அமைச்ர் ஹக்கீமின் பெருநாள் வாழ்த்துச் செய்தி..
ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தென்படுகின்ற சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒற்றுமையாக, தியாகச் சிந்தனையுடன் செயலாற்ற இந்த நன்நாளில் உறுதி பூணுவோமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஈதுல் அழ்ஹா தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நபி இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை வலியுறுத்தும் ஹஜ்ஜுப் பெருநாளை உலகெங்கிழுமுள்ள முஸ்லிம்கள் வழமை போல பல்வேறு வேதனைகளுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் கொண்டாடுகின்றனர்.
உலகெங்கிழுமுள்ள முஸ்லிம்கள் தாம் சிரமப்பட்டு உழைத்த பணத்தை சேமித்து புனித மக்கா நகருக்குச் சென்று ஹஜ் கடமையை இனிதே நிறைவேற்றுகின்றனர்.
பல்வேறு நாடுகளில் வறிய மக்கள் கூட புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்காக சிறுகச்சிறுக பணத்தை சேமிக்கின்றனர். அந்தளவுக்கு புனித மக்காவுக்கும், புனித மதீனாவுக்கும் செல்வதற்கு முஸ்லிம்கள் ஆர்வம் செலுத்துகின்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில், குறுகிய அரசியல், கட்சி மற்றும் இயக்க ரீதியான வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக வாழ்வதற்கு முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் முன்வர வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அமைச்சர் ஹக்கீமின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்ரப் ஏ சமத்-
கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்து..
உலகம் முழுதும் தியாகத்திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் தனது பெருநாள் வாழ்துக்களை தெரிவித்து கொள்ளும் இந்நேரத்தில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் விட்டுக்கொடுப்புடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் வாழ இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் தான் முன்னின்று செயற்பட உள்ளதாகவும் பிரதி அமைச்சர் தனது பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார் .
அத்துடன் புதிய அரசின் அரசாங்கம் இந்த நாட்டில் வாழும முஸ்லீம் சமுகத்தின் விடிவுக்காக சகல விட்டுக் கொடுப்பையும் அளித்து அவா்கள் அன்றாடம் தமது வாழ்வாதார மத, கலாச்சார பிரச்சினைகளை சமுகமாக தீா்த்து இந்த நாட்டில் ஏனைய சமுகங்களோடு ஒரு இணைப்பு பலாமாக திளிர இந்த நாளில் நான் வேண்டுகின்றேன்.
அபு அலா –
மாகாண சபை உறுப்பினர் நஸீர் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி..
இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான அந்த மாபெரும் தியாகச் சரித்திரம் படைத்த இப்ராஹீம் நபியவர்களின் இறையச்சத்தையும், அவரின் வரலாறு தொடர்பான பல்வேறு சம்பவங்களையும் உணரத்தும் இந்த புனித ஹஜ் தியாகத் திருநாளில் உலக வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகிடைக்க அள்ளாஹ்வை பிரார்த்திக்கவேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் விடுத்துள்ள ஹஜ் பொருநாள் வாழ்த்துச் செய்தியில்,
இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் இப்ராஹீம் நபி (அலை) அவர்களைப்போல் முடியாவிட்டாலும், நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இறைத்தூதர் காட்டிய வழியில் மட்டும் நடந்து, தன்னலமற்ற உணர்வோடும், சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தரில் உயர்வானவர்களாய் வாழ, இத்தியாக திருநாளாம் இந்த ஹஜ்ஜுப் பெருநாளிலே நம் நல்ல எண்ணங்களைப் புதுப்பித்து வாழ்ந்து இன்மையிலும், மறுமையிலும் இறைவனின் அருளைப்பெற்று வாழ நாம் முயற்சிப்போம்.
இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற பலர் இம்முறை ஹரம் சரிபில் ஏற்பட்ட விபத்தொன்றின் மூலம் மரணித்த சம்பவம் உலக முஸ்லிம்களை மட்டுமல்ல எல்லா மதத்தவர்களின் மனதையும் நெகில வைத்துள்ளது. அந்த விபத்தில் மரணித்த எமது உறவுகளையும் இந்நன்னாளில் ஞாபகப்படுத்தி நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டுகிறேன் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஊடகப் பிரிவு-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் விடுத்துள்ள தியாகத்திருநாள் வாழ்த்துச் செய்தி..
புனித ஹஜ் கற்றுத்தரும் தியாக மனப்பாங்கு நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்க இப்பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போம்.
இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் விடுத்துள்ள தியாகத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இஸ்லாத்தின் ஐம்பெறும் கடமைகளில் இறுதிக் கடமையான புனித ஹஜ் ஒற்றுமை மற்றும் தியாகம் ஆகிய இரு பெரும் பண்புகளை நமக்குக் கற்றுத்தருகிறது. அத்துடன் ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் பின்பற்றி ஒழுக வேண்டிய பல படிப்பினைகளை ஹஜ்ஜின் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ளது.
இறை தியாகம், சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, தலைமைத்துவக் கட்டுப்பாடு, பொறுமை, சகிப்புத்தன்மை என மனித நாகரிகத்தின் அத்தனை பண்புகளையும் ஹஜ் போதிக்கிறது.
ஆனால், நாம் அவற்றைக் கடைப்பிடித்து வாழ்வதில் அசமந்தப்போக்குடையவர்களாக இருக்கிறோம். இஸ்லாத்தின் வழிமுறைகளை நாம்; மறந்து செயற்படுவதினாலேதான் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
இஸ்லாம் கற்றுத் தரும் வாழ்க்கை வழி முறைகள் நமது வாழ்வில் சரியாகப் பின்பற்றப்படுமாயின் நம்மை எதிர் நோக்கும் அத்தனை சவால்களுக்கும் முகம்கொடுத்து அவற்றில் வெற்றி காண முடியும்
இந்நாட்டிலும் சர்வதேசத்திலும் நெருக்கடியற்ற நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் நாம் இஸ்லாம் போதிக்கும் வாழ்க்கைப் பண்புகளோடு வாழ இன்னும் தயாராகவில்லை என்பதே மிகக் கவலைக்குரிய விடயமாகும்.
முஸ்லிம்களைக் கொண்டு முஸ்லிம்களை அழிக்கும் சதிகாரர்களின் வலையில் அதன் கதாபாத்திரங்களில் முஸ்லிம்கள் தினமும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றுக்குக் காரணம் இஸ்லாத்தின் வழியில் முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாததுதான்.
கொள்கை கோட்பாடு, அரசியல் என ஒவ்வொரு விடயத்திலும் கருத்து முரண்பாடுகள், வேறுபாடுகள், விட்டுக்கொடுக்காத் தன்மை, சண்டை சச்சரவுகள் என்று முஸ்லிம்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து நின்று செயற்படுவது சதிகாரர்கள் தங்களது முஸ்லிம்கள் தொடர்பான இலக்குகளை இலகுவில் அடைந்து கொள்வதற்கு சாதகமாக அமைந்து விட்டன.
பெருநாள் என்பது புத்தாடை அணிவதும் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பதும் என்ற மரபு வழிகளிலேயே நாம் இன்றும் உள்ளோம். அந் நிலையிலிருந்து விலகி, தியாகத் திருநாள் கற்றுத் தரும் மனித நாகரியத்தின் பண்புகளை இத்தினத்திலும் இதன் பின்னரும் நமது வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். அதை வெளிப்படுத்த வேண்டும்.
சாந்தி, சமாதானம். சகோதரத்துவம், சமத்துவம், மனித நேயம் என்ற நல்ல விழிமியங்கள் இந்நாட்டில் வாழும் சகல சமூகங்களிடமும் உருவாக வேண்டும்.
நல்ல விழுமியங்களோடு வாழும் முன்மாதிரியான சமூகமாக முஸ்லிம்கள் இந்நாட்டில் மிளிர வேண்டுமாயின், நமது வாழக்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் இஸ்லாம் கற்றுத்தரும் நல் வழிகள்; பின்பற்றப்பட வேண்டும். இஸ்லாமிய வாழ்க்கை முறையை நாமும் பின்பற்றி மற்றவர்களையும் பின்பற்ற செய்து ஒற்றுமையுடன் முன்மாதிரிச் சமூகமாக வாழ இத்தியாகத் திருநாளில் பிரார்த்திப்போம்.
அத்துடன், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எனது இதயபூர்வமான தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இப்புனித நாளில் சமூகத்தின் ஒற்றுமைக்காகவும் உலக முஸ்லிம்களின் அவலத்தின் முடிவுக்காகவும் பிரார்த்திக்குமாறு கோருவதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் விடுத்துள்ள தியாத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜபீர் மஹ்றுப்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி..
இஸ்லாமிய வரலாற்றில் இப்றாஹீம் நபியின் தியாகத்தை படிப்பினையாகத் தந்த தியாகத் திருநாளாம் புனித ஹஜ் பெருநாள் தினத்தில் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இதன் மூலம் இப்றாஹீம் நபியின் தியாகத்தை உணர்ந்து கொண்டது மட்டுமல்லாமல், அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தவர்களாக இன்று நாம் பெருநாளைக் கொண்டாடுகின்றோம்.
