வேனொன்றில் வந்த இளைஞர்கள் சிலர் நகரின் ஹோட்டலொன்றிற்குள் புகுந்து அங்குள்ளவர்களை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவமொன்று வெலிமடை நகரில் நேற்று முன்தினம் இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தாக்கப்பட்ட இரு தமிழ் இளைஞர்களும் ஒரு முஸ்லிம் இளைஞருமாக மூவர் வெலிமடை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேனொன்றில் வந்த இளைஞர்கள் சிலர், வெலிமடை நகரில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஹோட்டலொன்றிற்கு முன்னால் வேனை நிறுத்தி, தமக்கு சிகரட்டுக்கள் தருமாறு ஹோட்டலிலுள்ளவர்களை மிரட்டினர். இதையடுத்து ஏற்பட்ட முறுகல் நிலை மோதலாக மாறியது.
அவ்வேளையிலேயே, வேனில் வந்தவர்கள், ஹோட்டலில் உள்ளவர்களை கடுமையாக தாக்கிவிட்டு சென்றனர்.
தாக்கப்பட்டவர்கள் வெலிமடை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் தொடர்பாக வெலிமடை பொலிஸாருக்கு செய்யப்பட்ட புகாரையடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
