திட்டமிடப்படாத அபிவிருத்தியால் மக்கள் அவதியுறும் நிலை தோன்றுவதை தடுப்பது யார்?

அட்டாளைச்சேனை மன்சூர்-

டந்த அரசாங்க காலத்தில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் பல்வேறு பெயர்களுடன் நாட்டின் சந்துபொந்து எங்கும் நடமாடின. இதற்கு அக்கால அரசியல்வாதிகள் தொடக்கம் கொந்தராத்தாளர்கள் வரை மக்களின் நலனில் அக்கரை கொண்டார்களா என்பதைவிட அவர்களின் நலனுக்காகவே பல திட்டங்களை அறிமுகப்படுத்தினர். 

மழைவெள்ளம் என்றும் பராது செய்தும் முடித்தனர். அது மக்களின் பாவனைக்கு வருகின்றபோது முழுமையான பலனைத் தருவதிலிருந்து விலகிய சம்பங்களும் உண்டு. அந்தவகையில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் மிக முக்கியமானதாக அனைவராலும் கூறப்படுகின்ற ஒரு திட்டம் பாதை அபிவிருத்தி திட்டமாகும். நாட்டின் அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்வதற்குரிய திட்டங்களை வகுத்து செயற்பட்டது. உண்மையில் பாதை என்பது இணைப்பு அல்லது மார்க்கம் என்கிற பல்வேறு பெயர்களைக் கொண்டிருந்தாலும் அதன் உண்மையான வடிவம் மக்களை மக்களோடு இணைப்பதும், மக்கள் மயப்படுத்துவதுமாகும் என்றும் கூறலாம். அந்தவகையில் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நெடும்பாதைகள் மக்களின் போக்குவரத்தில் இடையூர் அற்றவகையில் காணப்படுகின்றமை பாராட்டத்தக்கதாகும்.

இப்பாதை அமைப்பு அபிவிருத்திக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் பொறுப்பெடுத்து திட்டங்களைத் தீட்டி செயற்படுத்தின. அதேவேளை பாதைகளின் இருமருங்கிலும் அமைக்கப்பட்ட வடிகான்கள் பல மூடப்படாமல் இன்றுவரையும் காட்சி தருவதானது பாதசாரிகளுக்கும், வாகன சாரதிகளுக்கும் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படுத்துவதையும் நாம் அறிந்திருக்கின்றோம். உரியவர்கள் இதில் கவனமெடுப்பதில் அசமந்தமாக இருப்பதுதான் மனவேதனையான விடயமாகும். அதேவேளை வடிகான்கள் உரிய முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றதா என்றால் பல இடங்களிலிருந்து இல்லை என்றே கூறப்படுகின்றது. 

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள வடிகான்கள் பிரதானவீதிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. மழை பெய்வதற்கு முன்னர் உரிய பிரதேச சபாக்கள் வடிகான்களை சுத்தப்படுத்தி நீர் வழிந்தோடுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இருந்தாலும் முடிக்கப்படாமல் இருக்கின்ற வடிகான்கள் காணப்படுவதும், வெள்ளநீர் பெருக்கெடுக்கின்ற காலங்களில் அதனை தோண்டுவதும், பின்னர் மூடப்படாமலே காணப்படுவதும், அதனுள் நீர் தேங்கி நின்று பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதும் பழக்கப்பட்டுப்போன சமாச்சாரமாகும்.

அதேவேளை கிராமப்புறங்களிலுள்ள உள்ளுர் வீதிகளைப் பார்க்கின்றபோது இதேபோன்றொரு நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் சில பிரதேசங்களில் சரியான திட்டமிடலின்றி அமைக்கப்பட்ட பலவீதிகள் நீர் தேங்கிநின்று கொங்கிரீட் பாதைகள்கூட பழுதடைந்துள்ளமையை யாரிடம் போய்ச்சொல்வது என்று தெரியாமல் மக்கள் அவதியுறுகின்றனர். 

கடந்த காலங்களில் சில பிரதேசங்களில் அமைக்கப்பட்ட பல வீதிகள் குன்றும் குழியுமாகவே காணப்படுகின்றன. கொங்கிரீட் பாதையில் போடப்பட்டுள்ள கற்கள் வெளியேறி அங்குள்ள கம்பிகள் தெரியும் அளவுக்கு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளமையானது சரியான திட்டமிடலின்றிய செயற்பாடாகவே மக்கள் பார்க்கின்றனர். அரசியல்வாதிகள் வருவார்கள் போய்விடுவார்கள். மக்களுக்கு சேவையாற்றுகின்ற அதிகாரிகள் இதனை உணரத்தவறுவதன் விளைவுதான் இது என்கிறனர் மகாஜனங்கள்.

