ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று வியாழக்கிழமை (02) காலையில் ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்றது.
இதில் ஐ.தே.க தவிசாளர் மலிக் சமரவிக்கிரம, பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவது பற்றி ஆராயப்பட்டதாக தெரியவருகிறது. இப்பேச்சுவார்த்தை நம்பிக்கையூட்டுவதாகவும், திருப்தியளிப்பதாகவும் அமைந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் பிரதிநிதிகளாக அஷ்ஷெய்க் நஜா முஹம்மத், சிராஜ் மஹ்ஷுர் ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை வியாழன் பிற்பகல் அவரது இல்லத்தில் சென்று சந்தித்து எதிர்வரும் தேர்தலில் கருத்தொற்றுமையுடனும், இணக்கப்பாட்டுடனும் செயலாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் கலந்துரையாடியுள்ளனர்.
இதில் கல்முனை முதல்வரும், முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான நிசாம் காரியப்பரும் பங்குபற்றியுள்ளார்.
இதேவேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடக் கூட்டம் நேற்று இரவு தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நடைபெற்று இதன் போது இது தொடர்பில் பேசப்படும் என்று எட்டப்பட்டது.
ஆனால் குறித்த உயர்பீடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்று ஒரு தரப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்று இன்னொரு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இவ்வாறான நிலைமைகளையடுத்து இந்த விடயத்தை தனித் தனியாக ஆராய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த கட்சியின் அரசியல் பீட உறுப்பினர்களையும் மாவட்ட ரீதியாக தனித் தனியாக சந்தித்து அவர்களது கருத்துகளைப் பெற்று பின்னர் ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து தீர்மானிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி இலவ்வாறான சந்திப்புகளை எதிர்வரும் இரண்டொரு தினங்களில் ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டு உயர் பீடம் முடிவின்றி நிறைவடைந்தது.
