முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் திக்கு திசை தெரியாமல் போயுள்ளது என தென் மாகாணசபை உறுப்பினர் சஞ்சீவ கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
மஹிந்த ராஜபக்சவிற்கும் அவரது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இன்று எந்த திசையில் பயணிப்பது என்பது புரியாமல் போயுள்ளது.
எதைச் சொல்வது எதைச் செய்வது என்பது பற்றிய தெளிவின்றி இருக்கின்றார்கள். பெண்களின் வாக்குகளினால் ஆட்சி பீடம் ஏறிய இவர்கள் ஆட்சி பறிபோனதன் பின்னர் பெண்களை மறந்து விட்டார்கள்.
எதேனும் ஒர் வழியில் ஆட்சியைக் கைப்பற்றுவதே இவர்களின் நோக்கமாக அமைந்துள்ளது. எனினும் நாட்டு மக்கள் இரவு விழுந்த குழியில் பகல் விழ மாட்டார்கள். மஹிந்த ஆட்சிக் காலத்தில் இருந்த இலங்கைக்கும் தற்போதைய இலங்கைக்கும் பாரிய வேறுபாடு உண்டு.
இன்று முழு உலகமுமே இலங்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.
ராஜபக்ச கும்பல் இனவாதம் மதவாதம் குலபேதம் போன்றவற்றை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்த போதிலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எமது ஜனாதிபதியும் பிரதமரும் உலகை வென்றது போன்று நாட்டையும் நாட்டு மக்களையும் வெற்றியடைச் செய்வார்கள் என சஞ்சீவ கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
