முஸ்லிம் தலைவர்கள் விட்டுச் சென்ற பணியை தொட்டுச் செல்கின்றார் அமைச்சர் ரிஷாட் - ஏ.எச்.எம்.அஸ்வர்

சுஐப் எம் காசிம்-
தென்னிலங்கைத் தலைவர்களான மர்ஹூம்கள் சேர் மாக்கான் மாக்கார், டி பி ஜாயா, டொக்டர் கலீல், சேர் ராசிக் பரீத், டொக்டர் பதியுதீன் ஆகியோர் விட்டுச் சென்ற சமூகப் பணிகளை தொட்டுக் கொண்டு தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன். நமது முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்துள்ள பெருந்தலைவராக நான் அவரை இனங்காண்கின்றேன் என்று முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார். 

கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்த அரசியல் திட்ட வரைபு தொடர்பில் முன்னாள் முஸ்லிம் எம் பிக்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றிய அஸ்வர் ஹாஜியார் மேலும் கூறியதாவது,

சமூகத்தலைமை என்பதை எவரும் கேட்டுப் பெறவும் முடியாது, தட்டிப்பறிக்கவும் முடியாது. அது இறைவனால் வழங்கப்படுகின்ற பொக்கிஷம் என்பதை அனைவரும் மனதில் இருத்த வேண்டும். 

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் பணிகள் மெச்சத்தக்கது. முன்னாள் எம்பிக்களான எங்களையும் அழைத்து எங்கள் கருத்துக்களை உள்வாங்கி அந்தக் கட்சித் தயாரித்துள்ள வரைபை முழுமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு நாங்கள் பூரண ஆதரவளிப்போம். இந்த நாட்டிலே கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை மீண்டும் ஞாபகப்படுத்த நான் விரும்பவில்லை. 

சோல்பரி அரசியல் அமைப்பில் சிறுபான்மை மக்களுக்கு இருந்த வரப்பிரசாதங்களை இல்லாமலாக்கியதன் விளைவை நாம் இன்று அனுபவிக்கின்றோம். அந்த அரசியல் அமைப்பில் இரட்டைத் தொகுதி முறை, செனட் சபை, பிரிவி கவுன்சில் ஆகியவற்றை சோசலிசத் தலைவரென போற்றப்பட்ட டாக்டர் கால்வின் ஆர் டி சில்வா நீக்குவதற்கு வழிவகுத்து பின்னர் 1972 ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்பட்டது.

கடந்த கால யாப்புக்கள் சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் வழங்கவில்லை. 

முஸ்லிம் தலைவர்கள் கட்டியெழுப்பிய ஒற்றுமையை சீர் குலைப்பதற்கு நாம் அனுமதிக்கமுடியாது. மர்ஹூம் அஷ்ரப் கிழக்கில் தலைவிரித்தாடிய பயங்கரவாதத்திற்கு அஞ்சி தனது தாயை மருதமுனையில் ஒரு வீட்டில் பாதுகாப்பாக இருக்கவைத்து விட்டு ட்ரங் பெட்டியுடன் கொழும்புக்கு ஓடோடி வந்தவர். அவர் பின்னர் கட்சியமைத்து முஸ்லிம் சமூகத்திற்கு அளப்பரிய சேவைகளை செய்திருக்கின்றார். 

தான் சார்ந்த கட்சி ஓர் இனம் சார்ந்ததாக மட்டும் இருக்கக் கூடாது என்பதற்காக நுஆ கட்சியை உருவாக்கி இன நல்லுறவுக்கு வித்திட்ட பெருமகன். 

இன்று நாம் இழந்து தவிக்கின்ற பெரியார் எம் எச் மொஹம்மட் தமிழ் – சிங்கள உறவுக்கு பாலமாக திகழ்ந்தவர். பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட பொரளைத் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்ற பெருமை பெற்றவர். அவருடைய இழப்பை அடுத்து மங்கிச்செல்லும் தலைமைக்கு ரிஷாட் பதியுதீன் உரமூட்டுவாரென நான் நம்புகின்றேன்.

அகதி முகாமில் வாழ்ந்த ஒருவர் அமைச்சரவையில் இருப்பதென்றால் அது சாமானியக் காரியமல்ல. இறைவன் நாடினால் எதையும் தடுக்கமுடியாதென்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். 

ரிஷாட்டின் கட்சியில் இன்று திறன் பெற்ற புத்திஜீவிகள் இருப்பது நமக்குப் பலம். இந்த அணியில் நானும் இணைந்து கொள்ளக் கூடாதா என நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. எனினும் இருக்கும் இடத்திலேயே இருந்து கொள்ளுவோம் என்று என்னை சுதாகரித்துக் கொண்டு வருகிறேன் என்று அஸ்வர் கூறினார். 

இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதியமைச்சர் யு எல் எம் பாரூக், எம் எம் சுஹைர் எம் பி, சம்மாந்துறை நௌஷாட் எம் பி, டொக்டர் இல்யாஸ் எம் பி ஆகியோர் அரசியல் திட்ட வரைபு தொடர்பான தமது கருத்துக்களையும் அனுபவம் சார்ந்த தமது எண்ணப்பாடுகளையும் விளக்கினர். 

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசியல் திட்ட வரைபு தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். செயலாளர் நாயகம் சுபைர்தீன், மக்கள் காங்கிரஸின் அரசியல் விவகார சட்டப்பணிப்பாளர் ருஷ்தி ஹபீப், சர்வதேச ஆய்வாளர் ரவூப் செய்ன் ஆகியோரும் உரையாற்றினர். 

முன்னாள் பிரதியமைச்சர் சுந்தரமூர்த்தி அபூபக்கர் முன்னாள் எம்பிக்களான எஸ் எஸ் பி மஜீத், ஏ ச் அலவி, எம்பிக்களான, நவவி, அப்துல்லா மஹ்ரூப், ஆய்வாளர் எம் ஐ எம் மொஹிடீன், சட்டத்தரணி ஷஹீட் கலாநிதி அனீஸ், சிரேஷ்ட பத்திரிகையாளர் என் எம் அமீன் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் அஹமட் முனவ்வர் ஆகியோர் உட்பட பல முக்கியஸ்த்ர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர் ஹிசாம் நெறிப்படுத்தினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -