மாட்டிறைச்சிக் கறி உண்பதும் ஒரு குற்றமா...?

லகளவில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. எப்போதும் வழமைக்கு மாற்றமாக சில விடயங்கள் வித்தியாசமாக காணப்படுகின்றபோது அல்லது நடைபெறுகின்றபோது அது பரபரப்பான செய்தியாக மாறிவிடுகின்றது. அப்படியான ஒருவிடயம்தான் மாட்டிறைச்சிக்கறி சாப்பிட்டதற்காக ஒருவர் கொல்லப்பட்டமையாகும். 

நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறுவதுபோல 'மாட்டிறைச்சிக்கறி உண்பதும் ஒரு குற்றமா?' என்று கேட்கத் தோன்றுகின்றது. மாடு போன்ற பிராணிகள் சில மதத்தினரின் வழிபாட்டுக்குரித்தாக காணப்பட்டபோதிலும் மாட்டிறைச்சி உலகளவில் மக்களால் உண்ணப்படுகின்ற ஒரு பிராணியாகவும் காணப்படுகின்றது. 

சில நாடுகளில் தனி மாமிசமே அந்த மக்களின் உணவாகவும் காணப்படுகின்ற நிலையில் ஒருவருக்கு பிடிக்காத, ஒரு சமூகத்திற்குப் பிடிக்காத ஒருசெயலை மற்றொருவர் மேற்கொள்கின்றபோது அதனை எதிர்ப்பது நியாயமாக இருந்தால் அதில் அர்த்தம் இருக்கும். ஆனால் அடித்துக் கொலை செய்யும் அளவுக்கு இந்தவிடயம் ஒரு பாரதூரமான குற்றமா? என்றால் அப்படியும் இல்லை. 

மனிதத்தும், மனிதாபிமானம் எந்தளவுக்கு தரமற்றுப்போய்விட்டது என்பதை ஒருபுறம் வைத்துவிட்டு, மதத்தின்பெயரால் முரண்பாடுகளை தோற்றுவித்து என்ன பலனைக் கண்டது உலகம். அழிவுகளும், அநாச்சாரங்களும்தான் மிஞ்சும் இதுதான் உலகவரலாறு.

இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்கள் பசுவை புனிதமானதாகக் கருதுகின்றனர். அதேவேளை இந்துக்களில் பலரும் சிறுபான்மை முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் மாட்டிறைச்சி உண்பவர்கள் என்பதும் தெரிந்தவிடயம். ஆனால் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிசாரா கிராமத்தில் மாமிசம் வைத்திருந்தார் என்கிற வதந்தியை அடுத்து, அடித்துக் கொலைசெய்யப்பட்ட முகமது அக்லாக் மற்றும் கண்கள் குருடாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அவரது மகன் டானிஸ் விவகாரம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. 

சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்ற இந்தியப்பிரதமர் மோடி 'இந்தியா முன்னேறி வருகிறது. ஆனால் நான் பிரதமர் ஆன பிறகு உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க்கிறது' என்று கூறியிருந்தார். ஆனால் அவர் இதைச் சொல்லிவிட்டு டில்லி திரும்பும் முன்பே மாட்டிறைச்சியை வைத்திருந்தார்கள் என்ற வதந்தியின் பெயரில் சில அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு குடும்பத்தையே அடித்து நொறுக்கியுள்ளது.

இது குறித்து உத்தரப்பிரதேச சமாஜ்வாடி நாடாளுமன்ற உறுப்பினர் ஆஜம்கான் கூறுகின்றபோவது 'மோடி பிரதமரானதில் இருந்து அவரது பரிவாரங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கின்றன. அவர்களின் உற்சாகம் அள வுக்கு மீறிச் சென்று கொண்டிருக்கிறது. ஊரில் தனியாக உழைத்து முன்னேறி வாழ்ந்த ஒரு சாதாரண மனிதனை இப்படி வன்மம்கொண்டு அடித்துக் கொலை செய்வதுதான் நீதியா? அவர்களை, அடக்கி வையுங்கள் எனவும் அந்த உறுப்பினர் இந்தியப் பிரதமரை கோரியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தாதரி நகருக்கு அருகில் உள்ள பிசாரா என்கிற கிராமத்தில் கடந்த திங்கள் அன்று பசுமாடு ஒன்று காணாமல் போய்விட்டதாகவும், அந்தப் பசுமாட்டின் இறைச்சி முகமது அக்லாக் வீட்டில் இருப்பதாகவும் சிலர் கூறினர். இந்த நிலையில் முகமது அக்லாக் மற்றும் அவர்களது வீட்டில் உள்ளவர்கள் தான் பசுவை வெட்டி சமைத்து உண்டார்கள் என்றும், மீதமுள்ள இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளார்கள் என்றும் அந்த ஊரில் உள்ள சில அமைப்புசார்ந்தோர் வதந்தியைப்பரப்பினர். 

இதனை அடுத்து அந்த ஊரில் இருந்த கோவில் ஒன்றில் மக்கள் அனைவரையும் ஒன்றுகூடச் சொன்னார்கள். கூட்டத்திற்குப் பிறகு முகமது அக்லாக் பசுவை வெட்டியதாகவும் அதை உண்டுவிட்டு விட்டு மீதமுள்ள இறைச்சியை தெருவில் வீசியதாகவும், ஆகையால் பசுவைத் தின்ற குடும்பத்திற்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும்; என்றும் மக்களை தூண்டிவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்டவரின் மகளான சாஜிதா பத்திரிகையாளர்களிடம் கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.

அதாவது, எங்கள் வீட்டிற்கு திங்கள் கிழமை நள்ளிரவு காவிக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு பலர் கும்பலாக வந்தனர். கும்பலைக் கண்டு பயந்து கதவை மூடி விட்டோம். ஆனால் அந்த கும்பல் கதவைக் கோடரி மற்றும் கம்பிகள் கொண்டு தாக்கத் துவங்கினர். சில நிமிடங்களில் கதவு உடைந்து விட்டது. உள்ளே வந்த சிலர் என் தந்தையை அடித்து வெளியே இழுத்துச் சென்றனர் பிறகு கோடரியால் தலையில் அடித்தனர். எனது மூத்த சகோதரனை செங்கல்லால் தாக்கினர்.

எனது தாயாரையும் அடித்தனர். பிறகு எனது ஆடைகளையும் கிழித்து எறிந்து என்னை அரை நிர்வாணமாக்கினார்கள் என்று கூறினார். இச்சம்பவம் நடந்த போது அந்த ஊர் மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தனர் என்பதுதான் ஆச்சரியமான உண்மையாகும். இந்தச் சம்பவத்தில் அக்லாக் சம்பவ இடத்திலேயே மரண மடைந்தார். அவரது 26 வயது மகன் டானிசின் பார்வையும் பறிபோனது. 

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை ஆணையர் கூறும் போது, ஊரில் உள்ள கோவிலில் சிலர் கூடி வதந்திகளைப் பரப்பியுள்ளனர். சரியாக இரவு 10 மணியளவில் ஊரில் ஒன்று கூடிய மக்களில் சிலர் பசுவைத் திருடி அதைக் கொன்று சாப்பிட்டவர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்று கூறினார்கள்.

இதனையடுத்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கையில் ஆயுதங்களுடன் அக்லாக் வீட்டிற்குச் சென்று தாக் குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிலர் தலைமறைவாகினர். இதனையடுத்து பலர் வன்முறையில் இறங்கினர். காவல் துறையினரின் இரண்டு மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்தனர். காவல்துறை வாகனத்தையும் அடித்து நொறுக்கித் தீ வைத்தனர்.

