49 வது அகவையில் கால்பதிக்கும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம். அவர்கள் 1967ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் திகதி மடக்கொம்பரை தோட்டத்தில் பழனி - வள்ளியம்மா தம்பதிகளின் கடைபுதல்வராக பிறந்தவர்.
கல்வியினை தொடர முடியாத, வறுமை நிலை காரணமாக சாதாரண இளைஞனாக தொழில் நிமித்தம் கொழும்புக்கு சென்று தன் வியாபார திறமையால் வாழ்க்கையினை முன்னேற்றிக் கொண்டார். தான் வாழ்ந்த, வளர்ந்த சமூகத்திற்கு மக்கள் பணிகள் முன்னெடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் செயற்பட ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் இவருடைய மக்கள் பணிக்கு அன்றைய மலையக ஆட்சியாளர்களின், அரசியல்வாதிகளின் தலையீடும் முட்டுகட்டையும் மக்கள் பணியினை முடக்கிவிட நினைத்தது.
மக்கள் பணி முன்னெடுக்க வேண்டுமெனில் அரசியல் அதிகாரமும் வேண்டும் என்ற பாடத்தினை இந்த முட்டுகட்டைகள் உணர்த்தியிருந்தது.
2004ம் ஆண்டு நடைபெற்ற மத்திய மாகாண சபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அமரர் சந்திர சேரகனின் மலையக மக்கள் முன்னணி தனித்து களமிறங்கி அதன் சார்பில் இரண்டு பேர் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டனர். அதிலொருவராக 18387 வாக்குகளை பெற்று பழனி திகாம்பரம் எனும் மக்கள் பணி செய்யும் தோட்டத்தில் பிறந்து வளர்ந்து மக்கள் கஸ்டங்களை உணர்ந்த சாதாரண இளைஞன் மாகாண சபை உறுப்பினராகினார்.
அதன்பின் மலையக மக்கள் முன்னணி> தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்பு சார்ந்து அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கி வந்த காலத்தில் 1965ம் ஆண்டு தொழிற்சங்க துறவி வி.கே.வெள்ளையன் அவர்களினால் உயரிய நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட தொழிலாளர் தேசிய சங்கம் சில சுயநலவாதிகளின் வலையில் சிக்குண்டு படு வீழ்ச்சியடைந்திருந்தது. 1947ம் ஆண்டு தலவாக்கலை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட மடக்கொம்பரை மண்ணை சேர்ந்த கவிஞர் ஸி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிருவாக செயலாளராக இருந்து சங்கத்தினை நெறிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே மடக்கொம்பரை மண்ணை சேர்ந்த பழனி திகாம்பரம் 2006ம் ஆண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தினை பொறுப்பேற்று சிறந்த தலைமைத்துவத்தினால் மீள கட்டியெழுப்பினார். வெள்ளையன் கண்ட கனவு திகாம்பரம் அவர்களினால் நனவானது. 2009ம் ஆண்டு இடம்பெற்ற மத்திய மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளாக 45229 வாக்குகளை பெற்றார். இவரோடு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவராகவிருந்த உதயகுமார் 32409 வாக்குகள் பெற்றார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாகாண சபை அரசியல் பிரதிநித்துவம் இரண்டாக அதிகரித்தது.
2010ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது எதிர்கட்சியாகவிருந்த ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளாக 39490 வாக்குகளை பெற்று பாராளுமன்றுக்கு தெரிவானர். 2013ம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் இவரின் தலைமையில் தொழிலாளர் தேசிய சங்கம் மூன்று மாகாண சபை பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொண்டது.
பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய குறுகிய காலத்திலேயே து}ர நோக்குடனான சேவையின் காரணமாக 2014ம் ஆண்டு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஈழத்து தாகூர் என அழைக்கப்படும் மக்கள் கவிமணி ஸி.வி.வேலுப்பிள்ளை அவர்களுக்கு முத்திரை வெளியிட வேண்டும் என்ற பலரின் கனவை ஸி.வியின் நுற்றாண்டு விழாவில் தன்னுடைய சானக்கியத்தால் சாத்தியமாக்கி காட்டினார்.
இலங்கை முழுவதுமாக ஆட்சி மாற்றம் தொடர்பில் தீவிரம் காட்டிய கடந்த வருடத்தில் மலையக மக்களின் எதிர்கால வாழ்க்கையினை செம்மையாக்குவதற்கு 7 பேர்ச் காணியுடனான தனிவீடு திட்டம் முன்னெக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்களின் தலைமையிலான பொது கூட்டணிக்கு ஆதரவு வழங்கினார். அதன் பயனாக கடந்த ஆட்சியாளர்களால் இல்லாமலாக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சை மீள உருவாக்கி பெற்றுக் கொண்டார்.
அதேபோல அமைச்சரவை அனுமதியுடன் 12 லட்ச ரூபா நிதியில் 7 பேர்ச் காணி உரித்துடனான வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 400 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்ததோடு பல கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து மலையக மக்கள் தொடர்பான தன்னுடைய தூரநோக்கினை வெளிப்படுத்தினார்.
மலையகத்தின் தலைமைகள் என்று மார்தட்டிக் கொண்டிருந்த எதேட்சதிகார தலைமைகளுக்கு எதிராக மலையகத்தில் மாற்றுத் தலைமையாக உருவானார். இதன் வெளிப்பாடாக 2015ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் 101528 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரோடு தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பாக அதன் பிரதிப்பொதுச் செயலாளர் திலகராஜ் அவர்களும் வெற்றிப் பெற்றதோடு தற்பொழுது திகாம்பரம் அவர்களின் தலைமையில் தொழிலாளர் தேசிய சங்கம் (தொழிலாளர் தேசிய முன்னணி) இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும்> மூன்று மாகாண சபை உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
பத்து வருட அரசியல் பயணத்தில் 75 வருட அரசியல் வரலாறு கொண்டவர்களுக்கு சவால் விடுத்து மக்கள் பணி செய்யும் மக்கள் நாயகன் திகாம்பரம் அவர்களின் மக்கள் பணி தொடர அவரது 49வது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
