எழுத்தறிவித்தவன் இறைவனாவான்” என்ற முதுமொழியை அவதானிக்கும் போது எழுத்தறிவுக்கு எத்தகைய மகத்துவம் வழங்கப்படுகின்றது என்பதை நாம் காணலாம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததுதான் எழுத்து. ஆதலால்தான் “எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்” என்பார்கள்.
“கற்கை நன்றே கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே”
“கல்லா ஒருவன் குல நலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகுமே”
“கற்றது கைம்மண்ணளவு
கல்லாதது உலகளவு”
போன்ற குறட்பாக்கள் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கின்றன.
உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காக உலகம் முழுவதும் உலக எழுத்தறிவு தினமாக (World literacy Day) செப்டம்பர் மாதம் 8ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 1965ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் திகதி தெஹ்ரான் நகரில் சர்வதேச கல்வி அமைச்சர் மாநாடு இடம்பெற்றது. குறித்த மாநாட்டில் உலக அளவில் எழுத்தறிவு இன்மையால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி சர்வதேச எழுத்தறிவு தினமாக அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் 1965 ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி யுனெஸ்கோ நிறுவனம் செப்டம்பர் மாதம் 8ம் திகதி சர்வதேச எழுத்தறிவு தினமாக பிரகடனப்படுத்தியது. அதற்கமைய 1966ம் ஆண்டு முதல் எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐ.நா.வின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.
எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவற்றவர்கள் இல்லாத உலகை ஏற்படுத்துவதுமே உலக எழுத்தறிவு தினத்தின் பிரதான நோக்கமாகும்.
கல்விக்கு அடிப்படையாக விளங்கும் எழுத்தறிவு ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையாகும். எழுத்தறிவு அடிப்படைக் கல்வியின் இருதயமாக விளங்குகிறது.
ஒரு சமூகத்தின் உணர்வுகளையும் அவர்களது தேவைப்பாடுகளையும் உணர்த்தும் சாதனமாக நவீன உலகில் பாவிக்கப்படும் இலகுவான கருவியாக திகழ்வது இந்த எழுத்தறிவு.
இன்று பாடசாலைகளில் தாய்மொழியின் முக்கியத்துவம் உணரப்பட்டு அப்பாடத்திற்கான விடயக்கூறுகள், அடிப்படையான மொழித்திறன்களான செவிமடுத்தல், பேச்சு, வாசிப்பு, எழுத்து ஆகிய பரப்புகளின் கீழாக வகுக்கப்பட்டு மொழித்திறன் என்றவாறு வகைப்படுத்தி கற்றல்- கற்பித்தல் செயற்பாடுகளின் போது ஆசிரியர் மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்.
மொழிசார்ந்த அடிப்படையான திறன்கள் விருத்தியடைகின்ற போதுதான் எழுத்துத் திறனும் விருத்தியடைகின்றது.
ஆரம்ப வகுப்புகளில் எழுத்து வேலைகளை ஆரம்பிக்கு முன்னர் கிறுக்குதல், வரைதல் போன்றவற்றுடன் விளையாட்டு செயற்பாடுகளையும் ஒன்றிணைத்தல் பிள்ளையின் உள விருத்தி , உடல் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும்.
தரம் 1 இலிருந்து தரம் 5 வரையான வகுப்புகளில் எழுத்து வேலை படிப்படியாக உயர்ந்து செல்கின்ற அதேவேளை விளையாட்டு வினோதச் செயல்கள் குறைவடைந்து செல்கின்ற அதேநேரம் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற செயற்பாடுகள் மாறாது செல்ல வேண்டும் என்பது 2007ம் ஆண்டு கல்விச்சீர்திருத்தத்தில் கூறப்பட்டது.
