அண்மையில் காத்தான்குடி முதியோர் இல்லத்திற்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்கள் அங்கு காணப்பட்ட குறைகளைக் கேட்டறிந்ததுடன் அவற்றை உடனே நிவர்த்திக்கவும் முயற்சி செய்தார்.
இங்கு காணப்படும் முதியவர்கள் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இருந்து வந்தவர்கள் என்பதுடன் இவர்களில் அநேகமானோர் குடும்பத்தினால் கைவிடப்பட்ட நிலையில் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் இவர்களை counsling க்கு அழைத்துச் செல்வதில் முதியோர் இல்ல நிர்வாகம் பாரிய சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் அறிந்த பொறியியலாளர் ஷிப்லி பாரூக் உடனடியாக தனது தனிப்பட்ட வேண்டுகோளின் பேரில் உளநல மருத்துவ நிபுணர் மற்றும் தாதியர்களை முதியோர் இல்லத்திற்கு அழைத்து வந்து இவர்களுக்கான உளநல ஆலோசனைகளை அன்றைய தினமே வழங்கச் செய்தார்.
மேலும், மாதத்தில் இரு தடவைகள் உளநல மருத்துவ நிபுணர், வைத்தியர்கள், மற்றும் தாதியர்கள் முதியோர் இல்லத்திற்கே சென்று சேவையினை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய இருப்பதாகவும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் உறுதியளித்தார்.
முதியோர் இல்லத்தில் மீன் தொட்டி ஒன்றின் தேவைப்பாடு இருப்பதை அறிந்த பொறியியலாளர் ஷிப்லி பாரூக் உடனடியாக தன்னுடைய சொந்த நிதியில் மீன் தொட்டி ஒன்றைக் கொள்வனவு செய்து அன்பளிப்பாக வழங்கியதுடன் நகர சபை ஊளியர்களை வரவழைத்து சிரமதானத்திலும் ஈடுபட்டதோடு, இதற்கு மேலதிகமாக அன்றைய தினம் தன்னுடைய செலவில் முதியோர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்ததுடன் தானும் அந்த பகல் உணவில் கலந்து கொண்டார்.
இவ்வாறாக அன்றைய தினம் தனது பொழுதை முதியோர் இல்லத்தில் முதியவர்களுடன் கழித்த பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்கள் முதியவர்களிடம் அளவளாவி அவர்களின் குறைகளை கேட்டறிந்தது விசேட அம்சமாகும். அத்தோடு அங்குள்ள வயோதிபர்களின் உடைகளை துவைப்பதற்காக மாகாண சபை நிதியினூடாக சலவை இயந்திரம் ஒன்றை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.






