அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் ஆனந்த சாகர தேரோவுக்குமிடையில் நடந்த விவாதத்தில் குர்ஆன் மீது சத்தியம் செய்யும்படி சொன்னது சம்பந்தமாக பலரும் எம்மைக்கேட்கிறார்கள்.
முதலில் இந்த விவாதம் ஏன் எற்பாடு செய்யப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேரர் முன் வைத்த குற்றச்சாட்டுக்களை அவர் நிரூபிக்க வேண்டும் என்பதே விவாதத்தின் அடிப்படையாகும். சுமார் மூன்று மணி நேரம் விவாதம் நடந்தும் தேரரால் தமது குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை முன் வைக்க முடியவில்லை.
இறுதியில் இத்துடன் இந்த விவாதம் முற்றுப்பெறுகின்றது என அறிவிப்பாளர் கூறி மின்சார குமிழ்கள் அணைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குர்ஆனில் சத்தியம் செய்ய முடியுமா என தேரர் திடீர் என வினவியது அனாவசியமான ஒன்றாகும். காரணம் முஸ்லிம்கள் ஒரு போதும் குர்ஆனில் சத்தியம் செய்ய மாட்டார்கள். இறைவன் ஒருவன் மீது மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும் என்பதே இஸ்லாத்தின் போதனையாகும்.
அதே வேளை இவ்வாறு சத்தியம் செய்து நிரூபிக்க வேண்டும் என்றிருந்தால் சுமார் மூன்று மணி நேரம் நேயர்களின் நேரத்தை வீணடித்திருக்க தேவையில்லை. அதற்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே போதுமானதாகும். அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை என தேரர் தமது தம்ம பதத்தின் மீது சத்தியம் செய்ய அதனை அமைச்சர் மறுத்து இறைவன் மீது சத்தியம் செய்வதுடன் விடயம் ஐந்து நிமிடத்துள் முற்றுப்பெற்றிருக்கும்.
ஆக இந்த விவாதம் என்பது ஆதாரங்கள் முன் வைக்கப்பட வேண்டும் என்பதுதானே தவிர சத்தியம் செய்தல் தலைப்பு அல்ல. அப்படித்தான் அல்குர்ஆன் மீது சத்தியம் செய்வது என்றிருந்தாலும் கூட அல்குர்ஆனை முழுமையாக ஏற்றுக்கொள்பவர்தான் அந்த சத்தியத்தையும் ஏற்பார்.
அதே போல் பௌத்த தம்ம பதத்தின் மீது தேரர் சத்தியம் செய்ய வேண்டும் என அமைச்சராலும் கூற முடியாது. காரணம் அள்ளாஹ் அல்லாதவற்றில் சத்தியம் செய்யும்படி ஒரு முஸ்லிம் மற்றவரை கூற முடியாது. அந்த வகையில் அல்குர்ஆன் மீது சத்தியம் செய்து அதனை ஒரு விளையாட்டாக கருதுவதற்கு இடமளிக்க முடியாது என்ற வகையில் அதிலிருந்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் தவிர்ந்து கொண்டமையை முஸ்லிம் சமயத்தலைவர்களின் கட்சி என்ற வகையில் உலமா கட்சி பாராட்டுகிறது. இது பற்றிய இஸ்லாமிய சட்டத்தை அவர் நன்கு தெரிந்து வைத்துள்ளார் என்பது மகிழ்சியை தருகிறது.
மௌலவி முபாறக் அப்துல் மஜீத்,
தலைவர்,
முஸ்லிம் உலமா கட்சி.
