கொழும்பை அண்மித்த மேற்குக் கடற்பரப்பில் அடிக்கடி தென்படும் முதலைகள் காரணமாக பொதுமக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக தெஹிவளை கடற்பரப்பில் காணப்படும் முதலை காரணமாக அப்பகுதி மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கரையோரத்தில் நடமாடவும் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டி கடற்கரையோரமாக பாரிய முதலையொன்று செத்துக் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக இரண்டு நாட்களாக கொள்ளுப்பிட்டி கடற்கரையோரமும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடத் தொடங்கியுள்ளது.
இந்தச்சம்பவங்களின் உச்சகட்டமாக இன்று கொழும்பு காலிமுகத்திடலை அண்மித்த கடற்பரப்பிலும், கல்கிஸ்சையிலும் முதலைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொழுதுபோக்குவதற்காக கடற்கரையோரம் செல்லும் பொதுமக்கள் கடும் அச்சத்தை எதிர்கொண்டுள்ளனர்.
முதலைகளைத் தேடி கடற்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும், இதுவரை எந்தவொரு முயற்சியும் வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
