கடும் போக்குவாதிகளை கதிகலங்க செய்திருக்கும் கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் உடன்பாடு

முகம்மத் இக்பால் -சாய்ந்தமருது 

திர்வரும் காலங்களில் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட இருக்கின்ற சிறுபான்மை இனருக்கான அதிகாரப்பகிர்வில், இந்நாட்டில் தமிழ் - முஸ்லிம் ஆகிய சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் உடன்பாடு கானப்பட்டது. இது இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கடும்போக்குவாதிகளை கதிகலங்க செய்ததுடன், யாரும் எதிர்பாராத ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.

எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் கடந்த 30.12.2015 ஆம் திகதி இரு சிறுபான்மை சமூகத்தின் ஏக பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு பலவிடயங்கள் ஆராயப்பட்டு அதன்பின்பே இந்த உடன்பாடு காணப்பட்டது. 

தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்குகின்ற விடயத்தில் முஸ்லிம் மக்களை ஒரு துரும்பாக பயன்படுத்தி சர்வதேசத்தினை தொடர்ந்து ஏமாற்றி வருகின்ற சிங்கள அரசாங்க தலைவர்கள், இத்தகைய இணக்கப்பாட்டினை சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதன் பிரதிபலிப்புத்தான் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அறிக்கையும், மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்ற தென்னிலங்கை இனவாதிகளின் குற்றச்சாட்டுமாகும். 

இலங்கையின் சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்து தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாழ்வதனை தடுக்கும்வகையில் சிங்கள அரச தலைவர்கள் முஸ்லிம் தலைவர்களை தன்னுடன் அரவணைத்து செயற்பட்டனர். 

அந்தவகையில் தமிழ் தலைவர்கள் ஐம்பதுக்கு ஐம்பது என்ற கோரிக்கையை ஆங்கிலயேர்களிடம் முன்வைத்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள தலைவர்கள் தங்களது கொள்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அன்றைய முஸ்லிம் தலைவர்களை தங்களுக்கு சார்பாக பேசவைத்தனர்.   

1983 ஆம் ஆண்டின் ஜூலை கலவரத்துக்கு பின்பு தமிழர்களுக்கான தனிநாடு கோரி பல இயக்கங்களினால் சிங்கள அரசுக்கு எதிரான ஆயுதப்போராட்டம் வலுவடைந்தபோது, அனைத்து இயக்கங்களிலும் முஸ்லிம் இளைஞ்சர்களும் பெருமளவில் சேர்ந்துகொண்டனர். இது ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய தலையிடியை தோற்றுவித்தது.

தமிழீழம் என்று அழைக்கப்படுகின்ற நாட்டின் வட கிழக்கு மாகாணமானது தமிழர்களுடன் முஸ்லிம்களும் செறிந்து வாழ்கின்ற நீண்ட பெருநிலப்பரப்பாகும். இங்கு தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையானது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுருத்தளாகவே சிங்கள அரச தலைவர்களால் கருதப்பட்டது. 

தமிழர்களின் ஆயுத போராட்டத்தினை வெற்றி கொள்வதற்கு இராணுவ நடவடிக்கையினால் மட்டும் போதாது. அங்கு வாழ்கின்ற இன்னுமொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களை தமிழர்களிடம் இருந்து நிரந்தரமாக பிரித்தெடுப்பதன் மூலமே தமிழர் போராட்டத்தினை தோல்வியடையச்செய்ய முடியுமென்று அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள் கருதியதுடன் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் பல சூழ்ச்சிகளும் அவரால் மேற்கொள்ளப்பட்டது.  

ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் புத்திசாலித்தனமான இந்த அரசியல் காய்நகர்த்தலின் விளைவாகவே 1985 இல் தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் ஆரம்பமானது. இந்த இனக்கலவரத்தினை முடிவுக்கு கொண்டுவருவதனை விடுத்து, எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போன்று, தமிழ் முஸ்லிம் பகைமையினை நிரந்தரமாக்குவதிலேயே சிங்கள அரச தலைவர்களால் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கென அரசாங்கத்துக்கு விசுவாசமான சில இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.   

அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் எல்லைக் கிராமங்களில் சில வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்றது. இதனால் தமிழ் ஆயுத இயக்கங்களினால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்ற நிலைமை உருவாக்கப்பட்டதன் காரணமாக, முஸ்லிம் ஊர்காவல் படையினரின் அவசியம் உணரப்பட்டது. இதற்கென முஸ்லிம் இளைஞ்சர்களை திரட்டி குறுகிய கால ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டுஇ சொட்கண் மற்றும் ரிப்பிடர் ஆகிய துப்பாக்கிகளுடன் எல்லைக் கிராமங்களில் நிறுத்தப்பட்டனர்.

தங்களது உறவினர்கள் என்றோ, சகோதரர்கள் என்றோ பார்க்காது கொள்கை அடிப்படையில், தங்களுக்கு எதிராக ஆயுதம் தூக்குகின்றவர்களையும்,அரச படையினருடன் செயற்படுகின்றவர்களையும் துரோகிகள் என்று கூறி தண்டனைகளை வழங்கி வந்த தமிழ் இயக்கங்கள், முஸ்லிம் ஊர்காவல் படையினர்களையும் அரச படையினர்களாகவே கருதினர். அத்துடன் அவர்களை தேடி வலை விரித்தனர். அப்போது முஸ்லிம் ஊர்காவல் படையினர்கள் கொல்லப்பட்டபோது, தமிழ் இயக்கங்களினால் முஸ்லிம் இளைஞ்சர்கள் கொள்ளப்பட்டதாகவே முஸ்லிம் மக்களால் கருதப்பட்டது. 

ஏ.கே.47 உற்பட நவீனரக ஆயுதங்கள் தாங்கியுள்ள தமிழ் இயக்கங்களை எதிர்த்து நிற்கும் வகையில் சொட்கண், ரிப்பிடர், ஆகிய சிறியரக ஆயுதங்களுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் நிறுத்தப்பட்டதானது,முஸ்லிம் கிராமங்களை பாதுகாக்கும் நோக்கத்துக்காக அல்ல. 

மாறாக முஸ்லிம் கிராமங்களை பாதுகாக்கும் பொருட்டு முஸ்லிம் ஊர்காவல் படையினர் உருவாக்கப்பட்டு உள்ளனர் என்ற தோற்றப்பாட்டை சர்வதேசத்துக்கு காண்பித்துக்கொண்டு, முஸ்லிம் மக்கள் மீது தமிழ் இயக்கங்கள் அழிவுகளை உண்டுபண்ணும் விதமான வழிவகைகளை உருவாக்குகின்ற திட்டமிட்ட சூழ்ச்சியாகும்.  

தொடரும்.................... 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -