நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தின் பொது முகாமையாளரை அதே தோட்டத்தை கீழ் பிரிவு பகுதியை சேர்ந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தியுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் 18.07.2015 அன்று மாலை முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி தோட்டத்தில் 100ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக பணி செய்யும் நடவடிக்கையில் 18.07.2015 அன்றும் முன்னெடுத்திருந்தனர்.
18.07.2015 அன்றும் தோட்ட தொழிலாளர்கள் 1 தொடக்கம் 5 கிலோ கிராம் வரையிலான தேயிலை கொழுந்தினையே பறித்துள்ளனர்.
பறிக்கப்பட்ட கொழுந்தினை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக கொட்டியதாக குறித்த பொது முகாமையாளர் டீ.வேதமுத்து நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை செய்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக நாம் டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்ட பொது முகாமையாளர் டீ.வேதமுத்துவிடம் கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்…
பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளம் வேண்டும் என கோரி முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கிடையிலுமான நடத்தப்பட்ட ஆறாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோழ்வியடைந்துள்ள நிலையில் நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கு பின்னர் இப்பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் சில கம்பனிகள் தொழிற்சங்கத்துடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதோடு இன்னும் சில கம்பனிகள் தொழிற்சங்கம் தெரிவித்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக குறித்த ஒரு தொழிற்சங்கம் அறிவித்ததுக்கமைய குறிப்பிட்ட கம்பனிகளின் தோட்ட தொழிலாளர்கள் மெதுவான பணி செய்யும் நடவடிக்கையை கைவிடாமல் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
இதேபோன்று இத்தோட்டத்திலும் மெதுவாக பணி செய்யும் தொழிலாளர்கள் அவர்கள் பறித்த கொழுந்தினை எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பதாக கொட்டியதோடு மெதுவாக பணி செய்த நாட்களுக்கான சம்பளத்தினை உடனடியாக கொடுக்குமாறும் 18 கிலோ கொழுந்து பறித்ததுக்கு இரண்டு நாள் சம்பளத்தினை வழங்குமாறு என்னை மரண அச்சுறுத்தல் விடுத்தனர்.
இதேவேளை 18 கிலோ கிராம் கொழுந்து பறித்தால் ஒரு நாள் சம்பளத்தினையும் 36 கிலோ கிராம் கொழுந்து பறித்தால் இரண்டு நாள் சம்பளத்தினையும் வழங்குவதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்திருக்கின்றது.
18.07.2015 அன்று அதிகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களே என்னை அச்சுறுத்தியதாகவும் ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் இதில் தலையிடவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களின் சிலரின் தூண்டுக்கோள் காரணமாகவே இவ்வாறு தொழிலாளர்கள் செயல்பட்டதாகவும் தான் இவ்விடயத்தில் மனம்நொந்து போயுள்ளதாகவும் மேலும் இவர் தெரிவித்தார்.
அத்தோடு இவரின் பாதுகாப்பு நலன் கருதி நோர்வூட் பொலிஸார் இவரின் இல்லத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இதேவேளை இவ்வாறு முகாமையாளர்க்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தே நபர்களை கைது செய்து அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்தரப்பிடம் கேட்ட போது
இதற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் ஆயிரம் ரூபாவை பெறுவதற்காக மெதுவாக பணி செய்யும் நடவடிக்கையில் ஈடுப்படுமாறும் பறிக்கும் கொழுந்தினை மடுவங்களில் கொட்டுமாறும் அத்தோடு மெதுவாக பணி செய்யும் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தினை தோட்ட உத்தியோகஸ்தர்கள் நிலுவை செய்ய வராத பட்சத்தில் அந்தந்த தோட்டத்தில் வேலை பார்க்கும் கங்காணிமார்களின் மூலம் கொழுந்து நிலுவை செய்யவும் மெதுவாக பணி செய்யும் தொழிலுக்கு வருபவர்களின் பெயர்களை பதிவு செய்து வைத்துக்கொள்ளுமாறும் மாத்திரமே நாங்கள் தெரிவித்திருந்தோம் என அவர்கள் தெரிவித்தனர்.



