இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இந்த வருட இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கட் போட்டிகள் அரசியல் காரணங்களுக்காக ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிர்வாக கட்டமைப்பின் மாற்றங்களுக்காக பாகிஸ்தானின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஆறு கிரிக்கட் தொடர்களை நடத்த இணங்கிக் கொண்டன.
இதன்படி அதன் முதல் தொடர்பில் இந்த வருடம் டிசம்பர் மாதமளவில் நடைபெறும் என்று உத்தேசிக்கப்பட்டிருந்தது.
இந்த தொடர் நடைபெறுமா? என்பது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கட் சபை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுசபையிடம் விளக்கம் கோரி கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தது.
எனினும் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அண்மையில் இந்திய பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசர்கள் மட்ட பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டன.
இவ்வாறான நிலையில் இந்த தொடர் இடம்பெறுவதில் நிச்சயமில்லை என்று கூறப்படுகிறது.
