முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம்...?

எஸ்.எம்.சனசீர்-

பாராளுமன்றத் தேர்தல் நடந்து இன்றுடன் 15 நாட்கள் நிறைவடைகின்றன. இந்த நிலையிலும் விருப்பு வாக்கு விவகாரம் காரணமாக முக்கிய புள்ளிகள் பலர் தோல்வியைத் தழுவியதன் காரணமாக அவர்களில் சிலரை மீண்டும் பாராளுமன்றத்துக்கு உள்வாங்க வேண்டிய நிலைக்கு சில கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.

முக்கியமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான அங்கமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இவ்விடயத்தில் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது. இது தேசிய அரசாங்கத்தை அமைப்பதிலும் இழுபறியை தோற்றுவித்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேசிய அரசை அமைப்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும் அமைச்சரவையை அமைப்பதில் இன்னமும் இறுதி முடிவெதுவும் எட்டப்படாத நிலையையே காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து எத்தனை பேர் அரசுடன் இணைந்து செயற்படப்போகின்றனர் என்பதைக்கூட உறுதியாக கணக்கிட முடியாத நிலையே காணப்படுகின்றது. எப்படி இருப்பினும் அடுத்த இரண்டொரு தினங்களில் அனைத்தும் முடிவுக்கு வந்தேயாக வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டவர்களிடம் இரண்டு விதமான போக்கு காணப்படுகின்றது. ஐ.தே.க.வை சார்ந்தவர்களில் தோல்வி கண்ட எவருக்கும் தேசியப் பட்டியலில் இடமளிக்கப்படமாட்டாது என்ற உறுதியான நிலைப்பாட்டை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொண்டிருக்கிறார்.

அதேசமயம் இணைந்து போட்டியிட்ட கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு அவர்கள் விருப்பப்படி நியமித்துக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. இதன் பிரகாரம் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினரின் இடத்துக்கு புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வி கண்ட எம்.எச்.எம். நவவிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு சகல மட்டத்தினராலும் பாராட்டப் பட்டதொன்றாகவே காணப்படுகிறது.

21 வருடங்களாக புத்தளம் மாவட்ட முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாதிருந்ததை இந்த நியமனத்தின் மூலம் ரிஷாத் பதியுதீன் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டார். கிழக்குக்கோ, வடக்குக்கோ வழங்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதும் எதிர்பார்த்த விதத்தில் இரண்டு இடங்கள் கிட்டாமல் ஒரு இடம் மட்டுமே கிட்டியதால் முரண்பாடுகளைத் தவிர்த்து வடக்கு முஸ்லிம் அகதிகளுக்கு வாழ்வளித்த அந்த மண்ணுக்கு நன்றிக்கடன் தீர்ப்பதாகக் கூட இந்த நியமனத்தை நோக்க முடிகிறது. ரிஷாதின் இந்த நல்லெண்ணத்தை எவரும் தவறாக எடைபோடவே முடியாது.

அனைவருமே ஏகோபித்து வரவேற்க முடிகிறது. அதேநேரம் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இரண்டு தேசியப் பட்டியல் இடம் கிட்டிய நிலை அதனைப் பகிர்வதில் தலைவர் ஹக்கீம் பெரும் சிக்கலை எதிர்நோக்கி இருக்கிறார்.

கிழக்கில் பிரதேச ரீதியில் இரண்டு மூன்று கோரிக்கைகள் முன்மொழியப்பட்டு ள்ளன. அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, கல்முனை, சம்மாந்துறை என்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிக்கு தர வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இதனிடையே முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய அநுராதபுரத்தைச் சேர்ந்த இராவுத்தர் நெயினா முஹம்மதுக்கு வழங்கப்படுவது நியாயமென அம்மாட்ட முஸ்லிம்கள் கேட்டிருக்கின்றனர். அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டுத் தோல்வி கண்ட ஒரே முஸ்லிம் வேட்பாளரான ஷாபி ரஹீமுக்கு ஒருவாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென கம்பஹா மாவட்ட முஸ்லிம் தரப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இதன் விளைவாக தலைவர் ரவூப் ஹக்கீம் பெரும் சிக்கலுக்குள் மாட்டுண்டு போயுள்ளார். கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி புறந்தள்ளப்பட முடியாத ஒருவராக உள்ளார்.

எனினும் அவர் இதுவரை இது தொடர்பில் எதனையும் கூற முற்படவில்லை. கட்சித் தலைமை இவ்விடயம் தொடர்பாக இன்று வரை செயலாளருடன் கலந்துரையாட வில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

டம்மியாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் அவரது சகோதரர் டாக்டர் ஹாபிஸ், சட்ட ஆலோசகர் சல்மான் ஆகியோர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்து வார்களா? அல்லது முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர்பீடம் உடனடியாக தீர்வைக் காணுமா என்பது குறித்து எதனையும் தெரிந்து கொள்ள முடியாத வகையில் விவகாரம் மூடு மந்திரமாகவே காணப்படுகிறது.

இவற்றின் பின்னணியில் இன்னொரு விடயத்தையும் நோக்க வேண்டியுள்ளது. அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல்களில் படிப்படியாக பின்னடைவைக் கண்டு வருகின்றமை யதார்த்தபூர்வமான உண்மையாகும். இதனை மூடி மறைக்க கட்சித் தலை மையும், உயர் மட்டமும் என்னதான் கூற முற்பட்டாலும் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கிலும் சரி ஏனைய பகுதிகளிலும் சரி பின்னடைவையே சந்தித்து வருகின்றது.

இதற்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தலைமைத்துவம் தவறி விட்டதாகவே கூறப்படுகின்றது. தலைமைத்துவத்தின் மீது முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால போராளிகள் கூட நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். கட்சியின் செயலாளரிடம் கட்சியின் நிலை குறித்துக் கேள்வி எழுப்பினால் அவர் கூட எதுவும் கூற முடியாமல் மெளனப் போக்கையே கடைப்பிடிக்கிறார்.

இதனால் மு.கா.வின் எதிர்காலம் அல்லது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து பலத்த கேள்வி எழுந்துள்ளதை காண முடிகிறது.

எனினும் ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கில் காலூண்டத் தொடங்கியுள்ளது. இம்முறை தேர்தலில் அக்கட்சியால் கிழக்கில் ஒரு உறுப்பினரை பெற முடியாது போனாலும் கணிசமான வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

இதன் மூலம் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் இரு கட்சிகளுக்குமே இது சவாலாக அமைந்துள்ளது.

கிழக்கு முஸ்லிம்கள் ரிஷாத்தின் மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்திருப்பதன் காரணமாக மு.கா.வினதும், தேசிய காங்கிரஸினதும் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளதை நன்கு அவதானிக்க முடிகிறது.

இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கின்ற போது நாம் நீண்ட காலமாக கூறிவிடும் ஒரு விட யத்தை மீண்டும் நினைவூட்ட வேண்டியுள்ளது.

முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள் பிரிந்து நின்று தனித்துச் செயற்பட முனைவதன் காரணமாக முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாது போகும் அபாயமே காணப்படுகின்றது.

மு.கா. என்ற மரம் துண்டாடப்பட்டதால் ஏற்பட்ட பரிதாப நிலை தொடர்ந்து முஸ்லிம் சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் குறித்து அனைத்து முஸ்லிம் தலைமைகளும் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை மீண்டுமொரு தடவை வலியுறுத்தி வைக்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -