எல்லாப் புகழும் படைத்தவன் ஒருவனுக்கே. இலங்கைத் திருநாட்டின் முஸ்லீம்களின் வரலாற்றில் மறைந்த பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் சோம தேரருடன் நடத்திய விவாதம் முஸ்லீம் சமூகத்தின் மூலை முடுக்குகளில் எந்தளவு முஸ்லீம்களின் சுதந்திரக் குரலாக ஒலித்ததோ, அதே போன்று இன்று இந்த சமூகத்தின் மீது வாஞ்சை கொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்திதான் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவர் கௌரவ ரிஷாத் பதுர்தீன் அவர்கள் ஆனந்த தேரருடன் நடத்தும் நேருக்கு நேரான கலந்துரையாடல்.
இது சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான ஒரு யுத்தம், முஸ்லீம்கள் மீது காலாகாலமாக கட்டவிழ்த்து விடப்படுகின்ற பேரினவாத பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு யுத்தமாகவே இன்று எமது சமூகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் எமது தேசியத் தலைமையின் வெற்றி எமது சமூகத்தின் வெற்றியாகவே நாம் கொள்ள வேண்டியுள்ளது.
அதற்காக நாம் இன்றைய எல்லா பர்ளுத் தொழுகைகளின் பின்னும் இறைவனை வெற்றிக்காக வல்ல நாயனிடம் துஆச்செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.
சமூகத்தின் விடுதலைக்காய் போராடும் ஒரு தலைமைக்கு அச்சமூகத்தின் எல்லாப்பரப்புகளில் இருந்தும் நம்மாலியன்ற உதவிகளை செய்வது சமூகத்தை நேசிப்போரின் கடமை, உபத்திரவம் செய்யாமலிருப்பது அதில் கடை நிலை. ஆனால் தமது வங்குரோத்தை மறைக்க, கருத்திலாத பதர்கள் மூலமான கருத்தை சமூகத்திடம் திணிப்பது சமூகத்துரோகமாகவே சமூகம் இனங்கண்டுள்ளது. தமது விசுவாசத்தையும், எதிர்காலப் பதவிகளையும் கருத்தில் கொண்டு முஸ்லீம் சமூகத்தின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் ஒரு செய்திதான் இது. முஸ்லீம் சமூகத்தை கொச்சைப்படுத்தும் எளிய செயலாகவும் இதனைக் கொள்ளலாம்.
ஆனந்த தேரரின் அப்பட்டமான குற்றச்சாட்டுகள் சிங்கள சமூகத்தின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் பரப்பப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் பற்றிய பிழையான ஒரு கண்ணோட்டத்தினை அடிப்படையாக கொண்டே இக்குற்றச்சாட்டுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தனியே வில்பத்து விவகாரமாக இதனைக் கொள்வது, அரசியல் அறியாமை என்றே கொள்ளப்பட வேண்டும். நிரந்தராமாக இலங்கை வாழ் முஸ்லீம்களை ஏனைய சமூகங்களிடம் இருந்து தனிமைப்படுத்தி எமது நாட்டில் இருந்து இல்லாதொழிக்கும் கைங்காரியத்தின் தொடர்நிலை நிகழ்வாகவே நாம் இதனைக் கொள்ளவேண்டியுள்ளது.வில்பத்து விவகாரம் தொடர்பில் மிக ஆதாரபூர்வமான பல்வேறு சான்றுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அப்பிரதேசம் ஒரு மீள் குடியேற்றம் என்பதில் மாற்றம் கிடையாது. அத்துடன் இதில் தனியே ரிஷாத் என்ற நபரின் மானம், கொள்கை, நம்பிக்கை சம்பத்தப்படவில்லை. முழுச்சமூகத்தின் மீதான ஒரு சதிவலையே, மாய வலையாய் எம்மீது போர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்த மதத்தை நாம் மதிக்கின்றமைக்கான வெளிப்படையும், சிங்கள மக்களிடம் இருந்து முஸ்லீம் சமூகத்திற்கு தேவையான ஆத்மார்த்த ரீதியிலான ஆதரவை பெற்றுக் கொள்வதற்குமான இம்முயற்சி, இந்தப் பொறுப்பு தேசியத் தலைவர் ரிஷாத் பதுர்தீன் அவர்களின் தலைமேல் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லீம்களில் பாதிக்கப்பட்டவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய ஒரு தலைமை தற்காலத்தில் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவர் கௌரவ ரிஷாத் பதுர்தீன் அவர்கள் எமது மக்களுக்காக என்றும் களத்தில் இருப்பது அவர்மீதான முஸ்லீம் சமூகத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்குகிறது. சமகாலத்தில் முழு இலங்கை முஸ்லீம்களும் அவரது தலைமையின் கீழ் அணிதிரளும் நாள் வெகு தூரத்திலில்லை. எல்லாவற்றிக்கும் இறைவன் போதுமானவன். நாம் வெற்றிக்காக பிரார்த்திக்கின்றோம்.