வன்முறைச் சம்பவம் கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து மாஜிஸ்ட்ரேட் சிறப்பு காவல்படையினரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். சிறப்புக்காவல் படையினர் ஊருக்கு வராமல் தடுக்க சாலைகளில் சேதமேற்படுத்த முனைந்த கலகக்காரர்கள்மீது பொலிஸார் தடியடி நடத்தினர். ஆனால் வன்முறையாளர்கள் காவல்துறையினர் மீது பயங்கர ஆயுதங்களால்தாக்கத் தொடங்கியதும் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார். கலவரக்காரர்கள் தாக்கியதில் மூவர் காயமடைந்தனர். பின்னர் சிறப்பு கலவரக்கட்டுப் பாட்டு பிரிவினருடன் இணைந்து பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கொலை செய்யப்பட்ட அக்லாகின் வீட்டில் பசுமாட்டிறைச்சி இருப்பதாகக் கூறப்பட்டது. ஆரம்பக்கட்ட விசாரணையின் பின்னர் மாநில காவல்துறையின் ஆணையர் கூறும்போது குளிர்சாதனப் பெட்டியில் இருந்தது பசுமாட்டிறைச்சி அல்ல என்று கூறியிருந்தார். அவ்வாறானால் கொல்லப்பட்டமை, கண் தாக்கப்பட்டமை எல்லாமே வதந்தியான செய்தியைக் கொண்டே பழிதீர்க்கப்பட்டுள்ளது. இதில் இனரீதியான குரோதமனப் பாங்கும் இந்த கொலைவெறிச் சம்பவத்தில் ஊடறுத்திருக்கின்றது. 

இந்தச் சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையினை வழங்கப்படும் என உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியிருக்கின்றார். அக்லாக் கொலையானது மிகவும் துக்ககரமான நிகழ்ச்சியாகும். முகமது அக்லாக் குடும்பத்தினரின் வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது. பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது மகன் டானிஸின் அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு சார்பில் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் உ.பி. முதல்வர்; தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவதை தடைச் சட்டம் அமலில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இறைச்சியை உண்பதற்கும், பசுவதைக்கும் என்னதொடர்பு உள்ளது. இந்நிலையில், ஐதராபாத் எம்.பியும் ஏஐஎம்.ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதின் ஓவைசி கொல்லப்பட்ட அக்லாகின் இல்லத்திற்கு சென்று அங்கு அவரது மனைவியை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தது மட்டுமல்லாது, மாநில சமாஜ்வாடி அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். 

அதாவது 'இறைச்சிக்காக இந்த தாக்குதல் நடைபெறவில்லை. மதத்தின் பெயரை வைத்து அவர் கொல்லப்பட்டிருக்கிறார். முன்கூட்டியே திட்டமிட்டு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமான தாக்குதல் இது. இந்த சம்பவம் ஒரு விபத்து அல்ல. இந்த தாக்குதல் மதச்சார்பின்மைக்கு எதிரான சிந்தனையை காட்டுகிறது. இந்திய சகோதரத்துவத்துக்கு எதிரான செயல் இதுவாகும்' என அவர் கருத்துரைத்திருந்தார்.

இந்தியாவின் ஆறு மிகப் பெரிய மாட்டிறைச்சி நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகின்றது. உண்மையில் உலகளாவிய ரீதியில் கிறிஸ்தவர்களும், யூதர்களும்தான் அதிகளவில் இறைச்சி சந்தையில் ஈடுபடுகின்றனர் என்பது புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனைத் தொடர்ந்து உலகில் மிகப் பெரிய மாட்டிறைச்சி சந்தையை வைத்திருப்பது பிரேசிலாகும். 

இதையே இந்திய அளவில் நாம் பார்க்கும்போது இந்துக்கள்தான் மிகப் பெரிய அளவில் இறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கின்றனர். இந்த உண்மைக்கு மாற்றமாக, முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்பவர்கள் என்று கூறி அவர்கள் பலவகைகளிலும் துன்புறுத்தலுக்கு இலக்காக்கப்படுகிறார்கள். இது எந்தவகையில் நியாயமாகும்.

இந்தியாவிலிருந்து இறைச்சியை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் அதன் உரிமையாளர்களும் வருமாறு :-

1. அல் கபீர் எக்ஸ்போர்ட்டர் பிரைவேட் லிமிடெட். இதன் முதலாளிகள் : சதீஷ் மற்றும் அதுல் சபர்வால்

2. அரேபியன் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இதன் முதலாளி : சுனில் கபூர்

3. எம்.கே.ஆர். ஃபிரோசன் ஃபுட் எக்ஸ்போர்ட் பிரைவேட் இதன் முதலாளி : மதன் அபோட்

4. பி.எம்.எல். இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் இதன் முதலாளி : ஏ.எஸ். பிந்த்ரா – சண்டிகர், பஞ்சாப்

இவ்வாறு மாட்டிறைச்சி ஏற்றுமதியில் அரபு பெயர்களைக் கொண்டிருப்பதால் முஸ்லிம்களால் நடாத்தப்படுவதாகவும், இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படுவதாகவும் ஒருமாiயை ஏற்படுத்தவே இவ்வாறு மேற்கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. இந்நிறுவனங்களை நடாத்துவது இந்துக்கள்தான் என்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதுதான் இவர்களது நோக்கமாகும். 

