புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் கடும் தொனியில் உத்தரவிட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் எச்.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மரபணு சோதனை அறிக்கை உட்பட எந்த அறிக்கையும் மன்றில் சமர்பிக்கப்படவில்லை. இந்நிலையில் சந்தேக நபர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதன்போது, நீதிமன்றில் அறிக்கை எதுவும் சமர்பிக்கப்படாததால், விசாரணைகளை மேற்கொள்ள முடியாது வழக்கு தவணைகள் தள்ளி போய்க் கொண்டு இருப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
‘இதனால் மக்கள் நீதிமன்றின் மீது அதிருப்தி கொள்ள நேரிடலாம். ஆகையால் இதுவரை இந்த வழக்கு தொடர்பில் குற்றபுலனாய்வு துறையினர் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கைகளை அடுத்த தவணையில் கட்டாயம் சமர்பிக்க வேண்டும்’ என கடும் தொனியில் உத்தரவிட்டார்.
- See more at: http://athavansrilanka.com/?post_type=post&p=314608#sthash.vdOZo28X.dpuf
