ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பில் பல்வேறு முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பல்வேறு தரப்பினராலும் அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பில் பொதுமக்கள் கருத்தறியும் குழுவினருக்கு பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வட மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற யாப்பு மாற்றம் தொடர்பிலான பொது மக்கள் கருத்தறியும் அமர்வுகளில் பொதுமக்கள் மற்றும் அமைப்புகளால் முன்மொழியப்பட்டுள்ள யோசனைகள் பெரும்பாலும் சுய நிர்ணயத்துடன் கூடிய பிரிபடாத இலங்கைக்குள்ளான சமஷ்டி கோரிக்கையாக காணப்படுகின்றன. வடகிழக்கு தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடராக வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டியினையே வலியுறுத்தி வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கோரிக்கையினை பலப்படுத்தும் தன்மையினைக் கொண்டதாகவே வடமாகாண சிவில் சமூகம் மற்றும் அமைப்புக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அமைந்துள்ளன.
வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் தங்களுக்கான அதிகார அலகொன்றினை தொடர்ச்சியாக கோரி வந்துள்ளனர். அக்கோரிக்கை தங்களுக்கான தனி முஸ்லிம் மாகாணம் என அமைந்திருந்தது.
கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் வடக்குடன் கிழக்கு இணைவதை ஒரு போதும் அவர்கள் விரும்பவில்லை. இதற்கு பிரதான காரணம் வடக்குடன் கிழக்கு இணைவதால் கிழக்கு முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புகளாகும். வடக்குடன் கிழக்கு இணைகின்ற போது முஸ்லிம்களின் விகிதாசார சடுதியாக குறைவடைவதை முஸ்லிம்கள் தமக்கு ஏற்படும் பிரதான பாதிப்பாக கருதுகின்றனர். அத்துடன் கடந்தகால வடகிழக்கு தமிழர் அரசியல் வரலாற்றை நோக்கின் அது வடக்கு கிழக்கு முஸ்லிம்களை ஒதுக்கி அல்லது ஓரங்கட்டியே அமைந்திருந்தது. இந்த கசப்பான அனுபவம் தாம் இணைந்த வடகிழக்கில் மாற்றந்தாய் மனப்பான்மையில் நடத்தப்படலாம் என்ற அச்சம் முஸ்லிம்களை குடிகொண்டுள்ளது.
கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம் பிரதேசங்கள் தமிழர் பிரதேசங்களுடனேயே இணைந்திருந்தன. முஸ்லிம்கள் மீது காட்டப்பட்ட பாரபட்சம் காரணமாக ஈற்றில் முஸ்லிம்கள் முஸ்லிம் பிரதேசங்களை மையப்படுத்திய நிர்வாக ரீதியிலான உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை கோரி பெற்றுக்கொண்டனர்.
தற்போது வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில் காட்டப்படும் பாரபட்சம், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகளில் அதிகமானவை முஸ்லிம்கள் என்பதால் காட்டப்படும் பாரபட்சங்களின்படி அமைந்தவையாக உள்ளன. முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்ட போதும் இன்றைய சூழ்நிலையில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையின் அவசியம் கருதி அவைகளை விலாவாரியாக இவ்விடத்தில் அலச விரும்பவில்லை.
ஆக கிழக்கு முஸ்லிம்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளின் போது தமக்கு தனியான அதிகார அலகு வழங்கப்பட வேண்டும் என்பதையே கோரி வந்துள்ளனர்.
இப்போது அதிகமாகப் பேசப்படும் சமஷ்டி என்பது பன்முகத்தன்மையையும் வேறுபட்ட கலாச்சாரங்களையும் இனங்களின் தனித்துவங்களையும் ஏற்றுக்கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகும்.
சமஷ்டி கோரிக்கையில் உறுதியாக உள்ள தமிழத்தரப்பினர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனித்துவ அடையாளங்களையும் தனியான கலாச்சாரங்களையும் கொண்ட முஸ்லிம்களை மதத்தின் அடிப்படையில் தம்மை தனியான இனமாக அடையாளப்படுத்தும் முஸ்லிம்களை அவர்களின் விருப்பமின்றி தங்களது சமஷ்டிக்குள் பலவந்தமாக இணைத்துக்கொள்ள முயலக் கூடாது.
வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரனை இணைத்தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் தீர்வுப் பொதியில் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை ஒரு குழுவாக காண்பிக்க முயன்று இருப்பது வருந்தத்தக்கதுடன் கண்டிக்கத்தக்கதுமாகும். தமிழ் மக்களினதும் நியாயமான உரிமைகளும் அபிலாஷைகளும் மறுக்கப்பட்டதன் முடிவே கடந்த கால கசப்பான யுத்தமாகும். அதன் வடுக்கல் இன்றும் மக்களை வருத்துகின்றன.
தமிழர்களை அடக்கியாள சிங்களவர்கள் முயன்றது போல் முஸ்லிம்களை ஆக்கிரமித்துக் கொள்ள தமிழர்கள் முயலமாட்டார்கள் என முஸ்லிம் சமூகம் நம்புகின்றது. முஸ்லிம்கள் தமிழர்களுக்கு உரிய தீர்வு நியாயமாக கிடைக்க வேண்டும் என உளமாற விரும்புகின்றனர்.
அதனால்தான் வடகிழக்கு இணைப்பு முஸ்லிம்களுக்கு பெரும் பாதகமானதாக இருந்த போதும் அதனை நிபந்தனையுடன் ஏற்றுக்கொள்ள மர்ஹூம் தலைவர் அஷ்ரப் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதே போன்று 2002ல் சமாதான அரசாங்கம் அமைப்பதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரிய பங்களிப்பை வழங்கியது.
இதன் பலனாக புலிகள் பேச்சுவார்ததை மேசைக்கு வந்ததுடன் ஒஸ்லோ பிரகடனம் வெளிவர ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தார். ஆக சமஷ்டியை கோரும் தமிழ்த்தரப்பு தங்கள் கோரிக்கையாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இணைப்பையும் கோருகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுமா என்பது தெளிவற்ற நிலையில் உள்ள போதும் தமிழ்த் தரப்பு தமது கோரிக்கையில் முஸ்லிம்களுக்கான தீர்வையும் தெளிவுபடுத்தி முஸ்லிம்களுக்கான அலகையும் உத்தரவாதப்படுத்த வேண்டும். முஸ்லிம்களின் நியாயமான சந்தேகங்களையும் தீர்த்து வைக்க வேண்டும். இதுவே வடக்கு கிழக்கு மாகாணங்களின் சுபீட்சத்திற்கும் வெற்றிக்கும் வழி வகுக்கும்.
இவ்விடயத்தில் தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஒருமித்த செயற்பாடும் பரஸ்பர ஒத்துழைப்பும் அவசியமாகும்.
கடந்த காலத்தில் இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் தீர்வு முயற்சிகளின்போது முஸ்லிம்களுக்கான தனி அலகு அல்லது சபை தொடர்பில் பல்வேறு வெளிப்படுத்தலகள்; இடம் பெற்றுள்ளன.
சமஷ்டி கோரிக்கையை 1926 ல் முன்வைத்த அமரர் ளு.று.சு.னு. பண்டாரநாயக்க இலங்கை மக்களிடையே காணப்படும் வேறுபாடுகளை பட்டியலிட்டபோது அவர்கள் தங்களுடைய பழக்க வழக்கங்கள் மொழி மாற்றம் சமயம் என்பவற்றை தனித்தனியாகப் பின்பற்றி வருகின்றனர் என்று கூறி இருந்தார். இங்கு முஸ்லிம்கள் தங்களது சமயத்தின் அடிப்படையில் தங்களை தனியான இனமாக வெளிப்படுத்துகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
1944 ஐப்பசி மாதம் 15ந் திகதி இலங்கை கம்யூனிசக் கட்சியின் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானத்தில் இலங்கையின் பல்லினத் தன்மை அங்கீகரிக்கப்பட்டதுடன் சிங்களவர்களும் தமிழர்களும் தனியான நில புலன்களைக் கொண்டவர்கள் என்பதுடன் அவர்களுக்குள் வேறு சிறுபான்மையும் இருந்து வருவதனால் இலங்கை மக்களின் இறைமையையும் சமத்துவத்தையும் அங்கீகரிப்பதுடன் இனங்களுக்கு சுய நிர்ணயம் தொடர்பாக பாராதீனப்படுத்த முடியாத உரிமை இருந்து வருவதன் அடிப்படையில் அவர்கள் விரும்பினால் அவர்களுக்கே உரித்தான சுயாதீன அரசுகளை உருவாக்கிக் கொள்ள முடியுமென அங்கீகரித்தல் என்று நிறைவேற்றப்பட்டது. இங்கு வேறு சிறுபான்மை என்ற பதம் முஸ்லிம்களையே சுட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 1957 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கையின் ஆ பகுதி பின்வருமாறு அமைந்திருந்தது.
(1) பிரதேச சபைகளின் எல்லைகள் - சட்டத்திலேயே அட்டவணையாகச் சேர்க்கப்பட்டு வரையறுக்கப்பட வேண்டும்.
(02) வட மாகாணம் ஒரு பிரதேச சபையாகவும் கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது கூடிய சபைகளாக அமையும் எனக் குறிப்பிட்டிருந்தது. இங்கு கிழக்கு மாகாணம் இரண்டு சபையென குறிப்பிடப்பட்டிருந்தது முஸ்லிம்களை மையப்படுத்தியதாகும் என்பது ஈண்டு கவனிப்புக்குரியதாகும்.
பின்னர் 1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின் 2ஆம் பந்தி பின்வருமாறு அமைந்திருந்தது.
அரசியல் அதிகாரம் பன்முகப்படுத்தப்படுவதுடன் எந்த ஒரு பிரதேசமோ அல்லது எந்த ஒரு சமயமோ மற்றொரு பிரதேசத்தை அல்லது மற்றொரு சமயத்தை அடக்கியாள்வதற்கு வாய்ப்புக் கிடைக்காத விதத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்து வரும் மக்களுக்கென சுவிட்சர்லாந்தில் உள்ளதைப் போல ஒரு சமஷ்டி ஆட்சி முறை நிறுவப்படும். குறிப்பாக தமிழீழ அரசில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் ஒரு சுயாட்சி முறை ஏற்படுத்தப்படும்.
தமது விருப்பத்தின் பேரில் பிரிந்து செல்லும் அடிப்படையில் அவர்களுடைய சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி உத்தரவாதம் அளிக்கின்றது. இங்கு முஸ்லிம்களுக்கான சுயாட்சியையும் அது விரும்பினால் பிரிந்து செல்ல முடியும் என்ற உத்தரவாதத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் உறுதிப்படுத்தியிருந்தது.
அதன் பின்னர் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்குள் இந்திய அரசாங்கத்திற்குள் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லிம்களுக்கான தீர்வு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது. 1986இல் இந்திய அமைச்சர்கள் இலங்கை அரசாங்க பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற கார்த்திகை மாதம் பெங்களுர் பேச்சுவார்த்தையில் இலங்கை தரப்பினரால் முன்வைக்கப்பட்ட சிபாரிசில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
மாகாண சபைகள் தொடர்பாக கிழக்கு மாகாணத்திற்கென மூன்று மாகாண சபைகள் உருவாக்கப்பட வேண்டும். மூன்று மாகாண சபைகள் என்பன தமிழ் மக்களுக்கு ஒன்றும், சிங்கள மக்களுக்கு ஒன்றும் முஸ்லிம்கள் மக்களுக்கு ஒன்றுமாகும். இம் மூன்று மாகாண சபைகளை ஸ்தாபிக்கும் நோக்கத்திற்காக எல்லை வரையறை ஆணைக்குழு இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட வேண்டும் என விதந்துரைக்கப்பட்டது.
(பார்க்க பக்கம் 36 இலங்கை இனப்பிரச்சினையும் முலிம்களும் - எம்.ஐ.எம். முகைதீன்)
ஆனால் பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது முஸ்லிம்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டனர். இச் சம்பவமே முஸ்லிம்களுக்கென தனிக்கட்சியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற முக்கிய காரணமாக அமைந்தது.