இன்று மொழி விருத்தியின் அச்சாணியாகத் திகழ்வது வாசிப்பு பழக்கமாகும். ஒருவரது எழுத்தறிவு பற்றி நாம் பேசும் போது அவரது வாசிப்பு பற்றி நோக்குவதும் மிகவும் பொருத்தமான ஒன்றாகும். அதாவது வாசிக்கும் பழக்கமுடைய மனிதனே முழுமை பெறுகிறான் என்பதற்கேற்ப வாசிப்பு பழக்கமானது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வாசிப்பு பழக்கமானது மாணவர்களிடம் குறைந்து செல்லும் வேகத்தையொத்ததாக ஆசிரிய சமூகத்தவரிடம் சம அளவிலான வீழ்ச்சிப் போக்கு காணப்படுவதை அவதானிக்கலாம்.
தெற்காசியாவுடன் ஒப்பிடும் போது எழுத்தறிவு வீதத்தில் இலங்கை முதலிடத்தில் காணப்படுகிறது. குறித்த பட்டியில் இந்தியாவுக்கு 159 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் எழுத்தறிவு வீத அதிகரிப்பிற்கு 5 தொடக்கம் 14 வரையான வயதெல்லை கட்டாயக் கல்விக்கான வயதெல்லையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையே ஆகும்.
இலங்கையைப் பொறுத்தளவில் சுமார் 92 வீதத்தையுடைய எழுத்தறிவானது உண்மையிலேயே உலகில் உயர்ந்த கல்வியறிவினை தோற்றுவித்துள்ளது. எமது நாட்டு இலவசக்கல்வியின் செல்வாக்கே இதற்கு முக்கிய மகுடம் சேர்த்தது போல் காணப்படுகிறது. இலவசக்கல்வி, கட்டாயக்கல்வி, இலவசப்பாட நூல், இலவச உடை, இலவச உணவு போண்றவைகள் காரணமாக எந்தவொரு பிள்ளையும் பாடசாலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டதன் காரணமாக இந்த நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கின்றபோது நாம் கல்வியில் மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறோம் என்றே கூறலாம்.
இன்று இலங்கையில் எழுத்தறிவு வீதமானது நகர்ப்புறங்களிலேயே முன்னேற்றமடைந்துள்ளது. இலங்கையின் குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத்திணைக்களத்தின் அறிக்கையின் படி நகர்ப்புறங்களில் எழுத்தறிவு வீதம் 95 % ஆகவும் கிராமப்புரங்களில் 93 % ஆகவும் பெருந்தோட்டப்பகுதிகளில் 76 % ஆகவும் காணப்படுகிறது. இலங்கையில் பாலின பிரிவின்படி ஆண்கள் 94 % கல்வியறிவினையும் பெண்கள் 91.1 % கல்வியறிவினையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக எழுத்தறிவு தினத்தில் எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் எழுத்தறிவை பெற்றுக் கொள்ள முடியாமல் போன வயது வந்தோருக்கு முறைசாரா கல்வித்திட்டத்தின மூலம் எழுத்தறிவை போதிக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலையின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை தடுக்க முடியும். எழுத்தறிவு மூலம் அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியும். இது இன, மொழி, வயது,சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
ஊலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன் சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக்கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
இதேவேளை எழுத்தறிவை பெற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணங்களாக உள்ள சமூக நிலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. வறுமைஇ போஷாக்கின்மை, அரசியல் நெருக்கடி, கலாசார பாகுபாடு, அடிமைப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் உலக நாடுகளில் இன்றும் எழுத்தறிவின்மை காணப்படுகிறது.
எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஒரு அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனிதவள அபிவிருத்தி மற்றும் கல்வி செயற்பாடு மற்றும் அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் எழுத்தறிவென்பது உண்ணும் உணவை விடவும் பார்க்கும் கண்ணை விடவும் முக்கியம் பெறுகிறது. கல்வி என்பது பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்து முடித்தவுடன் முடிவதில்லை. அது வாழ்நாள் முழுவதும் திகழ வேண்டும். கல்விக்கு முடிவே கிடையாது.
நஸ்லின் றிப்கா அன்ஸார்,
பிரதி அதிபர்,
கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயம்,
சாய்ந்தமருது.
