நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்பட்ட, இலங்கை கடற்படை றக்பி அணியின் நான்கு வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கடற்படை மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் நேற்று ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெற்ற றக்பி போட்டியின் போது, யோஷிதவை நினைவுபடுத்தும் வகையில் இவர்கள் கைப்பட்டி அணிந்திருந்ததாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த கைப்பட்டியில் யோஷிதவை நினைவுபடுத்தும் வகையில் ‘யோ 007′ என பொறிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த வீரர்களை றக்பி அணியிலிருந்து நீக்கியுள்ளதோடு, அவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடற்படை தளபதி பணித்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி குறிப்பிட்டுள்ளார்.
சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, கடற்படை றக்பி அணியின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.aathavan
