மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் நினைவாக நாளை மறுதினம் (2015-10-31) சாய்ந்தமருதில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் மாநாட்டுக்கான அழைப்பிதழில் கட்சியின் சிரேஷ்ட பதவி நிலை உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கட்சிப் போராளிகளினால் விசனம் தெரிவிக்கப்படுகிறது.
இம்மாநாடு அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில் இடம்பெறுவதால் குறைந்தபட்சம் இப்பிரதேசத்தைச் சேர்ந்த கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்களின் பெயர்கள் அழைப்பிதழில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான ஏ.சி.சமால்டீன் தெரிவித்தார்.
குறிப்பாக கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் உள்ளிட்ட கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை.
அதேவேளை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூவரின் பெயர்கள் இந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் கல்முனையை சேர்ந்த மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பிரதிப் பொருளாளருமான கே.எம்.ஏ.ரஸ்ஸாக் ஜவாதின் பெயர் சேர்க்கப்படவில்லை.
அதேவேளை கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்களின் பெயர் கட்சிப் பதவி அந்தஸ்த்து ஒழுங்கு நிலையை கருத்தில் கொள்ளாமல் கீழ் நிலையில் குறிப்பிடப்பட்டு, அகௌரப்படுத்தப்பட்டிருக்கிரார் என ஏ.சி.சமால்டீன் கவலை தெரிவித்தார்.
கட்சிக்குள் புதிதாக வந்து சேர்கின்ற அரசியல் வாதிகள் முதலில் கட்சியின் யாப்பு, ஒழுக்க நெறிக்கோவை மற்றும் பதவி நிலை அந்தச்த்துகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயத்தை கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கவனத்திற்கு தான் கொண்டு வந்திருப்பதாகவும் சமால்டீன் தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில இளைஞர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்படவில்லை என சில இளைஞர்கள் கவலையடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது..
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்களின் ஏற்பாட்டில் இம்மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
