அண்மையில் வெளியான மதவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, இதை மேற்கோள் காட்டி பேசிய பிரவீன் தொகாடியா, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுள்ள முஸ்லீம்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் ”தாமதத்திற்கும் முன் செயல்பட வேண்டிய நேரம்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியதாக வெளியிடப்படுள்ள செய்தியில், முஸ்லீம்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அதை கிரிமினல் குற்றமாக ஆக்க வேண்டும். இவர்களுக்கு ரேஷன், வேலை , கல்வி உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் தடை செய்ய வேண்டும்.
திட்டமிட்டு முஸ்லீம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது. இந்த பாப்புலேஷன் ஜிகாத்திற்கு எதிராக நாம் நிற்காவிட்டால், பாரதம் விரைவில் இஸ்லாமியர்களின் நாடாக மாறிவிடும். அரசியல் அழுத்தங்களை தவிர்த்து இரண்டு குழந்தைகள் என்ற விதிமுறையை செயல்படுத்த வேண்டும். அண்மையில் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழித்துக்கொள்வதற்கான ஒரு அழைப்பு” என்று தெரிவித்துள்ளார்.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று 15 மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், மத்திய அரசு செயல்பட்ட விதம் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து ஆய்வு செய்ய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 3 நாள் ஆய்வு கூட்டம் டெல்லியில் துவங்கியுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரவீன் தொகாடியா மேற்கண்டவாறு பேசியுள்ளார். அதேபோல், சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்ட பாரதீய ஜனதா எம்.பி சாக்ஷி மகாராஜ், முஸ்லீம்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து நீடிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.
