கைதிகளுடன் உண்ணா விரதப் போராட்டத்தில் இருப்பதற்கு தயார் - யோகேஸ்வரன்

ந.குகதர்சன்-

மது தலைவருக்கு கொடுத்த வாக்கினை உடனடியாக நிறைவேற்றாமல் ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவில்லையாயின் தொடர்ந்து நாங்களும் அந்தக் கைதிகளுடன் உண்ணா விரதப் போராட்டத்தில் இருப்பதற்கு தயாராக இருக்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரின் சீ.யோகேஸ்வரன் அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சா.வியாளேந்திரன், ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, எஸ்.இராஜேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில காலங்களுக்கு முன் எமது மாண்புமிகு தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் கலந்துரையாடியதற்கு பின்னர் நவம்பர் மாதம் 07ம் திகதிக்கு முன் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகக் கருத்துப் பரிமாறப்பட்டிருந்ததது.

எமது தலைவர் அவர்களும் அக்கருத்தினை வெளியிட்டிருந்தார். ஆனால் தற்போது அரசாங்கம் முதற்கட்டமாக ஒரு தொகையினரைப் பிணையிலும் அதன் பின் ஒரு தொகையினரைப் பிணையிலும் விடுதலை செய்து மிகுதியானவர்களைப் பாராளுமன்றத்தில் ஒரு குழுவை ஏற்படுத்தி அதன் ஆலோசனையின் பின்னர் தீர்மானிப்பதாக நாம் அறிந்தோம்.

இதனால் இன்று எமது தமிழ் அரசியற் கைதிகள் மிகவும் கவலையடைந்து இருக்கின்றார்கள். நீண்டகாலமாக சிறையில் வாடுகின்ற இந்தக் கைதிகளுக்கு பிணை கொடுப்பதும் ஒரு நீடிப்பாகவே அமையும் என அவர்கள் கருதுகின்றார்கள். இதனால் தாங்கள் அனைவரையும் இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் மீண்டும் உண்ணா விரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

எனவே இந்த தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருந்து எமது தலைவருக்கு கொடுத்த வாக்கினை உடனடியாக நிறைவேற்றும் படியும் அதே நேரத்தில் அவர்கள் எல்லோரையும் விடுதலை செய்யுமாறு கோரிக் கொண்டு நாங்கள் ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடாத்த இருக்கின்றோம்.

இக்கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை 12ம் திகதி காலை 08.30 மணிக்கு காந்திப் பூங்காவில் நடைபெற இருக்கின்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அதே போன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் எல்லோரும் மட்டக்களப்பில் ஒன்று கூடி இந்த முடிவினை எடுத்திருக்கின்றோம்.

அதன் பின்னர் இதற்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவில்லையாயின் தொடர்ந்து நாங்களும் அந்தக் கைதிகளுடன் உண்ணா விரதப் போராட்டத்தில் இருப்பதற்கு தயாராக இருக்கின்றோம். இந்தச் செய்தியைப் பொதுமக்களுக்கு அறியத்தருவதுடன் பொது மக்கள் அனைவரும் எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக வாடிக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களின் விடுதலையில் தங்களின் பங்களிப்பினை நல்குவதற்கு இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -