அதிக அளவில் தொடர் நாயகன் விருதுகளை வென்ற இந்திய சாதனையாளர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர ஷேவாக்கை நெருங்கி விட்டார் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
இந்திய வீரர்களில் அதிக அளவில் தொடர் நாயகன் விருதை வென்ற சாதனையாளர்களாக சச்சினும், ஷேவாக்கும் மட்டுமே உள்ளனர். தற்போது அவர்களுக்கு அடுத்த இடத்தை அஸ்வின் பிடித்துள்ளார். நேற்று இலங்கைக்கு எதிரான தொடரில், அஸ்வின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் அவர் 21 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். அதேபோல 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேவாக்கும் 5 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்
இந்த நிலையில் 28 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அஸ்வின் நேற்று 4வது முறையாக தொடர் நாயகன் விருதை வென்று அசத்தி விட்டார். இன்னும் ஒரு தொடர் நாயகன் விருதை வென்றால் அவர் சச்சின், ஷேவாக் சாதனையை சமன் செய்வார்.
அஸ்வின் மிகக் குறைவான டெஸ்ட் போட்டிகளிலேயே ஆடியுள்ளார். அதிலேயே இந்த அளவுக்கு சாதனை படைத்துள்ளதால், உலக அளவில் பல சாதனைகளை அவர் படைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
அதேசமயம், சர்வதேச அளவில் அதிக அளவில் தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரராக முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார் முத்தையா முரளிதரன். இவர் மொத்தமாக 11 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.
