எம்.ஏ.றமீஸ்-
தென்கிழக்குப் பல்கலைக்கழக இரண்டாம் வருட பெண் மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்காமை பற்றியும் பிற இடங்களில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட விடுதியில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமையினைக் கண்டித்தும் பல்கலைக்கழத்தின் 2012ஃ2013 ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் வருட மாணவர்களால் இன்று(01) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது பற்றிய செய்தியை உடனுக்குடன் எமது இம்போட் மிரர் இணையத்தளத்தில் பார்வையிட்டீர்கள். இதுபற்றிய விபரம்
இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டம் பி.ப.2.30 மணியினையும் தாண்டி இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்திற்கு முன்பாக பதாதைகள் ஏந்தியவாறு பல்வேறான கோசங்களை எழுப்பி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கென நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட விடுதியில் தங்கியிருந்த மாணவியொருவர் நேற்று (30) இரவு குளியலறைக்குச் செல்லும்போது இனந்தெரியாத நபரொருவர் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்ததாகவும் இதன் பின்ன்னர் குறிப்பிட்ட மாணவி கூக்குரலிட்டதன் காரணமாக அந்த நபர் தப்பித்துச் சென்றதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்ட மாணவர்கள் தமக்கு பல்கலைக்கழக வளாகத்தில் விடுதி வசதியினை ஏற்படுத்தித் தருமாறு கோசமிட்டனர்.
நிந்தவூர்ப் பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள விடுதியில் மூவின சமூகங்களையும் சேர்ந்த 41 மாணவிகள் தங்கியிருந்து தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், போதிய பாதுகாப்பு வசதியற்று தினமும் அச்சத்துடனேயே தமது அன்றாடச் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இம்மாணவிகளுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் விடுதி வசதியினை ஏற்படுத்தித் தருமாறு இக்கல்வியாண்டில் பயிலும் ஆண் மாணவர்களால் பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தினரிடம் எழுத்து மூலம் அறிவித்திருந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கும் மாணவர்கள், மாணவர்களின் கோரிக்கைகளை காதில் வாங்கிக் கொள்ளாமல் மாணவர்களை அடிமைச் சமூகமாக எண்ணி சம்பந்தப்பட்ட தரப்பினர் கசக்கிப் பிழிய முற்படுகின்றனர் என மேலும் தெரிவித்
சுமார் 350 இற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக பிரதான வீதி வழியாகச் சென்று பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலூடாக பிரதான வீதியோரம் வரைச் சென்று மீண்டும் நிருவாகக் கட்டத்திற்கு முன்னால் வந்தடைந்து சுமார் 5 மணி நேரம் வரை இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் பெண்களின் விடுதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தித் தருமாறு கோருவதுடன், மிக விரைவில் பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டாம் வருட மாணவிகளுக்கு விடுதி வசதியினை ஏற்படுத்தித் தருமாறும் பெண் மாணவிகள் மீதான துஷ்பிரயோகம் இடம்பெறாமல் தடுக்கும் வகையில் குளியலறை ஊடாக பார்த்துக்கொண்டிருந்த நபரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த பல்கலைக்கழக நிருவாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தனர்.
இன்று பி.ப 3.15 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிருவாகத்தினருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது, எதிர்வரும் ஒருவார காலத்திற்குள் குறிப்பிட்ட பெண் மாணவிகளுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் விடுதி வசதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இக்காலப்பகுதியில் நிந்தவூர் விடுதியில் தங்கியிருக்கும் விடுதி மாணவிகளுக்கு பலத்த பாதுகாப்பு வசதி செய்து தருவதாகவும் வாக்குறுதியளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வந்தது.
இணைப்பு 1 ,2ற்கு....கிளிக்
பல்கலைக்கழக பதிவாளர்; எச்.அப்துல் சத்தார் தெரிவிக்கையில்;
“இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மாத்திரமே அனைத்து வருட கற்கைநெறி மாணவர்களுக்கும் விடுதி வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
பல்கலைக்கழக விடுதி வசதி முதலாம் மற்றும் இறுதி வருட கற்கைநெறி மாணவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது. பல்கலைக்கழகத்தில் விடுதி வசதியை ஏற்படுத்தித் தருமாறு இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் கோர முடியாதென்பதுடன், வெளியிடங்களில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள விடுதி வசதியை இம்மாணவர்கள் சலுகையாக கருத வேண்டும்.
பல்கலைக்கழக மாணவர் பேரவைக்கான தேர்தல் காலமாக இருப்பதால் அதன் பின்னணியிலேயே ஆர்ப்பாட்டமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. விடுதிப் பிரச்சினை தொடர்;பில் அவர்களினால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு முறைப்பாடு செய்யப்படவோ அல்லது மகஜர் கையளிக்கப்படவோ இல்லை.
நியாயமற்ற இந்தக் கோரிக்கையை முன்வைத்து இம்மாணவர்கள் தொடர்;ந்து ஆர்ப்பாட்டத்தை நடத்துவார்களாயின், அவர்களுக்கு தடை விதிக்க வேண்டி ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.
இணைப்பு 1 ,2ற்கு....கிளிக்





