அட்டாளைச்சேனை பிரதான வீதியில் வைத்து நேற்று முன்தினம் பொலிஸாரை தாக்கி காயமேற்படுத்திய சந்தேக நபர்கள் மூவரை கைது செய்ததாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மூவரையும் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி திருமதி அகீலா முன்னிலையில் அன்றைய தினம் ஆஜர்படுத்திய போது நீதிபதி மூவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நேற்று முன்தினம்(பெருநாள் தினத்தன்று) அக்கரைப்பற்று பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தலைக்கவசம் அணியாமல் ஒரு மோட்டார் சைக்கிளில் 3பேர் சென்றதை அவதானித்த பொலிஸார் அவர்களை நிறுத்துமாறு சைகைகாட்டிய போதும் நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்ற பொலிஸார் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய முற்பட்ட போது பொது மக்களை ஒன்று திரட்டி பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் தர்மரத்ன என்பவர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இன்னும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித் தனர்.
