சலீம் றமீஸ்-
இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாங்காமம் 10ஏ, 11ஏ, நியூகுன எலக்கம்புர கிராமங்களில் பால் குளிரூட்டும் நிலையங்களை அமைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் கால்நடை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துமாறு கிழக்கு மாகாண சபையில் தனிநபர் பிரேரனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண சபையின் சமமான பிராந்திய அபிவிருத்தி திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் வாங்காமம் 10ஏ,11ஏ,நியூகுன எலக்கம்புர கிராமங்களில் பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைப்பதற்கும், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்ற இக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் கால் நடை வழங்கும் திட்டங்களுக்கு கிழக்கு மாகாண சபையினால் 2014ம் ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டது. அத்துடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் வீரமுனை கிராமத்தில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றினை அமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது. 2014,2015ஆம் ஆண்டுகளில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாங்காமம் இழுக்குச் சேனை 10ஏ, 11ஏ, நியூகுன எலக்கம்புர கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்களுக்கு 400 கால் நடைகள் வழங்குவதற்கென 400 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் இதுவரைக்கும் வாங்காமம், இழுக்குச்சேனை கிராமங்களில் 37 பயனாளிகளுக்கு மாத்திரமே கால் நடைகள் கிழக்கு மாகாண கால் நடை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இக்கிராமங்களில் வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இத்திட்டத்தினை தாமதிக்காது நடைமுறைப்படுத்துமாறு கிழக்கு மாகாண சபையை கோரும் தனிநபர் பிரேரனை ஒன்றினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் எதிர்வரும் 2015.09.22ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
