![]() |
| மன்சூர் (அட்டாளைச்சேனை) |
வழமைபோன்று அன்றும் உதயசூரியன் தன்காலைப்பொழுதை கிழக்கில் உதிக்கச் செய்திருந்தான். இலங்கைவாழ் மக்கள் கண்டிராத அந்த உணர்வலைகளையும், உயிர் உடமைகளையும் கபளீகரம் செய்யும் நிகழ்வொன்று கடலிலிருந்து வெளிவரப்போகின்றதே என்கிற எவ்விதமான அறிவித்தலுமின்றி மக்கள் தன் அன்றாடக் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றபோதே மாபெரும் அனர்த்தம் ஏற்பட்டது.
கடலைகள் மக்களை காவும் கொள்ளும் அளவுக்கு இலங்கையர் பழக்கப்படவில்லை. ஜப்பான் நாட்டினருக்கு தெரிந்தளவில் ஒருசிறு துளியும் தெரிந்திராத மக்கள் ஆயிரக்கணக்கில் உயிர்களை இழப்பார்கள் என்று யாருமே அறிந்திரவில்லை. படைத்த இறைவனுக்கு மாத்திரம் தெரிந்திருந்த அந்தச் சம்பவத்திற்கு இன்றுடன் வயது 11 முடிவடைந்து பனிரெண்டு ஆரம்பிக்கின்றது. கடற்படை வீரர்கள்போன்று கடல்நீர்ப்படை ஊருக்குள் நுழைந்து உயிர்களையும் உடமைகளையும் நாசம் செய்து, துவட்டிப்போட்டுவிட்ட அந்த நாளை இன்று நினைத்தாலும் ஒருகனம் மனதை ஆட்டிவிடுகின்றது.
ஆம் 2004 டிசம்பர் 26ஆம் நாள், சூரியன் உதித்து சில மணிநேரத்திற்குள் இந்தனை அனர்த்தம் ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது. அன்று விடுமுறை நாள் என்பதால் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. ஒருசிலர் மாத்திரம் வெளியே சென்றனர். கடற்றொழிலாளிகள் தங்களுடைய அன்றாடத் தொழிலை மேற்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். காலை 7.15மணிபோல் கடல் மெல்ல மேலெழுந்து கரையைத் பலமாகத் தாக்கியது. மக்கள் கடல் இவ்வாறு வருவதன் காரணம் என்ன என்று வினவி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றபோதே கடல்; வற்றிவிடுவதுபோன்ற பார்வையுடன் பின் நோக்கிச் செல்கிறது.
சென்ற கடல் சில நிமிடங்களின் பின்னர் இராட்சத அலைகளாக மாற்றப்பட்டு கரையை புரட்டிவிடுகின்றது. எதையுமே புரிந்திராத மக்கள் கடலுக்குள் சங்கமித்து உயிரை மாய்க்கின்றனர்.
கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் அமைந்திருந்த வீடுகள் நிலத்தோடு சரிந்து மண்னோடு மண்ணாகின்றன. அதனுள் அகப்பட்டவர்கள் உயிரை விடுகின்றனர். தப்பித்தவறியவர்கள் உயிரைக் கையில்பிடித்துக் கொண்டு ஓடுகின்றனர். மீண்டும் ஒரு இராட்சத அலை ஏற்பட்டு மிச்சசொச்சங்களையும் அழித்துவிடுகின்றது. இவை அனைத்தும் சில நிமிடங்களிலேயே நடந்து முடிகின்றது. போன உயிர் கிடைக்குமா? கிழக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி நாட்டின் கரையோரம் முழுவதும் இதேநிலை.
குறிப்பாக அம்பாரை மாவட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டு சுமார் 40ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துபோன அந்த நாள் இன்றுடன் பதினொரு ஆண்டுகள்; பூர்த்தியாகின்றன. அந்த அனுபவத்தை நேரடியாக உணர்ந்;து அனுபவித்தவன் என்கிற வகையில் அந்நாளை நினைவுறுத்தும் வகையில் நினைவலைகளை மீட்டுகின்றது இக்கட்டுரை.
சுமத்ரா தீவுக்கு 160 கிமீ மேற்கே கடலுக்கடியில் 30 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் அதாவது இந்தியா, இந்தியப்பெருங்கடல், வங்கக்கடலின் பகுதி இவற்றைச் சுமந்து கொண்டு மிதக்கும் இந்தியத்தட்டு (டெக்டோனியம் பிளேட்) அந்தமான் - நிக்கோபார் தீவுகளையும் வடக்கு சுமத்ராவையும் சுமக்கும் பர்மா பிளேட்டுக்குக் கீழே இறங்கிவிட்டதால் ஏற்பட்ட நிலநடுக்கம் பிரம்மாண்டமான சக்தி மிக்கதாக இருந்தது.
ஹிரோஷிமா-நாகசாகியில் அமெரிக்காவில் போடப்பட்ட அணுகுண்டுகளையும் சேர்த்து இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த வெடிபொருட்களின் சக்தியைப் போல இரண்டு மடங்குக்கு மேலான வெடிதிறனை 2004 டிசம்பர் 26 நில நடுக்கம் கொண்டிருந்தாதக் கூறப்படுகின்றது.
ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய லிட்டில் பாய் என்கிற அணுகுண்டைப்போல 2.13 மில்லியன் மடங்கு சக்தி மிக்கதாக இந்த நிலநடுக்கம் இருந்தது. வடக்கே ஆசியத்தட்டு இருக்க தெற்கிலிருந்து ஆண்டுக்கு 6 செ.மீ வடக்கு நோக்கி நகரும் இந்தியத்தட்டு இடித்துக்கொண்டு வர நடுவில் மாட்டிக்கொண்ட பர்மா தட்டின் மேற்குக்கரை-1200 கி.மீ நீளம்- அழுத்தம் தாளாமல் 2004 டிசம்பர் 26 அன்று பத்திலிருந்து இருபது மீட்டர் உயரத்துக்கு மேலெழும்பி விட இந்தியத்தட்டு அதற்கு அடியில் போய் விட்டது. அதன் காரணமாக கடல்நீர் உள்ளும் வெளியுமாகப் போய் வரத் துவங்கியது. தட்டு கீழே போவது என்பது பூப்போல நடக்கும் செயலல்ல. அது 9.0 றிச்டர் அளவு நடுக்கத்துடன்தான் கீழே போனது, அந்த நடுக்கத்தின் அதிர்ச்சி அலைகள்தான் இலங்கைக்கும் வந்து. வந்ததன் பின்னர் நாட்டின் கரையோரங்கள் அல்லோலப்பட்டதை நினைத்தாலும் இன்றும் நெஞ்சு பதறுகிறது.
அத்தனை வேகத்தோடு உண்டாக்கப்பட்ட அலைகள் மணிக்கு 800 கிமீ வேகத்தில் பயணம் செய்து கரையைத்தாக்கின. 'கரையைத் தாக்கும் அலைகள்' என்பதுதான் சுனாமி (TSUNAMI) என்கிற ஜப்பானியச் சொல்லுக்குரிய அர்த்தமாகும். சுனாமி அலைகள் தாக்குவதற்கு முன்னால் முதலில் கடல் உள்வாங்கும். கிழக்கின் கரையோரங்களில் கடல் நீண்ட தூரம் உள்வாங்கியதும் கடலுக்கு அடியில் உள்ள தரையும் அங்கு உள்ள பொருட்களும் வெளித்தெரிய ஆரம்பித்தது. அந்த அரிய காட்சியைக் கண்டு வியப்படைந்த சுற்றுலாப்பயணிகள் மாத்திரமன்றி உள்ளுர் மக்களும் கடலுக்குள் இறங்கி நடக்கவும் புகைப்படம் எடுக்கவும் ஆரம்பித்தனர். ஆனால் அடுத்த ஐந்து நிமிடத்தில் சுனாமி அலை வந்து தாக்கியதில் பலர் இறந்துபோனர். பலர் காயங்களுடன் உயிர்தப்பினர்.
ஆனால் இப்படி கடல் உள்வாங்கினால் ஐந்து நிமிடத்தில் சுனாமி வரும் என்று தன் பாடத்தில் படித்திருந்த டில்லி ஸ்மித் (வுடைடல ளுஅiவா) என்கிற பத்து வயதுச் சிறுமி தாய்லாந்தின் புக்கெட் நகரத்தில் கடற்கரையிலிருந்த மக்களை எச்சரிக்கை செய்து 100 பேருக்குமேல் அந்த இடத்தைவிட்டு ஓடச்செய்து காப்பாற்றிய செய்தி பிரபலமானதாக அப்போது இருந்தது.
இவ்வாறு அனைவரையும் கிலிகொள்ளவைத்த சுனாமி எவ்வாறு ஏற்படுகின்றது என்பதைப் பார்ப்போம். கடல் படுகையில் திடீரென ஏற்படும் மாற்றதால் மேலிருக்கும் தண்ணீர் செங்குத்தாக இடமாற்றம் அடைவதால் சுனாமி உருவாகின்றது. டெக்டானிக் நிலநடுக்கங்கள், பூமியின் புவி ஓடு உருக்குலைவதால் உண்டாகும், இது கடலுக்கு அடியில் ஏற்படும் போது சிதைக்கப்பட்ட பகுதியிலுள்ள தண்ணீர், சமநிலையில் இருந்து இடம் பெயர்கிறது. டெக்கான் தட்டுகளின் தவறான சுழற்சி காரணமாக, செங்குத்தாக நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது.
