எம்.ஏ. தாஜகான்
பொத்துவில் ஆசிரியர்கள் சம்பள தினத்தில் உரிய சம்பளம் பெற்றுக் கொள்ள முடியாமல் திண்டாட்டத்தில் உள்ளனர்.
இதுபற்றி மேலும் தெரிய வருவதானது,
ஆசிரியர்களின், அதிபர்கள், கல்விசார் உத்தியோகத்தர்களின் சம்பள தினம் 20 ம் திகதியாகும். இந்த அடிப்படையில் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் சம்பளத்தினத்தன்று உரிய முறையில் சம்பளத்தை வங்கியில் பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளனர்.
பொத்துவில் மக்கள் வங்கியின் மூலமாக சம்பளம் பெறுகின்ற ஆசிரியர்கள் வழமையாக 21 மற்றும் பிந்திய தினங்களில்தான் சம்பளத்தை பெற்று வருகின்றனர். இதுபற்றி மக்கள் வங்கி முகாமையாளரிடம் விசாரித்த பொழுது அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் அசமந்தப் போக்கினால்தான் சம்பளம் பிந்தி கிடைப்பதற்கு காரணம் என்று குறிப்பிட்டார்.
இன்று (21)பொத்துவில் மக்கள் வங்கியில் சம்பளம் பெறுவதற்காக சென்ற ஆசிரியர்களுக்கு பலத்த ஏமாற்றத்துடன் சம்பளம் போடப்படவில்லை. என்ற தகவல் மாத்திரம் கிடைக்கப் பெற்ற பொழுது ஆசிரியர்கள் விசனம் தெரிவித்தனர். நாளை விடுமுறை நாளாகவிருப்பதனால் நாளையும் சம்பளத்தை பெற்றுக் கொள்ள முடியாது. நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் நிர்ணயிக்கப்பட்ட செலவில் வாழ்கின்ற ஆசிரியர்களுக்கு உரிய தினத்தில் சம்பளம் போடப்படாமை ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும் என ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர்.
அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகம் பொத்துவில் ஆசிரியர்களின் நலனில் உரிய அக்கறை செலுத்த வேண்டும். அதுமாத்திரமன்றி உரிய தினத்தில் பொத்துவில் ஆசிரியர்களின் சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் முறையாக திட்டமிடப்பட வேண்டும். என பொத்துவில் ஆசிரியர்களால் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
