தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தி இருப்பதாக த இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்து பத்திரிகையிடம் கருத்து வெளியிட்டுள்ள தமிழக மண்டபம் அகதி முகாமில் வாழும் தமிழ் அகதிகள்,
இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு தொடர்பில் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய ஏராளம் விடயங்கள் உள்ளன.
அவை அனைத்தையும் ரணில் தீர்த்து வைப்பார் என்று நம்பிக்கை கொள்ள முடியாது. ஏனெனில் அவரும் ஒரு சிங்கள இனத்தவரே. எனினும் ராஜபக்சவின் தோல்வி எங்களுக்கு பெரும் ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் வாழ்வில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை மலரச் செய்துள்ளது.
அத்துடன் தேர்தல் காலத்தில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இனப்பிரச்சினை தொடர்பில் அளித்த வாக்குறுதிகளும் ஓரளவுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.
இருந்தாலும் தற்போதைக்கு எதையும் உறுதியாக சொல்ல முடியாது. நம்பிக்கையுடன் நாங்கள் காத்திருக்கின்றோம் என்று அகதி முகாமில் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
