உறவு, நட்பு, கடமை கொண்ட அரசு, இவற்றை அல்லாமல் ஒருவருக்கு உதவுவதற்கு உண்டான இன்னொரு தொடர்பு தான் இந்த அறக்கட்டளை.
அறக்கட்டளை வளர்ச்சியை மனிதாபிமான எழுச்சி என்றே கூறலாம்.
அறக்கட்டளை (பொதுதொண்டு) தினமாக செப்டம்பர் 5 ம் திகதியை ஐ.நா 2012 ல் அறிவித்தது.
பொதுசேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, சிறந்து விளங்கிய அன்னை தெரசாவின் இறந்த தினத்தை தேர்ந்தெடுத்திருப்பது இன்னும் சிறப்பானது.
இந்த தினத்தை முன்னிட்டு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில்,
ஒரு காலத்தில் மனிதாபிமான உதவிகள் மக்களுக்கு அதிகமாக தேவைப்பட்டது.
இரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களும், இடம்பெயர்ந்த அகதிகளும் அதிகரித்ததால் ஒரே நேரத்தில் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அதிக உதவிகள் தேவைப்பட்டது.
அப்போது பொதுதொண்டு நிறுவனங்கள்தான் முக்கிய பங்காற்றியுள்ளன.
எங்கெல்லாம் மனித முகங்கள் வாடியுள்ளதோ அங்கெல்லாம் தொண்டுள்ளம் கொண்ட தன்னார்வலர்களை உதவுவதற்காக, மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை கொண்டு, மக்கள் சார்பாக அழைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மக்களுக்கு இடையிலான உரையாடல், ஒற்றுமை, புரிதலை அடுத்தகட்ட உயர்ந்த நிலைக்கு சேவை உணர்வு கொண்டு செல்கிறது.
இந்த நாளை கொண்டாடுவது பற்றி, அமெரிக்கா விடுத்துள்ள அழைப்பு செய்தியில்;
ஐக்கிய உறுப்பு நாடுகள், சர்வதேச நாடுகள், உள் மாகாண அமைப்புகள், அரசுசாரா அமைப்புகள், அமைப்பு சாரா தன்னார்வலர்கள் எல்லோரும் கலந்து கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
இனி வரும் காலங்களில் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றும் சேவைகளோடு, மக்களுக்கு கல்வியிலும் பொதுபிரச்சனைகளிலும் விழிப்புணர்வு ஏற்படவும் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளது.
மனிதனுடைய வாழ்க்கையே மூங்கிலைப் போல ஒரு கூட்டுமுயற்சியால் எழுந்து நிற்கக் கூடியதுதான். சறுக்களே இல்லாத அளவுக்கு முழுவதும் உச்சமான வாழ்க்கை எந்த மனிதனுக்கும் அமைவதில்லை.
வாழ்வு, தாழ்வு இரண்டையும் கொண்டிருக்கும் இயற்கையின் இலக்கணத்தை சமாளிக்க, மனிதன் கண்ட அணுகுமுறை தான் இந்த உதவிமுறை. அதற்கான ஒரு அமைப்புமுறை இந்த அறக்கட்டளை.
புயல், பூகம்பம், சுனாமி, போர் போன்றவற்றால் ஒரு நாடு பாதிக்கப்படுகிற போது, மற்ற நாடுகள் உதவியுடனும் பொதுசேவை நிறுவன உதவியுடனுமே நிலைமையை சமாளிக்கின்றது.
இந்த பூமியை ஒரு மனிதனாக கருதி, அதில் ஏதேனும் ஒரு பகுதியில் மனிதர்கள் பாதிக்கப்படுவதை தன் உறுப்பு அடிபட்டதாக நினைத்து, தனக்கு மருந்து போட்டுக்கொள்வது போன்ற ஒரு துடிப்பு ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். ஆனால், அது தன்னார்வலர்களிடம் மட்டுமே உள்ளது.
ஆப்பிரிக்காவின் ஹைதி தீவின் மக்கள் உணவில்லாமல் சேற்றை உலர்த்தி சாப்பிடுகிற செய்தி, சகமனிதர்களுக்கு ஏற்பட்ட அவமானமே.
அதுபோன்ற சமயங்களில், கணக்கு பார்க்கும் அரசுகளை பொருட்படுத்தாமல், கருணை கொண்ட தொண்டு நிறுவனங்கள் கூட துயர்துடைக்கலாம்.
சர்வதேச அறக்கட்டளை தினம் கொண்டாடுவதன் மூலம் தொண்டு நிறுவனங்களின் சேவை பற்றியும் மக்கள் தேவை பற்றியும் விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது.
தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சியே, உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வான எதிர்ப்புகளற்ற பாதையாக உள்ளது.
தேவையால் நாடுகள் எல்லைகளால் எப்போதும் பிரிந்தே நிற்கும். சேவையால் தொண்டுள்ளங்கள் தான் எல்லை கடந்தும் கைகோர்க்கும்.
அதனால், உலக அளவில் பொதுசேவை அமைப்புகளுக்கு ஒருங்கிணைப்பு இருப்பது அவசியம். அதேசமயம், அந்த ஒருங்கிணைப்பு எந்த நாட்டின் அளுமைக்கும் உட்படாதிருப்பது ஆணித்தரம்.
அரசு காக்கவும், அழிக்கவும் செய்யும், அறசேவை காக்க மட்டுமே செய்யும். அது வளர இந்நன்னாளில் வாழ்த்துவோம்.