மேலும், கிராமப்புறங்களில் அமைக்கப்படுகின்ற கொங்கிரீட் வீதிகளை சரியான முறையில் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டும் மக்களிடம் உண்டு. பிரதேசத்து அரசியல்வாதிகளும், அவர்களோடு துணையாக இருப்பவர்களும் தனது ஆதரவாளர்கள் எங்கு இருக்கின்றார்களோ அங்கெல்லாம் பாதைகளும், வடிகான்களும் அமைப்பார்கள்.

மழைபெய்கின்றபோது நீர் முறையாக ஓடுவதாக நினைத்து அமைக்கப்படும் வீதிகளும், வடிகான்களும் நீர் ஓடாது தேங்கிநின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவது மாத்திரமன்றி தேங்கி நிற்கின்ற வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்புவாழ்வினை நாசமாக்குவதையும் காண்கின்றோம். இதற்கு நல்லதோர் உதாரணமாக கடந்த 2013ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் குறிப்பாக கிழக்கில் ஏற்பட்ட வெள்ளம் சான்றாக அமைந்திருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

இதேபோன்றொரு பிரச்சினை அண்மையில் நமது அயல்நாடான இந்தியாவின் தமிழ்;நாட்டில் சென்னையில் ஏற்பட்ட தொடர் அடைமழை காரணமாக  ஏற்பட்ட வெள்ளத்தைக் கூறலாம். அணைகளில் மிதமிஞ்சிய நீரும், சரியான முறையில் திட்டமிட்டு நகரை கட்டியெழுப்பாததன் விளைவினால் பதினைந்தடிக்கு மேற்பட்ட உயரத்திற்கு நீர் நிறைந்து முழு நாட்டையுமே உலுக்கிய சம்பவத்தை பார்த்தோம். 

இவ்வாறான நிலைமை நமது நாட்டில் ஏற்படாதிருக்க வேண்டுமாக இருந்தால் முறையான திட்டமிட்ட அடிப்படையில் கிராமங்களில் அமைக்கப்படும் பாதைகளும், பாதையோடு இணைந்த வடிகான்களையும் அமைக்க வேண்டும். இதனை விடுத்து அரசியல்வாதிகளின் கையாட்களுக்கு ஒருநீதி, ஏனையவர்களுக்கு ஒருநீதி என்று பார்ப்பதை அதிகாரிகள் மட்டத்திலிருந்து ஒழிக்கப்படுதல் அவசியமாகும்.

அண்மையில் நண்பர் ஒருவர் கூறிய விடத்தை இவ்விடத்தில் ஞாபகப்படுத்தலாம் என்று நினைக்கின்றேன். அதாவது ஏற்கனவே நல்ல முறையில் அமைக்கப்பட்ட ஒரு வடிகான் இருக்க அதனை உடைத்துவிட்டு மீண்டும் ஒருவடிகான் கட்டப்படுவதாக கூறினார். 

வழமையாக மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கியதாக அமைக்கப்படுகின்ற வடிகான், இப்போது பள்ளத்திலிருந்து மேட்டை நோக்கியதாக அமைக்கப்படுவதாக அவர் கூறினார். இதில் மிகவும் சுவாரஷ்யமான செய்தி என்னவென்றால் இதனை தடுத்து உரிய முறையில் கட்டுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்தியே தீர்வது என்பதில் அரசியல்வாதிகளைவிட அதிகாரிகள் சிலர் குறியாய் இருப்பதுதான் முக்கியமாகும்.

இதுபோக, மழைகாலம் வெள்ளநீர் வழிந்தோடுவதற்காக கிறவல் வீதிகளை வெட்டுவதும் மழை காலம் முடிவடைந்ததன் பின்னர் வெட்டியவர்கள் அல்லது உரிய பிரதேச சபாக்கள் அதனை மூடுவதும் வழமையான விடயமாகும். ஆனால் கிழக்கில் குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் சில வருடங்களுக்கு முன்னர் வெட்டப்பட்ட குழிகள் இன்றும் அதேநிலைமையில்தான் காணப்படுவது வேதனைக்குரியதாகும். இரவு நேரங்களில் நடந்து செல்கின்றவர்கள், மோட்டார் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் செல்கின்றவர்கள், பாடசாலை சீருடையுடன் பள்ளி செல்கின்ற மாணவர்கள் இதனால் படுகின்ற கஷ்டங்கள் கொஞ்சநஞ்மல்ல.

பூணைக்கு மனிகட்டுவது யார் என்பதுதான் பிரச்சினையே. இந்த விடயத்தை பிரதேச சபா உத்தியோகத்தர்களிடம் சொன்னால் நிதியில்லை, ஆள் இல்லை, உரிய இயந்திரம் பளுது என்று ஏதோ சாக்குபோக்குச் சொல்லி சமாளிப்பார்கள். பிரதேச அரசியல்வாதிகளிடம் போய்க்கூறினால் அதனை செய்வோம் என்பார்கள். அத்தோடு கதை முடிந்துவிடும். மக்கள் வேதனை, கஷ்டங்களை உணர்கின்றவர்களாக யாரும் இல்லை. இதனை பத்திரிகையில் பிரசுரித்தால் எழுதியவரின் கதையே முடிந்துவிடும். இந்த நிலைமை இன்றைய நல்லாட்சியில் இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டுமென்பதே அனைவரினதும் அவா.

சில பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கே நீர் வழிந்தோடுவதற்குரிய வடிகான்கள் அமைக்கப்படவில்லை. மழைபெய்கின்றபோது வீதியில் நீர் நிறைந்து நடக்க முடியாமல் காணப்படும். அப்போது பாடசாலை செல்கின்ற மாணவர்களினது சப்பாத்து முழுமையாக நீரினுள் நனைந்துவிடும். இதற்குரிய மாற்று நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ள முடியாது. 

காரணம் அமைக்கப்பட்டுள்ள பாதை கொங்கிரீட். இருமருங்களிலும் இடமின்ற வடிகான் கட்டமுடியாதளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைக்கின்றபோது நீண்ட காலத்திற்குரிய அபிவிருத்தி என்பதை உணர்ந்திராத அளவுக்கு அதனை வடிவமைத்த அதிகாரிகள் காணப்படுகின்றமையே இவ்வாறான திட்டமிடப்படாத பிழையான வழிநடாத்தல்களுக்குரிய காரணமாகும்.இதனை அரசியல்வாதிகளும் கண்டுகொள்வதில்லை. அவர்களிடம் மக்கள் கூறினாலும் பெரியதாக எடுபடுவதில்லை. 

மக்களும் தேர்தல் வருகின்றபோது பாடம் படிப்பிக்க வேண்டும் என்பார்கள். ஆனால் கட்சியாளர்கள் எப்படியோ திருகுதாளங்களைக்கூறி வாக்குகளை கொள்ளடித்துவிடுவார்கள். மீண்டும் அதேநிலைமை தொடரும்.

பொதுவாக பார்க்கின்றபோது நினைத்ததை நினைத்தவுடன் நினைத்த மாதிரியே செய்யும் சிலர் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர். இந்தச் சிலரை மீதியான பலரும் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்பதற்கு திராணியற்று இருப்பார்கள். இப்பலரில் உலமாக்கள், கல்விமான்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், சம்மேளன நிருவாகிகள் எனப் பலதரப்பட்டவர்களும் காணப்படுவார்கள். எவராவது முன்னின்று ஏன்..? எதற்காக..?? எப்படி..??? என்றெல்லாம் விளக்கம் கேட்க முடியாதவர்களாகவே இருப்பார்கள். 

அதனால்தான் முறையாகத் திட்டமிட்டு நில அளவீடுசெய்து உரிய தொழில் நுட்பத்திறனில்லாமல் அதிகமான வேலைத் திட்டங்கள் எமது பிரதேசங்களில் 'அபிவிருத்தி' என்ற போர்வையில் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுவதை நாம் பார்க்கிறோம். இவை உண்மையான அபிவிருத்திகள் அல்ல. நமது மக்களின் அழிவுக்கும், அவலங்களுக்குமான பாதிப்புக்களையே அவை ஏற்படுத்துகின்றன என்பதுதான் யாதார்த்தமான உண்மையாகும். இதுதான் கடந்த அரசாங்க காலத்திலும் நடைபெற்றன. இன்றைய நல்லாட்சியிலும் மீண்டும் தொடர்வதுதான் மிகப்பெரிய உண்மையாகும்.

