கடும் போக்குவாதிகளை கதிகலங்க செய்திருக்கும் கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் உடன்பாடு

முகம்மத் இக்பால்- சாய்ந்தமருது 

கடந்த பதிவின் தொடர்ச்சி....................... 

தமிழ் இயக்கங்களுக்கு ஈடுகொடுக்கின்ற அளவுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டால் எதிர்காலத்தில் முஸ்லிம் இளைஞ்சர்களும் ஆயுத பலம் பெற்று அவர்களும் கிழக்கில் தனிநாடு கோரி அரசுக்கு எதிராக செயற்பட்டுவிடுவார்கள் என்ற பயம் அரசாங்கத்திடம் காணப்பட்டது. இதன் அடிப்படையிலேயே அரசாங்கம் கவனமாக செயற்பட்டது, காலப்போக்கில் இந்த ஊர்காவல் படையினர்கள் முஸ்லிம் ஜிகாத் அமைப்பினர் என்ற தோற்றப்பாடும் உருவாக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 1989 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஆர்.பிரேமதாசா அவர்கள் இந்திய அமைதி படையினரை வெளியேற்றுவதற்கு விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டார். பிரேமதாசா புலிகள் சமாதான பேச்சுவார்த்தை காலப்பகுதியில் வட கிழக்கு மாகாணத்தின் தமிழ், முஸ்லிம், சிங்கள பிரதேசங்கள் உட்பட அனைத்து பிரதேசங்களும் விடுதலைப் புலிகளின் நிருவாகத்தின் கீழேயே செயற்பட்டது. பின்பு பிரேமதாசா புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்ததனை தொடர்ந்து 1990 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட ஈழப்போர் வெடித்தது. 

வட கிழக்கு பகுதிகள் அனைத்தும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தனால்இ அதனை மீட்பதற்கு சாத்தியமுள்ள பிரதேசமான கிழக்கு மாகாணத்தினை முதலில் கைப்பேற்றும் பொருட்டு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளுவதென தீர்மானிக்கப்பட்டது. இதற்கு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் செறிவாக வாழ்ந்ததே காரணமாகும்.  

ஜே.ஆர். ஜெயவர்தானாவை விட ஒருபடி மேலே சென்று தமிழ் - முஸ்லிம் பகைமையை உருவாக்குவதில் ஆர்.பிரேமதாசா வெற்றி கண்டார். முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் அத்து மீறல்களுக்கு தமிழ் இயக்கங்களே பொறுப்பு என்று முஸ்லிம் மக்களை நம்ப வைப்பதற்கும், தமிழர் மீது இராணுவம் மேற்கொள்ளும் இன அழிப்பிற்குஇ இராணுவத்தை வழிநடாத்தும் முஸ்லிம் இராணுவ அதிகாரிகளே காரணம் என்று தமிழர் தரப்பை நம்ப வைப்பதிலும் பிரேமதாசா அரசு கவனமாக செயற்பட்டது.

1990 ஆம் ஆண்டு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை மீட்கும் பொருட்டு கேப்டன் முனாஸ் தலைமையில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதனாலும், அவரது அட்டகாசம் கடுமையாக இருந்ததனாலும் 'கேப்டன் முனாஸ்' என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானது. 

அப்போது அடிக்கடி தமிழ் கிராமங்கள் சுற்றி வளைக்கப்படுவதும், மக்கள் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு, புலி என்ற சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்படுவதும், பின்பு கைது செய்யப்பட இளைஞ்சர்கள் காணாமல் போவதும் வழக்கமான நிகழ்வுகளாகும். இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டு ஒன்று திரட்டப்பட்ட மக்கள் மத்தியில் கேப்டன் முனாஸ் அவர்கள் சென்று 'தான் ஒரு முஸ்லிம். அல்லாஹ்வை தவிர நான் யாருக்கும் பயப்பிட மாட்டேன்' என்று அடிக்கடி கூறுவார். 

கேப்டன் முனாஸ் அவர்களின் தலைமையிலான இராணுவ கெடுபிடிகளை தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் மிகவும் வெறுப்புடன் எதிர்கொண்டனர். அவர் தன்னை ஒரு முஸ்லிமாக இனம் காட்டிக்கொண்டதனால் அவர் சார்ந்த முஸ்லிம் மக்கள் மீதும் தமிழர்கள் வெறுப்புகொண்டனர்.        

இத்தனைக்கும் கேப்டன் முனாஸ் என்பவர் ஒரு முஸ்லிமல்ல. அவரது உண்மையான பெயர் பீரிஸ் மாட்டின். காலி பிரதேசத்தை சேர்ந்த இவர் ஒரு கிறிஸ்தவராவார். திட்டமிட்டு தமிழர்களுடன் முஸ்லிம் மக்களை நிரந்தர பகையாளிகளாக்கி இனக்கலவரத்தினை  உருவாக்கும் பொருட்டு பிரேமதாச அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பாத்திரம்தான் இந்த கேப்டன் முனாஸ் ஆகும். அப்போது இந்த உண்மையை யாரும் அறிந்திராததனால் முனாஸ் என்பவர் ஒரு முஸ்லிம் என்றே தமிழ் மக்கள் நம்பினர். இது பிரேமதாச அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியாகும். 

இப்படியான இன முறுகல்நிலை இருந்தபோது அதனை பேச்சுவார்த்தைகள் மூலம் சம்பந்தப்பட்ட இரு தரப்பு அரசியல் தலைமைகளும் பேசி தீர்ப்பதற்குரிய சூழ்நிலை அப்போது இருக்கவில்லை. ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் இருந்ததனால் தமிழ் அரசியல் கட்சிகளால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழ் முஸ்லிம் இன முறுகல் நிலை நீடித்ததற்கு இதுவே காரணமாகும். 

அத்துடன் அன்று முஸ்லிம் அரசியல் தலைமை தமிழ் அரசியல் தலைமையுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு எவ்வளவு முயற்சித்தும் முடியாமல் போனது. ஆனால் இப்போதய நிலைமை அவ்வாறில்லை. எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அரசியல் தலைமகள் ஒன்றுகூடி அதனை பேசி தீர்ப்பதற்குரிய சூழ்நிலை இன்று காணப்படுகின்றது.    

இன்றைய நல்லாட்சியில் தமிழருக்கான அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்று தமிழ் தலைமைகள் உறுதியாக நம்புகின்றனர். இவ்வாறான இனப்பிரச்சினை தீர்வில் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படுகின்ற போது,இன்னுமொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களின் கோரிக்கைகளை தமிழர் பிரதிநிதிகள் நிராகரிப்பார்கள் என்றும், அதனை வைத்து அதிகாரப்பகிர்வினை வழங்காது குழப்பி விடலாம் என்றும் தென்னிலங்கை சிங்கள தேசியவாதிகளினால் எதிர்பார்க்கப்பட்டது. 

எனவேதான் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் நடத்திய பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமான முறையில் உடன்பாடு கானப்பட்டதானதுஇ அதிகாரப்பகிவினை விரும்பாத தென்னிலங்கை அரசியல் வாதிகளை கதிகலங்க செய்துள்ளது. 

இதன் பிரதிபலிப்பாகத்தான் ஒவ்வொருவராக இன்று அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் காலப்போக்கில் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி சிறுபான்மை இனருக்கு அதிகாரப்பகிர்வு வழங்குவதனை தடுப்பதற்குரிய முன்னெச்செரிக்கையாக இவ்வறிக்கைகளை கருதமுடியும். கடந்தகால வரலாறுகளும் இதுவே.  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -