எக்வடோரில் ஏற்பட்ட மிகக்கடுமையான நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 233 பேர் உயிரிழந்துள்ளனர் என நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நெருக்கடி நிலையையும் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார். மிகவும் நெருக்கடியான சூழலில் அனைவரும் அமைதியுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட நாட்டின் வடமேற்கு கரையோரப் பிரதேசங்களில் இருந்து கூடுதல் தகவல்கள் வரும்போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
கடந்த நூறாண்டுகளில் 7.0 அளவுகொண்ட பல நிலநடுக்கங்களை எக்வடோர் எதிர்கொண்டுள்ளது என்றாலும், இந்த அளவுக்கு கடுமையான பாதிப்புகளை இப்போதுதான் நாடு எதிர்கொள்கிறது என அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மிகக்கடும் நிலநடுக்கத்தால் பாதிகப்பட்டுள்ள தென் அமெரிக்க நாடான எக்வடோரின் வடபகுதியிலுள்ள கரையோரப் பிரதேசங்களுக்கு 10,000 துருப்புக்கள் அனுப்பப்படுகின்றன.
கடந்த பல தசாப்தங்களில் இல்லாத வகையில் இந்த நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் பேருந்துகளில் ஆயிரக்கணக்கான பொலிஸார் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
நிலநடுக்கம் காரணமாக சேதமடைந்துள்ள பல பிரதான நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
நிலநடுக்கம் மையம்கொண்டிந்ருந்த பகுதிக்கு அருகிலுள்ள நகரான பெதர்னாலேவின் மேயர் தமது நகரம் முற்றாக அழிந்து போயுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தை அடுத்து, 130 பின்னதிர்வுகள் உணரப்பட்டன என நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