இந்த இனிய பெருநாள் தினத்தில் எமது சமூகத்தவர்களுடனும், பிற சமூகத்தவர்களுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து இன்ப, துன்பங்களில் பங்கெடுக்கும் உன்னத பணியை செய்ய முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும்.
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள இன்றைய நல்லாட்சியில் முஸ்லிம்கள் பொறுமையுடன் வாழ்ந்து எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கான இருப்பினை பெற பிரார்த்திப்பதோடு எமக்கு முன்னுள்ள சவாலை புத்திசாதுரியத்துடன் எதிர்கொள்ள முனைய வேண்டும்.
இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் முழு உலக பல்லின மக்களுக்கும் பொதுவானதே. இதனை புரிந்து கொண்ட பலர் தமது காழ்ப்புணர்ச்சியினை பல்வேறு கோணங்களில் முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க எத்தனிக்கின்றனர். இதனை முறியடிப்பதற்கு முதலில் முஸ்லிம் சமூகம் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த ஒன்றிணைவின் மூலம் தகுந்த பாடம் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு புகட்டப்பட வேண்டும்.
எமது நாட்டில் நாம் சந்தோஷமாக பெருநாளைக் கொண்டாடுகின்ற இன்றைய நிலையில் உலகின் பல பிரதேசங்களில் பல்வேறு துன்பங்களுடன் எமது சகோதர்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்காக எதிரிகளின் கைகளை முடக்கவேண்டி இரு கையேந்தி நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அஸ்லம் எஸ்.மௌலானா-
மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் பெருநாள் வாழ்த்து..
இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக காத்திரமான வேலைத் திட்டம் ஒன்றின் கீழ் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றினைவோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம் சமூகம் தனது இலக்கினை அடைந்து கொள்வதற்கு சுயநலமற்ற, தூரநோக்கு சிந்தனை கொண்ட மாற்று அரசியல் தலைமைத்துவம் ஒன்றை தற்போது இனம் கண்டிருப்பதானது இலங்கை முஸ்லிம் அரசியல் சிந்தனைத்துவத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றமாகும். அதனை இன்னும் பலப்படுத்த வேண்டிய தேவை இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எவராக இருந்தாலும் தமது குறுகிய அரசியல் லாபங்களுக்காக சமூகத்தின் அபிலாஷைகளை புறமொதுக்கி விட்டு, அந்த சமூகத்தை ஒட்டுமொத்தமாக விலை பேசுகின்ற செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வைக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
நல்லாட்சி மலர்ந்துள்ள சூழ்நிலையில் இந்நாட்டு முஸ்லிம்கள் தாய் மண்ணில் அனைத்து உரிமைகளுடனும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கான வழிவகைகள் வகுக்கப்பட வேண்டும். அதற்காக முஸ்லிம்கள் அனைவரும் இன்றைய ஈகைத்திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம்.
கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் பெருநாள் வாழ்த்து..
நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் கலாசார சூழலில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக முஸ்லிம்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட இப்புனிதத் திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம் என கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
முஸ்லிம் சமூகம் இன்று ஒரு முக்கிய கட்டத்தில் இருக்கிறது. கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மார்க்க ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர். ஆனால் கடந்த ஜனவரி-8 ஆம் திகதியுடன் ஆரம்பமான நல்லாட்சி யுகத்தில் அப்பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளமையை இன்றைய ஹஜ் பெருநாள் தினத்தில் நாம் அனுபவ ரீதியாகக் காண்கின்றோம்.
இத்தகைய அரசியல் சூழலை முஸ்லிம்கள் துஷ்பிரயோகம் செய்து விடாமல் நமது இஸ்லாமிய மார்க்கம் காட்டிய வழியில் அதனை சமூக ரீதியாக சாதகமாகப் பயன்படுத்தி, நமது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக அதனை அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஹஜ் எனும் ஐந்தாவது கடமை நமக்கு கற்றுத் தருகின்ற படிப்பினைகளை நமது வாழ்க்கையில் கடைப்பிடிப்போமாயின் எந்தவொரு விடயத்திலும் நெறி பிறழாமல் ஈமானிய பலத்துடன் எமது செயற்பாடுகள் அமையும் என்பதும் அவை தனிப்பட்ட ரீதியிலும் சமூக ரீதியுலும் நமக்கு முழுமையான வெற்றியை ஈட்டித்தரும் என்பதும் உறுதியாகும்.
நமது சமூகத்தில் இத்தகைய ஓர் உயர்ந்த மாற்றம் உதயமாக இப்புனிதத் திருநாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.