அப்படியானல் இறைச்சியை உண்டதற்கு கொல்லப்படுது எந்தவகையில் நியாயமாகும். வியாபாரம் என்று வந்து விட்டால், கொள்கைகளும், மதச்சடங்களும் மறைந்துவிடுமா என்ன? பசுவின் பாலை அருந்தலாம் என்றால் அதன் இறைச்சியை சாப்பிடுவதில் எந்தத்தப்பும் இல்லை என்கிறவர்களும் உண்டு.

மாட்டிறைச்சியை அனைத்துச் சமூகத்தவரும் உண்டதற்கான ஆதாரங்களைக் கொண்டதாக 'மாமிசம் உண்போம் மாநிலம் காப்போம்' என்கிற நூலில் ஏ.ஆர்.ஏ.பிஷ்ர்அல் ஹாபி அவர்கள் எழுதியுள்ளார்கள். அந்நூலின் ஓரிடத்தில் 'இறைச்சிக்காக மிருகங்கள் ஏன் கொல்லப்படவேண்டும்?' என்கிற தலைப்பில் எழுதியுள்ள விடயத்தை சுருக்கமாகப் பார்ப்போம்.

இயற்கையின் அற்புதம் மிகவும் அபாரமானவை. ஆடு, மாடு, ஒட்டகம், மான், மரை போன்றன காலவேறுபாடின்றி இனப்பெருக்கம் செய்கின்றன. ஆடு, மாடு, ஒட்டகம் பண்ணைகளாக வளர்க்கப்படுகின்றன. தினமும் இவை பல்லாயிரக்கணக்கில் வெட்டப்பட்டாலும் அவ்வுயிரினங்கள் அழிந்துவிடுவதில்லை. 

மாறாக யானை, புலி, சிங்கம், கரடி போன்றவைகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டால் அவ்வினங்கள் அடியோடு அழிந்துபோகும் அபாயம் உள்ளதால்தான் மிருகங்களை வேட்டையாடக் கூடாது என்கிற சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிந்திக்கும் மனிதனுக்கு இதில் நல்ல அறிவு உண்டு. அதாவது இரை மீட்கும் பிராணிகள் மனிதனின் உணவுக்காகப் படைக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம். திருக்குர்ஆன், வேதகாமம் பழைய ஏற்பாட்டின் ஆதியாகவும் கூறுகின்றன.

பசுவின் வாழ்வு சுமார் 40வருடங்களாகும். இதில் முப்பது வருடங்கள்வரையில் கன்றுஈனும். ஒருபசு 3வயதில் கன்று ஈன ஆரம்பித்தால் சுமார் 25வருடங்களாகின்றபோது எத்தனை பசுக்கள் இந்த மண்ணில் காணப்படும் என்பதை நீங்களே யூகித்துப்பாருங்கள். ஆடுகளின் பெருக்கம் இதைவிட அதிகமாகும். இவ்வாறு பெருக்கமடையும் மாடு, ஆடுகளை உலகில் மனிதர்கள் உண்ணவே மாட்டார்கள் என்கிற நிலை வந்தால் மாடுகள் கட்டாக்காலிகள்போல உலாவும். இதனால் ஏற்படுகின்ற விபரீதங்களும் மிகவும் கடுமையானதாகவே இருக்கும்.

இலங்கையை உதாரணத்திற்கு எடுத்தால் இலங்கையில் ஒருமில்லியன் பசுக்கள் இருப்பதாகக் வைத்துக் கொண்டால் பிறப்பின் அதிகரிப்புக்காரணமாக 25 ஆண்டுகளில் 123மில்லியன் பசுக்கள் பெருக்கமடைந்திருக்கும். தினமும் ஒருபசு 25லீற்றர் தண்ணீர் அருந்துவதாக இருந்தால் 3.075 பில்லியன் லீற்றல் நீர் தேவைப்படும். இது சுமார் 15பில்லியன் பீப்பாவாகும். ஒருபசுவுக்கு 20கிலோ உணவு தினமும் தேவைப்படும். எனில் 24இலட்சத்தி 600மெற்றிக் தொன் உணவு நாளொன்றுக்கு தேவைப்படும். இவ்வாறு பசுவின் பெருக்கத்தால் நடைபெறும் விபரீதங்களையும் இந்நூலில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய காலத்தினுன் நீர்நிலைகள் மாடுகளால் உறுஞ்சப்பட்டுவிடும், மேய்ச்சல் தரைகளில் புல் இல்லாமல் தரை கட்டாந்தரையாக மாறிவிடும், பற்றைக்காடுகள், சோலைக் காடுகள் எல்லாம் மிருங்களால் சாப்பிடப்பட்டு விடும், மரக்கறி, தானியவகை அனைத்தும் உண்ணப்படும், மரக்கறி உண்பவர்களுக்கு உண்ண எதுவுமின்றி மக்கள் இறந்துபோவர். 

கட்டாந்தரையாக நிலம் மாறினால் காற்றுவீசுகின்றபோது மண்ணரிப்பு ஏற்படும், காடுகள் வனங்கள் அழிந்துவிடும், காடுகள் அழிந்தால் மழைபெய்யாது, நாட்டின் சீதோஷ்ண நிலைமை மாற்றமடையும், எந்தப்பயிரும் தானியமும் இல்லாமல் போனால் மனிதன் செத்துமடிய வேண்டிய நிலை உருவாகும், நாடு பாலைவனமாகும், உணவுத் தட்டுப்பாடு, நீர்த்தட்டுப்பாடு ஏற்படும், நீர் மின்சாரம் தடைப்படும், மின்சாரத்தை நம்பிய தொழிற்சாலைகள் மூடப்படும்.. இவ்வாறாக சுமார் 40 விடயங்களில் இதன் ஆபத்தை நூலாசிரியர் விபரித்துள்ளார். அறிவார்ந்த நிலையில் பார்த்தால் இதன் உண்மைத்தன்மை புலப்படும்.

எனவே, முஸ்லிம்களால் மாத்திரம்தான் மாட்டிறைச்சி புஷிக்கப்படுகின்றது என்கிற நிலைமையை யாரும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதிகளவில் அனைத்து மக்களாலும் உண்ணப்படுகின்ற நிலையில் ஒரு குறித்த வீதத்தினர் தங்களுடைய மதப்போதனைக்கு கட்டுப்பட்டு உண்ணாமல் இருக்கின்றனர். 

இது அவர்களது சுதந்திரம். மாமிசத்தில் இருக்கின்ற போஷாக்குத் தன்மைகளும் அனைவரும் அறிந்தவிடயம். பலபெரியார்கள்;, மதத்தைப் போதித்தவர்கள்கூட தங்களுடைய வாழ்வியலில் மாமிசம் உண்டதற்கான ஆதாரங்களும் உள்ளதாகக் கூறப்படுகின்றது. எது எப்படியிருப்பினும் உயிர்பலி வேறு, உயிர்வதை வேறு என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். இலங்கையிலும் சில அமைப்புக்கள் அண்மைக்காலமாக மாடு அறுப்பதை தடைசெய்யப்பட வேண்டுமென கூக்குரல் இட்டு வருகின்றனர். 

இருந்தாலும் உண்டதற்காக மனிதர்களைக் கொல்வது அதைவிட பாவம் என்று ஏன் இவர்களுக்குத் தெரியாமல் போனது என்பதுதான் கவலையான விடயமாகும். மதத்தின் பெயரால் மனிதத்துவம் சின்னாபின்னமாகக் கூடாது. உலகின் மேம்பட்ட மனிதவர்க்கத்தின் தனித்துவம் அனைவராலும் காப்பற்றப்பட வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.

அட்டாளைச்சேனை மன்சூர்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -