இளம் யுவதியொருவரின் அந்தரங்கப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றப் போவதாக மிரட்டி, அவரிடமிருந்து கப்பம் பெற முயன்ற முன்னாள் காதலன் உள்ளிட்ட இருவரை பொலிசார் மடக்கிப்பிடித்துள்ளனர்.
பொலிசார் விரித்த வலையில் சிக்கிய இருவரும் பருத்தித்துறை நகர்ப்பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டனர்.
கிளிநொச்சியை சேர்ந்த 19 வயது வாலிபரும், குடத்தனையை சேர்ந்த 17 வயது வாலிபனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சிரய சேர்ந்த வாலிபர் சாவகச்சேரி யுவதியொருவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். அந்த சமயத்தில் யுவதியின் அந்தரங்கங்களை படங்களாக எடுத்து வைத்துள்ளார். பின்னர், அவர்களிற்கிடையில் பிரிவு ஏற்பட்டதும், யுவதியை மிரட்டியுள்ளார்.
அந்தரங்க படங்களை பதிவேற்றப் போவதாகவும், பதிவேற்றாமல் இருப்பதென்றால் 30 ஆயிரம் ரூபாவை தர வேண்டுமெனவும் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து யுவதி சாவகச்சேரி பொலிசாரிடம் முறையிட்டார். விரைந்து செயற்பட்ட பொலிசார், கப்பத் தொகையை வழங்க யுவதி சம்மதிப்பதாக நாடகமாடினார்கள். பணத்தை தருவதாக யுவதி வாலிபர்களிடம் கூறினார்.
இதனையடுத்து கப்பத் தொகையை பெற நேற்று மதியம் 1.30 மணிக்கு பருத்தித்துறை நகருக்கு வருவதாக வாலிபர்கள் சொன்னார்கள். இதனையடுத்து பருத்தித்துறை பொலிசாரின் உதவியை சாவகச்சேரி பொலிசார் நாடினார்கள்.
யுவதியிடம் பணம் கொடுத்து அனுப்பப்பட்டது. வாலிபர்கள் இருவரும் பணத்தை வாங்க வந்தபோது மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி வாலிபருடன் துணைக்கு வந்த குடத்தனை வாலிபரும் சிக்கியுள்ளார்.