பின்னர் சந்திரிகா அம்மையாரின் ஆட்சியின் பாராளுமன்றத்தில் அரசாங்கம் சார்பாக மர்ஹும் அஷ்ரப் அவர்களினால் முன்வைக்கப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வுப் பொதியினுள் முஸ்லிம்களுக்கான தீர்வாக முஸ்லிம் அலகே முன்வைக்கப்பட்டிருந்தது.
ஆக வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமக்கான தீர்வாக முஸ்லிம் அலகு அல்லது முஸ்லிம் மாகாணத்தையே கோரி வந்துள்ளனர். வடக்கையும் கிழக்கையும் இணைத்து தமிழர் தரப்பு கோருகின்ற சமஷ்டியில் கிழக்கு மாகாண தமிழர் பிரதேசங்கள் நிலத் தொடர்பற்ற நன்மையிலேயே அமைந்துள்ளன. அதே போன்று முஸ்லிம்களுக்கான அலகு நிலந் தொடர்பற்றதாக அமைய முடியும்.
ஏற்கனவே நிலந்தொடர்பற்ற இந்தியாவின் பாண்டிச்சேரி அமைப்பிலான முஸ்லிம் அலகொன்று முஸ்லிம் தலைவர்களால் முன்மொழியப்பட்டிருந்தது.
அமையப்போகும் முஸ்லிம் அலகு அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கி அமைவதுடன் வடமாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் கோரி இருந்தனர்.
தற்போதைய சூழ்நிலையில் வட மாகாண முஸ்லிம்கள் உத்தேச கிழக்கு மாகாண முஸ்லிம் சபையுடன் உள்ளடங்குவதா? இல்லையா? என்பது வட மாகாண முஸ்லிம்களின் விருப்பத்தைப் பொறுத்து அமையலாம்.
வடக்கையும் கிழக்கையும் தமிழர்கள் இணைத்துக் கோருகின்ற சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தின் எந்த முஸ்லிம் பிரதேசங்களையும் விட்டுக்கொடுக்கின்ற முடிவுக்கு முஸ்லிம் தரப்பு வந்துவிடக் கூடாது. அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களுடன் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் பிரதேசங்கள் நிச்சயமாக இணைந்த வகையிலேயே உத்தேச முஸ்லிம் அலகு அமைய வேண்டும். இதில் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முஸ்லிம்கள் உடன்பட முடியாது.
உத்தேச யாப்பு மாற்றம் புதிய இலங்கையை கட்டியெழுப்புகின்ற போது முஸ்லிம்களின் தனி அலகே கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பானதாக அமைய முடியும். சிறுபான்மை இனங்களை பாதிக்கின்ற சட்ட மூலங்களை பாராளுமன்ற உருவாக்குகின்ற போது அது பாராளுமன்றத்தின் மேல் சபையிலும் மற்றும் மாகாண சபைகளிலும் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற சரத்து யாப்பில் உருவாக்கப்படுவது மிக அவசியம்.
கடந்த மஹிந்த அரசின் ஆட்சிக் காலத்தில் சிறுபான்மை இனங்களை பாதிக்கின்ற சட்ட மூலமாகக் காணப்பட்ட நாடு நகர சட்ட மூலத்திற்கு கிழக்கு மாகாண சபை அங்கீகாரம் வழங்க மறுத்தமையினால் அச்சட்டத்தை பாராளுமன்றத்தினால் உருவாக்க முடியாமல் போனது. இச்சட்டம் உருவாகி இருந்தால் தென்னிலங்கையில் உள்ள முஸ்லிம்களுள் மலையகத் தமிழர்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பர்.
மேலும் புதிய யாப்பில் உருவாக்கப்படும் முஸ்லிம் மாகாணம் இலங்கை முஸ்லிம்கள் விவகாரத்திலும் நலன்களிலும் பூரண கட்டுப்பாட்டைக் கொண்டதாக அமைவதுடன் முஸ்லிம்கள் தொடர்புடைய விவகாரங்களில் மத்திய அரசு உருவாக்க நினைக்கின்ற சட்ட மூலங்கள் உத்தேச முஸ்லிம் மாகாணத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் உத்தேச யாப்பில் இடம்பெற வேண்டும்.
