கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற சூழ்ச்சித் திட்டம் குறித்த அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 9ம் திகதி அதிகாலை சூழ்ச்சித் திட்டம் ஊடாக அதிகாரத்தில் தொடர்ந்தும் நீடிக்க முயற்சிக்கப்பட்டதாக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த அரச விரோத சூழ்ச்சித் திட்டம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி, சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இன்னமும் சட்ட மா அதிபர் திணைக்களத்திடமிருந்து ஆலோசனைகள் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் முழுமையான விளக்கம் அளிக்க இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதாக அமைச்சர் சாகல ரட்நாயக்க பாராளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
சூழ்ச்சித் திட்டம் தொடர்பிலான விசாரணைகளுக்கு என்னவாயிற்று என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும கேள்வி எழுப்பியிருந்தார்.
11 மாதங்களுக்கு முன்னதாக இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று தொடர்பில் நான் கேள்வி எழுப்புகின்றேன்.
சூழ்ச்சித் திட்டம் தொடர்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித 21 தடவைகளும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஏழு எட்டு தடவைகளும் கூறியுள்ளனர்.
இது நாட்டை பாதிக்கும் பிரச்சினையாகும். எனவே இந்த சம்பவம் குறித்த விசாரணைகளின் நிலைமை குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றேன்” என டலஸ் அழஹப்பெரும தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தக் கேள்விக்கு பதிலளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்குவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
