சுலைமான் றாபி-
இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேலதிக மாகாணப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.நிசார் அவர்களின் வழிகாட்டலின் கீழ், அக்கரைப்பற்று மேலதிக மாகாணப் பணிப்பாளர் அலுவலகப் பிரிவின் பிராந்திய அலுவலகங்களில் சேகரிக்கப்பட்ட நிதித்தொகை மூலம் கிடைக்கப் பெற்ற நிவாரணப் பொருட்கள் நேற்றைய முன் தினம் (21) மேலதிக மாகாணப் பணிப்பாளர் காரியாலய உத்தியோகத்தர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று வழங்கி வைக்கப்பட்டது.
இதில் மல்வானை, வெல்லம்பிட்டி, கொலன்னாவ மற்றும் அரநாயக்க உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதாக மேலதிக மாகாணப் பணிப்பாளர் அலுவலகத்தின் பதில் கணக்காளர் அமீர் முஹம்மட் தெரிவித்தார்.
இதேவேளை குறிப்பிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த சிரமங்களுடன் தற்காலிக முகாம்களிலும், தங்களது உறவினர் வீடுகளிலும் வசித்து வருவதோடு, அவர்களின் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இச்சிறிய முயற்சியொன்றின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான மனிதாபிமான உதவிகளை நிறைவேற்றியிருப்பதானது ஆத்ம திருப்தியளிப்பதோடு, இம்முயற்சி வெற்றியளிப்பதற்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கிய சகல உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேலதிக மாகாணப் பணிப்பாளர் ஏ.எல்.எம். நிசார் தெரிவித்தார்.