வேலியே பயிரை மேயும் வேதனை- மசூர் மௌலானா

நல்லாட்சியிலும் முஸ்லிம்களின் மனதை புண்படுத்துகிற சம்பவங்கள் ஓய்வதாயில்லை. ஒரு மதத்தின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற ஸ்டிக்கர் ஓட்டுவதே இந்த நாட்டின் முஸ்லிம் குடி மகனுக்கு விலக்கப்பட்ட விடயம் என வாதிட்டால்- இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கான மற்ற உரிமைகள், சலுகைகள் பற்றி விலாவாரியாகச் சொல்லத் தேவையில்லை. 

இனத்துவ ரீதியிலான பாகுபாடு, மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல், மத நிந்தனை, மத அடையாளங்களை கேலி செய்தல் என அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடைபெறும் வன்முறைகள் அதிகரித்துள்ளன. 

மதங்களையும், சக இனங்களையும் புண்படுத்துவோரை கைது செய்யவென நாட்டில் ஒரு பொலிஸ் குழு நியமிக்கப்பட்டும், சட்டம் இயற்றப்பட்டிருந்த போதிலும் அண்மைக்காலமாக ’வேலியே பயிரை மேய்வது போல’ - சட்டமும், அதிகாரமும், ஆணையும் தன்னகத்தே கொண்டவர்களாலேயே முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். 

மாத்தளை, கொட்டகொட பிரதேசத்தில் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என ஒரு முஸ்லிம் குடும்பஸ்தரின் ஆட்டோவில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை சிவில் உடை தரித்த பொலிஸார் இனவாத சிந்தனையுடன் அகற்றியது நாட்டில் முஸ்லிம்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு துயர நிகழ்வாக பதியப்பட்டிருக்கிறது.

இலங்கைக்கு அரபு நாடுகளின் உதவி தேவை. இலங்கையை அபிவிருத்தியின் உச்சத்திற்கு அழைத்து சென்றது அரபு நாடுகளாகும். அதிலும் குறிப்பாக சவூதி அரேபியா இலங்கையின் வளர்ச்சியில் இன்றும் பாரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

ஆனால், இன்று இலங்கையில் மழைக்கு முளைத்த காளான் போல உருவெடுத்திருக்கும் இனவாதிகளுக்கு அரபு நாட்டின் பணமும், சேவைகளும் மட்டுமே தேவையாயிருக்கிறது. 

அரபு என்பது ஒரு மொழியே தவிர அது மார்க்கமில்லை. ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்பது உலகப் பொது மறையின் உன்னத வசனம். அதனை யாரும் உச்சரிக்கலாம். 

ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகனுக்கு தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கும், அதனை வழிபடுவதற்கும், பிறருக்கு எத்தி வைப்பதற்கும் பூரண சுதந்திரமிருக்கிறது. 

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கூட முஸ்லிம்கள் தமது தன்னிச்சையான மத உணர்வுகளை அனுபவிக்கையில், பல்லின மக்கள் வாழுகிற குட்டித் தீவில் இனத்துவ ரீதியிலான குழப்பங்களை ஏற்படுத்துகிற குள்ள நரிகளை முஸ்லிம்கள் வெகு விரைவில் அடையாளம் காணுதல் அவசியமாகும். 

இஸ்லாம் அமைதியையும், ஒற்றுமையையும் நேசிக்கும் உன்னத மார்க்கமாகும். புனித மார்க்கத்தில் பிளவுகளுக்கும்- பிரிவினைவாதத்திற்கும் அறவே இடமில்லை. முஸ்லிம்கள் மறுமையை நோக்கிய பயணத்தை வெகுவாக நம்புகின்றவர்கள். நாடு பிடிக்க வந்தவர்களல்ல என்பதை இனவாதிகள் உணர வேண்டும். 

ஒரு சிறந்த இஸ்லாமியன் எப்போதும் இனவாதியாக இருக்க மாட்டான். இலங்கையில் முஸ்லிம்கள் சகோதர இனத்தாரின் மத உணர்வுகளுக்கு மிகுந்த மதிப்பளித்து வருவது வெளிப்படை உண்மையாகும். இருந்த போதிலும், குறித்த ஒரு சாரார் முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழ்வது வேதனைக்குரியதாகும்.

குறிப்பாக, எதிர்வரும் காலங்களில் முஸ்லிம்களுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. அதற்கு இவ்வாறான சிறு சிறு சம்பவங்கள் கட்டியம் கூறுகின்றன. இனவாதம் எனும் மூலதனம் கொண்டே இன்று இலங்கையில் அரசியல் களம் சூடு பிடிக்கிறது. 

முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு நாடெங்கிலும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. நாட்டின் முக்கிய பதவிகளில் உள்ள தலைவர்களுக்கு இதனை தடுப்பது பெரிய விடயமில்லை என்றாலும், அவர்கள் அது பற்றி அலட்டிக் கொள்வதில்லை. காரணம், பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்துவதே நாட்டுத் தலைவர்களின் முக்கிய நோக்கமாய் இருக்கிறது. 

எனவே, முஸ்லிம்களின் எதிர்காலம் சிறப்பாய் அமைய வேண்டுமென்றால் எமது சமூகம், எமக்குள்ளான உள்ளக முரண்பாடுகளை களைந்து ஐக்கியப்பட வேண்டும். 

அதுவே, எம்மை எதிர்வரும் காலங்களில் பலமுள்ள சக்தியாக இனம் காட்டும். சவால்களை எதிர்கொள்ளக் கூடிய திராணியை வளர்க்கும். அதற்கு நாமும் நமது அரசியல் தலைவர்களு ஓரணியில் திரள வேண்டும்.


ஊடகப்பிரிவு
அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
சமூக சிந்தனையாளர்
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -