சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்திய அணி 110 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் ‘நம்பர் 1’ இடத்தை பிடித்தது.
2011–ம் ஆண்டு இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரை 0–4 என்ற கணக்கில் இழந்து ஒயிட் வாஷ் ஆன போது முதல் இடத்தை இந்தியா இழந்தது.
கடந்த டிசம்பர் மாதம் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி 3–0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை கைப்பற்றி இருந்தது. மேலும் தென்ஆப்பிரிக்கா அணி தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் 0–2 என்ற கணக்கில் தோற்றது. இதனால் இந்தியாவுக்கு மீண்டும் ‘நம்பர் 1’ இடம் கிடைத்துள்ளது.
109 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2–வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்கா 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அந்த அணி கடந்த ஒரு ஆண்டில் எந்த ஒரு டெஸ்டிலும் வெற்றி பெறவில்லை.
கடைசியாக வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான 4–வது மற்றும் கடைசி டெஸ்டிலும் தோற்றால் அந்த அணிக்கு மேலும் நெருக்கடி தான். 2015 ஜனவரியில் இருந்து தென்ஆப்பிரிக்கா 9 டெஸ்டில் விளையாடி இருக்கிறது. இதில் 5 தோற்றது. 4 டெஸ்ட்டை ‘டிரா’ செய்தது.
பாகிஸ்தான் 4–வது இடத்திலும், இங்கிலாந்து 5–வது இடத்திலும், நியூசிலாந்து 6–வது இடத்திலும், இலங்கை 7–வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் 8–வது இடத்திலும், வங்காளதேசம் 9–வது இடத்திலும், ஜிம்பாப்வே 10–வது இடத்திலும் உள்ளன.