இயக்கத்தில் ஏற்படும் சாதாரண தவறுகளாலும் கடல் படுகையில் இடப்பெயர்ச்சி ஏற்படும். ஆனாலும் இவை பெரிய சுனாமியை உண்டாக்குவது இல்லை. சுனாமிகள் ஒரு சிறிய அலை வீச்சும், மிக நீண்ட அலை நீளமும் உடையவை சாதாரண கடல் அலை 30 அல்லது 40 மீட்டர் அலைநீளம் உள்ளவை. ஆனால் சுனாமி அலைகள் சில நூறு கிலோ மீட்டர் நீளம் உடையவை. இவை கடல் பரப்பைவிட 300 மில்லி மீட்டர் மேலே சிறிய வீக்கம் போன்று உருவாகும். அவை தாழ்வான நீலை அடையும் போது மிக அதிக உயரமாக மேலெழுகிறது. சுனாமியின் சிறிய அலைகூட கடலோரப்பகுதியை மூழ்கடித்து விட முடியும்.
1946ஆம் ஆண்டு ஏப்ரலில் அலாஸ்காவில் அலேடன் தீவுகளுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவுகள் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் 14 மீட்டர் உயரத்திற்கு அலை மேலே எழுந்து ஹவாய் தீவில் உள்ள ஹிலோ என்ற இடத்தையே முழுமையாக அழித்தது. பசிபிக் பெருங்கடல் தரையில் அலாஸ்கா கீழ்நோக்கித் தள்ளப்பட்டதால், உண்டான பூகம்பமே இதற்குக் காரணம் எனவும் கூறப்படுகின்றது.
குறுகும் எல்லைகளில் இருந்தும் ஸ்டாரிக்கா என்ற இடத்தில் 8,000 வருடங்களுக்கு முன் சுனாமி தோன்றியதாக வரலாறுகள் கூறுகின்றன. கிராண்ட் பேங்க் 1929, பப்புவா நியு கினியா 1998 (டப்பின் 2001) சுனாமிகள் ஏற்படக் காரணம் பூகம்பத்தின் மூலம் உண்டான வண்டல் கடலில் சென்று கலந்ததால் உண்டானது எனவும் கூறப்படுகின்றது. 1960 வால்டிவியா பூகம்பம் (9.56), 1964 அலாஸ்கா பூகம்பம் (9.26), 2004ல் இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் 2011ல் தோஹூ பூகம்பம் (9.06) போன்றவைகளைக் கூறலாம்.
சுனாமி எச்சரிக்கை அமைப்பு:
அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையம் நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய்தீவுகளாகும். 1946 ஏப்ரல் 1ல் ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை மொத்தமாகவே விழுங்கி விட்டது.
கோடிக்கணக்கான சொத்துகளும் அழிந்துபோயின. அதன் காரணமாக அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்திருந்தன. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்தன் விளைவாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் 'சுனாமி மிதவை கருவி' ஆகும்
1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப்பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டதன் விளைவாக 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் இணைந்து கொண்டன. ஆரம்பத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
2004 டிசம்பர் 26ஆம் நாள் இலங்கையின் கரையோரங்களில் பாதிப்பினை ஏற்படுத்திய சுனாமி பேரலையை இன்று நினைத்தாலும் கதிகலங்கச் செய்கிறது. இலங்கைவாழ் மக்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியமை பெருமை இந்தச் சுனாமிக்குண்டு.
சுனாமிக்குப் பின்னர் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு உட்கட்டமைப்புக்கள் எதிர்காலத்தில்மீண்டும் ஒருசுனாமி ஏற்பட்டாலும் அதிலிருந்து அதிகளவான பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடற்கரையோரங்களில் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. இயற்கைக்கு முக்கியத்துவம்கொடுக்கப்பட்டு மக்களும் இயற்கைக்கு உதவிடுதல் அவசியம் என்பதைத்தான் இந்த சுனாமி அனர்த்தம் எமக்குப் புகட்டியுள்ள மிக முக்கியமான பாடமாகும். பாடசாலைக் கலைத்திட்டத்திலும் சுனாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிரந்தமான வாழிடங்கள் அமைக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். இருந்தாலும் சில பிரதேசங்களில் இன்னும் அதன் நினைவுகளிலும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். முழுமையான அனர்த்தங்களில் அகப்பட்ட மக்களின் வாழ்வில் அது நிரந்தமான ஊனமாகவே காணப்படுகின்றது. சுனாமியின் தாக்கம் அத்தனை பயங்கரமானது என்பதை நேரில்; பார்த்தவர்களுக்கு அதன் பயம் தெரியும்.
