எஸ்.எம்.அறூஸ்-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் சாய்ந்தமருதுக்கான தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வும், கருத்தரங்கும் நேற்றிரவு (2015-07-27) இரவு நடைபெற்றது.
வேட்பாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இங்கு வேட்பாளர் எம்ஐ.எம்.மன்சூர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஸ்ட பிரதித் தலைவர் முழக்கம் அப்துல் மஜீத், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், அமீர், பசீர், கட்சியின் அம்பாரை மாவட்ட பொருளாளரும், உயர்பீட உறுப்பினருமான எஹியாகான், தொழிலதிபரும், சமூக சேவையாளருமான செரீப் ஹக்கீம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அத்தோடு வேட்பாளர் எச்.எம்.எம்.ஹரீசுக்கு சாய்ந்தமருது மக்கள் தங்களின் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன் மூன்று வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பதாகவும் பகிரங்கமாக கூறினர்.
வேட்பாளர் எச்.எம்.எம்.ஹரீஸ் உரையாற்றும்போது சாய்ந்தமருது மக்களை எமது கட்சியின் தலைவர் ஹக்கீம் அவர்கள் மிகக்கூடுதலாக நேசிக்கின்றார். சாய்ந்தமருதுக்கு இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று பிரதி அமைச்சுப்பதவியும் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பல அரசியல் அதிகாரங்களை இந்த மண்ணுக்கு கட்சி வழங்கும்.
இன்று பொய்யான விடயங்களை கட்சி மாறியவர்கள் முன்னடுக்கின்றனர். அவர்களின் பொய்ப்பிரசாரம் வெற்றியளிக்காது. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை தொடர்பில் மயில் கட்சியின் தலைவர் இன்று எதுவுமே கூறவில்லை. அவரால் கூறமுடியாது. பாராளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயமாக கிடைக்காது என்றிருக்கின்றபோது அந்தக்கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்பது எதற்காக தங்களது சுகபோகங்களை அடைந்து கொள்வதற்காகத்தான்.
மூன்று முஸ்லிம்களை வெற்றியடையச் செய்யப்போவது முஸ்லிம் காங்கிரஸ்தான். இன்று அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து முஸ்லிம்களின் பலத்தை இல்லாமல் செய்வதற்கே அமைச்சர் ரிசாத் அம்பாரையில் களமிறங்கியுள்ளார். அரசியல் அதிகாரத்தை அமைச்சர் ரிசாத்திற்குக் காட்டியது நமது முஸ்லிம் காங்கிரஸ்தான். அதனை அழிப்பதற்கு தனது பண பலத்துடன் வந்துள்ளார். அவரின் பணம் என்ன அதிகாரம் என்ன எதுவுமே அம்பாரை மாவட்ட மக்கிகளிடம் எடுபடாது என்றார்.



