ந.குகதர்சன்-
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இலங்கை தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் நீர் வாழ் உயிரின வளர்ப்பு கைத்தொழில் வலய திட்டத்தினை நிறுத்தக்கோரி வாகரை பிரதேச வாவிக்கரையோர மக்களினால் பிரதேச செயலக முன்பாக கவனயீர்பு போராட்டம் ஒன்று செவ்வாய்கிழமை (29) மேற்கொள்ளப்பட்டது.
செவ்வாய்கிழமை மேற்படி திட்டம் அமுல்படுத்துவது தொடர்பாக வாகரை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுநாயகி தலைமையில் மாவட்ட உதவி அரசாங்க எஸ்.கிரிதரன், தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நிமால் சந்திரரெட்ண, கரையோர பேணல் திணைக்கள உத்தியோகத்தர்கள், வாகரைப் பொலிஸ் மற்றும் கடற்படை உத்தியோகத்தர்கள், வனஇலகா அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் நடைபெறவிருந்தது.
நடைபெற இருந்த இக்கூட்டத்தினை நடைபெற விடாது வாகரை பிரதேச வாவிக்கரையோர பொதுமக்கள் பிரதேச செயலக கதவைப் பூட்டி கோசங்களை எழுப்பி இத்திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டாம் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.
இதன்போது நல்லாட்சியே கவனத்தில் கொள், இயற்கையை பாதுகாத்தால் தான் இராதோறும் இரணம் கிடைக்கும், வாகரை பிரதேச மக்களின் வயிற்றிலா அடிக்கின்றீர், போராடுவோம் போராடுவோம் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம், எம் மக்களின் வாழ்வின் தொழில் முதளைகளின் வேட்டையா?, தேர்தல் காலத்தில் மக்களின் தேர்வு செய்த பின் யாரது முடிவு, இயற்கையின் அழகை அழித்தா அபிவிருத்தி அது வேண்டாம் என பல சுலோகங்களை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இத் திட்டமானது அமுல்படுத்தப்படும் வாகரை பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தாவரங்கள் அழிந்து செல்லும் நிலைமையும், களப்பு நீர் மாசுபடுதலும், களப்பு மீன் பிடித் தொழில் பாதிக்கப்படுதல், மீன் நண்டு இறால் இனப்பெருக்கம் தடைப்படுத்தல், அயல் பிரதேச நிலங்கள் உவர் தன்மை அடைதல், விலங்கு வளர்ப்பு பாதிக்கப்படுதல், வாவி நீர் மட்டம் குறைதல், பல்லினத் தன்மையின் நிலவுகைக்கு பாதகமாக அமைதல் போன்ற தீமையான விடயங்கள் காணப்படுவதன் காரணமாக இத்திட்டத்தை நிறுத்தக் கோரி போராட்டத்தினை மேற்கொண்டனர்.
இதேபோன்று ஏற்கனவே காயான்கேணி, வட்டவான் பகுதியில் இவ்வாறான வலயம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் கண்டல் மரங்கள் அழிந்து போகும் நிலையும், களப்பு நீர் மாசுபடுதலும், மின்பிடித் தொழிலும் பாதிக்கப்பட்டு காணப்படுவதாக போராட்டத்தில்; கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்;.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மக்களுடன் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
அத்தோடு இத்திட்டம் தொடர்பாக தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது. ஆனால் மக்கள் இதனை முற்றாக தடை செய்யும் படி அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டுக் கொண்டனர்.
இதனால் இத்திட்டம் தற்காலியமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், மறுபரிசீலனை சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கலந்துரையாடலை மேற்கொண்டு மக்கள் சந்திப்புடன் அடுத்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறியதற்கிணங்க மக்கள் கலைந்து சென்றனர்.