சுனாமி தாக்கத்தினால் அன்று இருக்க இடமின்றி, உணவின்றி, தொழிலின்றத்; தவித்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வீடுகளும், தொழிலுக்கான கொடுப்பனவுகளும், ஏனைய உதவிகளும் வழங்கப்பட்டிருந்தாலும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாரை மாவட்டத்திலுள்ள பல கரையோரப்பிரதேசங்களில் வாழ்ந்து வந்த மக்களின் வாழ்வில் இந்த நஷ்டங்கள் முழுமையாக சென்றடையவில்லை என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டுவதும் பொருத்தமாகும்.
இலங்கையைப் பொறுத்தளவில் டிசம்பர் மாதம் வந்துவிட்டால் நாட்டில் இயற்கையின் சீற்றமும் அதிகரிக்கும். 1978ஆம் ஆண்டில் கிழக்கினைத் தாக்கிய சூறாவளி ஏற்பட்டது டிசம்பரிலாகும். அதன்பின்னர் எத்தனையோ வெள்ள அனர்த்தங்களும் ஏற்பட்டுள்ளன. அதேபோல் இலங்கையைத் தாக்கிய சுனாமியும் இந்த டிசம்பர் மாத்திலேதான் ஏற்பட்டன. தற்போது நாட்டில் பரவலாக மழைபெய்து வெள்ளம் ஏற்பட்டு குறிப்பாக அம்பாரை மாவட்ட நெற்பயிர்கள் நாசமாகியிருக்கின்றன. சேனநாயக்கா சமுத்திரத்தில் நீர் நிறைந்தமை காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட நீர் விவசாயிகளை நஷ்டமடையச் செய்திருந்தன.
இதற்கான எவ்விதமான நடவடிக்கைகள் உரிய திணைக்களங்கள் ஊடாக எடுக்கப்படவில்லை என்பது விவசாயிகளின் கவலையாகும். நாட்டின் பலபிரதேசங்களிலும் கடந்த நாட்களில் வெள்ளம் ஏற்பட்;டது. மலையகத்தின பிரதேசங்களில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இவ்வாறு இடம்பெறும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதும், அதிலிருந்து மீளுவதும் நடைமுறையில் இருந்துவந்தாலும் அனர்தங்கள் ஏற்படுகின்ற காலங்களை மக்கள் உணர்ந்து அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கையுடன் தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டும்.
அதேவேளை மக்கள் இயற்கைக்கு விரோதமான செயற்பாடுகளில் பங்காற்றுவதன் காரணமாகவும் இயற்கை மக்களுக்குச் சதிசெய்கின்றது என்கிற கருத்தும் கூறப்படுகின்றது. இயற்கையை சீண்டினால் அது சதிசெய்யும். அதனை ஆதரித்து வளர்த்தால் சதிசெய்யாது.
கடற்கரை ஓரங்களில், ஆற்றோரங்களில் மண் அகழ்;வது, காடுகளிலும், குடியிருப்பு பிரதேசங்களிலும் மரங்களைத் வெட்டிச் சாய்ப்பதும், மலைச்சரிவுகளில் காணப்படுகின்ற மரங்களை வெட்டிவீழ்த்துவதும் போன்ற இயற்கைக்குத் துரோகமிழைக்கும் செயற்பாடுகளிலிருந்து தவிர்ப்பதன் ஊடாக இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும். அப்போது இயற்கை எம்மைப் பாதுகாக்கும். சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களிலிருந்து மனிதர்களாகிய நாம் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு அனர்த்தம் ஏற்படுகின்றபோது மாத்திரம் இறைவனை சிந்திக்கின்றோம். ஏனைய காலங்களில் சிந்திப்பதைத் தவிர்க்கின்றோம். இறைசக்தியை நம்பும் நாம் அவனுடைய படைப்புக்கள் ஊடாக இறைதியானத்தை நினைவுறுத்தவும் தவறக்கூடாது என்பதை நினைவிற் கொண்டு சுனாமியின் நினைவு நாளான இன்று சுனாமிக்கு காவுகொள்ளப்பட்ட மக்களுக்காக எமது பிரார்த்தனைகளை வழங்குவது மாத்திரமன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆறுதல் கூறும் நாளாக இன்றைய நாளை அனுஷ்டிப்போம்.

