க.கிஷாந்தன்-
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் வெலிமடை பதுளை பிரதான வீதியில், ஹாலிஎல நகரத்துக்கு அண்மையில் 02.09.2015 அன்று மாலை முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முச்சக்கரவண்டி சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாரதியின் கவனயீனம் காரணமாக விபத்து நேர்ந்துள்ளதாகவும், இவ்விபத்து இடம்பெறும் போது குறித்த முச்சக்கர வண்டியில் 5 பேர் பயணித்துள்ளனர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