கடந்த அரசாங்க காலத்தில் நாடு முழுவதும் ஒதுக்கப்பட்ட கமநெகும கொங்றீட் வீதிகள் நமது பாதைகளையும் அலங்கரித்துக் கொண்டன. சில கொங்றீட் வீதிகளைத் தவிர அதிகமான வீதிகள் முறையான ஏற்ற இறக்கம் கவனித்து நிலஅளவை செய்து அதற்கேற்ற வகையில்  போடப்பட்டுள்ளதா? என ஒவ்வொருவரும் நமது உள்ளத்தைத் தொட்டுக் கேட்டுப்பாருங்கள். நினைத்ததை முடிப்பவர்களாக அப்போது காணப்பட்டார்கள். இதனையெல்லாம் பார்ப்பதையும், மக்களிடம் வினவுதையும் தவிர்த்தே பாதைகளை அமைத்தார்கள். 

அதேபோன்றொரு நிலைமைதான் மீண்டும் தொடர்கின்றதோ என்கிற கருத்தாடல்கள் இன்று மக்களிடம் மேலோங்கி வருவதையும் மக்களின் உணர்வலைகள் வெளிக்காட்டுகின்றன. இதனை உரிய அதிகாரிகள் மட்டத்திலிருந்து மக்களுக்கு உண்மையான சேவைகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய கடமைப்பாடும் அவர்களுக்கு உண்டு என்பதை நினைவிற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் இவ்வாறு அமைக்கப்படுகின்ற முறையற்ற கொங்றீட்வீதி மற்று மற்று வடிகான் அபிவிருத்திகளால் பெறுமதியான வீட்டுக் குடியிருப்புக் காணிகள் 'வெள்ளம் நிற்கும்' காணிகளாக மாற்றமடைந்து பெறுமதியற்றதாகவும் காணப்படுகின்ற அவலத்திற்கு தள்ளப்படுகின்றது. இவ்வாறு, திட்டமிடப்படாத, தொழில் நுட்பத் திறன்களைக் கொண்டிராத, கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட வடிகான்களால் கழிவு நீரும், வெள்ள நீரும் வடிந்தோடுவதற்குப் பதிலாக அவை தனியார் வளவுகள், வீடுகள், வீதிகள், என எங்கு பார்த்தாலும் பரவித்தேங்கிக் காணப்படுகின்றன. இப்படியான அவலங்களுக்கு மத்தியில்தான் மக்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உரியவர்களிடம் உருவாக வேண்டும்.

இது தொடர்பாக வருமுன்காப்போம் என்கிற முதுமொழிக்கேற்ப கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் மாரிகாலம் தொடங்குவதற்கு முன்னரே கிழக்கிலுள்ள அனைத்துப் பிரதேச உள்ளுராட்சி மன்றங்களுக்கும் அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தார்.

அந்த அறிவித்தலில் எதிர்வரும் காலம் மழைகாலம் என்பதால் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல உள்ளுராட்சி மன்றங்களும் தங்களின் பிரதேசத்திலுள்ள வடிகான்களை சுத்தப்படுத்தி மழைநீர் வடிந்தோடுவதற்கான சகல வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்குமாறும் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் நல்லதோர் செயற்பாடாக அந்த அறிவித்தல் இருந்தது.

ஆனால் அதனையும் தாண்டி மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்த செய்திகளையும் நாம் அண்மையில் பெய்த பெரு மழை வெள்ளத்தின்போதும், அம்பாரை இங்கினியாகல நீர்; திறப்பின் போதும் அம்பாரை மாவட்டத்தின் பல வீதிகள், வடிகான்கள் நீரால் மூழ்கடிக்கப்பட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. பொறுப்பாளர்கள் பொறுப்பறிந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சொல்லப்போனால் சில பிரதேசங்கள் திட்டமிட்ட அடிப்படையில் உள்ளுர் பாதைகள், வடிகான்கள் அமைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கின்றபோது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. 

குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் பிரபல்யமான ஒரு நகரம் சிறுமழை பெய்தாலும் வெள்ளம்போல காணப்படும். ஆனால் அந்த நிலைமை இன்று இல்லை. திட்டமிட்ட முறையில் ஒரு ஒழுங்குமுறையோடு ஆழமான முறையி;ல் சிந்தித்து வடிச்சல் அமைப்பினை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அதேநிலமை இன்று நாடுமுழுவதும் உருவாக்கப்படவேண்டும். பொறுப்புக் கூறுகின்றவர்கள் தமது பொறுப்பை சரியான முறையில் திட்டமிட்டு மேற்கொண்டால் அதுசரியாக அமையும் என்பதுதான் யதார்த்தமாகும்.

நன்றி - சுடர்ஒளி (2016.01.03)
அட்டாளைச்சேனை மன்சூர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -