும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.
பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் அமைக்கும் பொத்துவில் பிரதேச மக்களின் நியாயமான கோரிக்கையினை கிழக்கு மாகாணத்தில் புதிதாக கல்வி வலயங்கள் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளுடன் கலந்து வேறு காரணங்களை கூறாமல் பொத்துவில் பிரதேசத்திற்கான தனி கல்வி வலயத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
கடந்த 2015ம் ஆண்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரு.ராஜஸ்வரனால் கல்முனை மத்திய கல்வி வலயம் தொடர்பான பிரேரனை கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்பட்டது. 2016ல் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்பரினால் குச்சவெளிப் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பான பிரேரனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
குச்சவெளிப் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பாக சபையில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கருத்துக்கள் குச்சவெளிப் பிரதேசத்திற்கான கல்வி வலய கோரிக்கையின் உணர்வுகளை மட்டம் தட்டுவதாக அமைந்துள்ளது குறித்து நான் கவலை அடைகின்றேன். கிழக்கு மாகாணத்தில் வாழும் சகல இனமக்களின் அபிலாசைகளையும், எண்ணங்களையும், எதிர்பார்ப்புக்களையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கக் கூடிய வகையில் நமது கிழக்கு மாகாண சபை செயல்பட வேண்டும். தற்போது குச்சவெளி பிரதேசத்திற்கான கல்வி வலைய கோரிக்கையினை நீங்கள் நிராகரிக்கலாம் ஆனால் எதிர்காலத்தில் புல்மோட்டை, குச்சவெளிப்பிரதேசங்கள் நகரங்களாக மாறி தங்களுக்கான தனிவலயத்தினை கோரி நிற்கும் என்பதனை மறந்து விடாதீர்கள் கிழக்கு மாகாண சபையில் இதுவரை மூன்று தனியான கல்வி வலயம் அமைப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இவைகளை நடைமுறைப்படுத்துவற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
கல்வி அமைச்சரும், விவசாய அமைச்சரும் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்து அன்று ஆளும் கட்சியில் அமைச்சர்களாக இருந்த எங்களை நோக்கி ஆவேசமாக கேட்ட கேள்விகள் இன்னும் எங்களுக்கு நினைவு இருக்கின்றது. முன்னைய ஆட்சிக் காலத்தில் கடுமையான போக்காளர்கள் இருந்த போதிலும் முதலமைச்சராக, அமைச்சர்களாக ஆளும் கட்சியில் நாங்கள் பதவி வகித்த போதும் கிழக்கு மாகாண சபையில அன்றைய அரசினால் கொண்டு வரப்பட்ட பிரதேச சபை திருத்தச் சட்ட மூலம், அதே போன்று நாடு நகர அபிவிருத்தி திட்டங்களை கிழக்கு மாகாண சபையால் நிராகரித்து அனுப்பிய வரலாறு கிழக்கு மாகாண சபைக்கு உள்ளது.
கிழக்கு மாகாண அமைச்சர்கள் அதிகாரங்களையும், இறைமைகளையும் பாவிக்காமல் விட்டால் எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சபைக்கு உச்ச அதிகாரம் கிடைத்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலமை உருவாகும். வட மாகாண சபை எது எப்பிடியிருந்தாலும் வட மாகாண மக்களின் உணர்வுகளையும், அபிலாசைகளையும் முன்னிறுத்தி தீர்மானங்களை எடுத்து, அத்தீர்மானங்களை மத்திய அரசாங்கத்திற்கும், சர்வேதசத்திற்கும் அணுப்பியுள்ளது.
எனவே, கிழக்கு மாகாண சபை கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மூவின மக்களின் உணர்வுகளையும், எதிர்பார்ப்புகளையும் உணர்ந்து செயற்பட வேண்டும். மாகாண அமைச்சர்கள் கிழக்கு மாகாணத்தில் 03 மாவட்டங்களிலும் தங்களின் அமைச்சுக்குரிய அதிகாரங்களை பாவிக்க வேண்டும். அமைச்சர்களுக்குரிய அதிகாரங்களையும், ஆளுமைகளையும் வேறு நபர்கள் பாவிப்பதனால்தான் சில அமைச்சுக்களின் நிர்வாகங்கள் சீர்குழைந்து காணப்படுகின்றது.
இவ்வாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் அவர்கள். கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் அரசியல் பழிவாங்கல் நடைபெறவில்லை எனத் தெரிவித்தார். அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் குறித்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் முறையிட்ட போதும் அக்கறைப்பற்று வலயத்தில் உள்ள சிறந்த கல்விச் சேவைகள் புரிந்த அதிபர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கல்களை நாங்கள் ஆவணப்படுத்தி வைத்துள்ளோம் என்பதனை இச்சபைக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.
புதிய ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கிய போதும் இதுவரை முஸ்லிம் சமூகத்திற்குரிய காணிகளில் ஒரு அங்குல காணி கூட விடுவிக்கப்படாத நிலை தொடர்வதுடன் முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகள் கிழக்கு மாகாண சபையால் நிறைவேற்றப்படாத நிலமை குறித்து முஸ்லிம் சமூகம் வேதனை அடைந்த நிலையில் உள்ளது எனக் குறிப்பிட்டார்.