நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதமும், இஸ்லாமிய பயங்கரவாதமும் நாட்டில் தலைதூகியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நேற்று உடஹமுல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாம் ஏற்படுத்திக் கொடுத்த மாற்றம், உருவாக்கிய ஜனநாயகம் அனைத்தும் இன்று சீரழிக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சி மாற்றம் நாட்டை பாதாளத்தின் பக்கம் கொண்டு செல்லும் என்று நாம் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தமை இன்று உண்மையாகிவிட்டது.
ஒரு புறம் மேற்கத்தேய நாடுகளின் உதவியுடன் வடக்கு கிழக்கு பகுதிகளை தனி அலகுகளாகவும் புலிகளை மீண்டும் உருவாக்கவும் தமிழர் தரப்பு முயற்சித்து வருகின்றது.
இன்னொருபுறம் மத்திய கிழக்கு நாடுகளின் உதவியும், அவர்களின் அடிப்படைவாதக் கொள்கையையும் நாட்டில் பயங்கரவாத சூழலை உருவாக்கி வருகின்றது.
இந்த அச்சுறுத்தல் பல காலமாகவே இருந்தது. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் நாட்டை பிளவுபடுத்தும் நோக்கம் சர்வதேச தரப்பினால் முன்னெடுக்கப்பட்டது.
இஸ்லாமிய பயங்கரவாதம், புலிப்பயங்கரவாதம் ஆகியவை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இந்த மாற்றத்தையா மக்கள் விரும்பினர் என்று கேட்கும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.
ஆகவே தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் அதிக அக்கறை கொள்ளவேண்டும். பாதுகாப்பை பலப்படுத்தி நாட்டின் மீதான அழுத்தங்களை குறைக்க வேண்டும் என்றார்.
